fbpx

சிறப்புடன் நடைபெற்றது “தாமோதர தீபத் திருவிழா” !

நவம்பர் 12, 2019 –  “தாமோதர தீபத்திருவிழா” மதுரை மற்றும் திருநெல்வேலி  இஸ்கான்  கோயில்களில் இவ்வருடம் அக்டோபர் 13ம் தேதி முதல் நவம்பர் 12 வரை நடைபெற்றது.

ஒரு மாத காலம் நடை பெற்ற இவ்விழாவில் ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி மற்றும் ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பலராமர் “தாமோதர தீப அலங்காரத்தில்” எழுந்தருளினர். சுவாமி சன்னதி முழுவதும் நெய் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  ஏராளமான பக்தர்கள் கிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டினர்.

விழாவின் சிறப்பம்சமாக என்னவென்றால், இவ்விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவரும் தங்கள் கரங்களால் தாங்களே நேரடியாக பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டினர்.  

“தாம” என்றால் கயிறு. “உதர” என்றால் வயிறு. பகவான் ஸ்ரீகிருஷ்ணரை, அன்னை யசோதா தேவி கயிற்றால் உரலில் கட்டிய நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் பொருட்டு இந்தத் “தமோதர தீபத் திருவிழா” கொண்டாடப்படுகிறது.  இந்நிகழ்ச்சி நடந்த இடமும் , கிருஷ்ணர் வளர்ந்த இடமுமான டெல்லிக்கு அருகில் உள்ள கோகுலத்தில் இவ்விழா ஒரு மாத காலம் அனுசரிக்கப்படுகிறது.  உலகம் முழுவதுமுள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில்களிலும், கோகுலத்தில் கொண்டாடப்படுவதைப் போல ஒரு மாத கால காலம் இவ்விழா அனுசரிக்கப்படுகிறது.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் காலிய நாகத்தின் மீது நடனமாடியது, நரகாசுரனை வதம் செய்தது, கோவர்த்தன கிரி மலையை சுண்டு விரலால் தூக்கி குடையாகப் பிடித்தது உள்ளிட்ட ஸ்ரீகிருஷ்ணரின் பெரும்பாலான தெய்வீக லீலைகள் இம்மாதத்தில் தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தீப ஆரத்தியின் போது கோகுலத்தில் பாடப்பெறும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் குழந்தைப் பருவ லீலைகள் நிறைந்த புகழ் பெற்ற பாடலான “தாமோதர அஷ்டகம்” என்ற  பாடல் பாடப்பெறும். இப் பாடல் கேட்போரின் மனதிற்கு மிகவும் இனியதாக  அமையும்.  அதுமட்டுல்லாது, தாமோதரரான ஸ்ரீகிருஷ்ணரை இப்பாடல் மிகவும் கவரக் கூடியது. 

வேத சாஸ்திரங்கள், “யார் ஒருவர் தினசரி நெய் விளக்கு தீபம் காட்டுகிறாரோ அவரிடமிருந்து பல லட்சக்கணக்கான கல்பங்களில் செய்யப்பட்ட  பாவங்கள் கூட  நீங்கி விடுகின்றன” என்று  குறிப்பிடுகிறது.

அடுத்த வருடம் 2020 இல் அக்டோபர் 31 முதல் நவம்பர் 30 வரை தாமோதர தீபத்திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *