– திருநெல்வேலியில் பலராம் பூர்ணிமா நடைபெற்றது…
ஆகஸ்ட் 15, 2019 – பகவான் ஸ்ரீபலராமரின் அவதார திருநாளான பலராம் பூர்ணிமா திருநெல்வேலி இஸ்கான் ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பலராமர் திருக்கோயிலில் சிறப்புடன் நடைபெற்றது.
விழாவின் சிறப்பாக பலராமர் நீலநிற பட்டு உடுத்தியும், கிருஷ்ணர் மஞ்சள் நிற பட்டு உடுத்தியும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
தொடர்ந்து மஹா அபிஷேகம் நடைபெற்றது. மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, சின்னமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
விழாவில் பலராமரின் சிறப்பு குறித்து, இஸ்கான் தென் மண்டலச் செயலாளர் திரு.சங்கதாரி பிரபு அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
ஸ்ரீபலராமர், முழுமுதற்கடவுளே ஆவார். கிருஷ்ணர் தோன்றும் போதெல்லாம் பலராமரும் கிருஷ்ணரின் சகோதரராக தோன்றுவது வழக்கம். சில நேரம் மூத்தவராகவும், சில நேரம் இளையவராகவும் தோன்றுவார். கிருஷ்ணரும் பலராமரும் எல்லோரையும் வசீகரிப்பவர்கள் ஆவர். ஒரே வித்தியாசம் என்னவென்றால் கிருஷ்ணர் கார்மேக நிறமுடையவர். பலராமர் வெண்மை நிறம் உடையவர்.
ஸ்ரீபலராமர், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் தெய்வீக அழகிற்கு அவதாரமாக விளங்கக் கூடியவர் ஆவார். மேலும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் எல்லா அவதாரங்களிலும் பலராமரும் உடன் தோன்றி எல்லா விதத்திலும் கிருஷ்ணருக்கு சேவை செய்வார். பகவான் ஸ்ரீராமச்சந்திரர் அவதரித்த போது, அவருக்கு இளையவராக ‘லெக்ஷ்மணராக’ சேவை புரிந்தார். மேலும் கலியுகத்தில் ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவுடன், நித்யானந்த பிரபுவாக அவதரித்து சேவையாற்றினார். கிருஷ்ணரின் ஆனந்தமான ஆன்மீக லீலைகளில் அவரைத் திருப்திபடுத்த பலராமர் தன்னை புனிதஸ்தலம் விருந்தாவனமாக விரிவுபடுத்திக் கொள்கிறார். மேலும் கிருஷ்ணர் பயன்படுத்தும் கிரீடம், மெத்தை, துணி மணிகள், ஆசனம், அணிகலன்கள் உள்ளிட்ட அனைத்து ஆடை ஆபரணங்களும் பலராமரின் விரிவாக்கமே ஆகும். பலராமரின் சக்தியைப் பற்றி ஸ்ரீலபிரபுபாதா அவர்கள், கிருஷ்ணர் ஞானம் என்ற வாளை நமக்கு அருளியுள்ளார். ஒருவர் தனது ஆன்மீக குருவிற்கும், கிருஷ்ணருக்கும் சேவை செய்யும் போது, ‘கிருஷ்ண உபதேசங்கள்’ என்ற அந்த வாளை தாங்குவதற்குரிய பலத்தைத் பலராமர் தருகின்றார்”. நித்யானந்தரும் பலராமரே ஆவார். ஆகவே ஒருவர் கிருஷ்ணரிடமிருந்து ஞானம் எனும் வாளை ஏற்றுக் கொண்டு, பலராமரின் கருணையால் பலத்துடன் திகழ வேண்டும்” என்று கூறுகிறார்.