– ‘கிருஷ்ண அமுதம்’ * ஆகஸ்ட் 2019 –
1977. இஸ்கான் கிருஷ்ண பலராம் ஆலயம். விருந்தாவனம். நான் விருந்தாவனத்தில் உள்ள இஸ்கான் ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பலராமர் கோயிலில் பூஜாரியாக சேவை செய்து கொண்டிருந்தேன். அச்சமயம் ஸ்ரீலபிரபுபாதாவின் உடல் நலம் மிகவும் குன்றியிருந்ததால் விருந்தாவனத்தில் தொடர்ந்து தங்கியிருந்தார். அப்போது ஸ்ரீலபிரபுபாதா, தினமும் ஒரு சக்கர நாற்காலியில் வந்து கிருஷ்ண பலராமரை தரிசப்பது வழக்கம். தரிசனத்திற்கு பிறகு ஸ்ரீஸ்ரீராதா ஷியாம் சுந்தர் சன்னதி முன்பாக உள்ள திறந்த வெளியில் உள்ள தமால மரத்தின் அடியில் சிறிது நேரம் அமர்ந்திருப்பார்.
அப்படி அமர்ந்திருக்கையில் பொதுவாக ஸ்ரீலபிரபுபாதா கைகளை கூப்பியவாறு கிருஷ்ணரிடம் பிரார்த்திக் கொண்டிருப்பார். அப்போது குருகுல மாணவர்கள் ஸ்ரீலபிரபுபாதாவிற்காக கீர்த்தனை செய்வர். இப்படியாக தினமும் நடக்கும். ஒருநாள் அப்படி ஸ்ரீலபிரபுபாதா தமால மரத்தின் அடியில் அமர்ந்திருந்த போது, நிறைய இந்தியர்கள் ஸ்ரீலபிரபுபாதா அருகில் வந்து ஸ்ரீலபிரபுபாதாவை தரிசனம் செய்ய விரும்பினர். ஆனால் பிரபுபாதாவின் மேற்கத்திய சீடர் ஒருவரோ, அவர்களை ஸ்ரீலபிரபுபாதா அருகில் வரவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தார்.
ஸ்ரீலபிரபுபாதாவிற்கு சிரமம் ஏற்பட்டு விடுமோ என்று எண்ணி அவர் அப்படிச் செய்தார். ஆனால் பிரபுபாதா இதனை கவனித்து விட்டார். ஸ்ரீலபிரபுபாதா, அந்த சீடரை அழைத்து, என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அந்த மேற்கத்திய சீடர், இவர்கள் எல்லோரும் அருகில் வந்து, தங்களின் தரிசனம் பார்த்து, தங்களின் பாதங்களை தொட்டு வணங்க விரும்புகின்றனர். இது தங்களுக்கு சிரமம் விளைவிக்கும் என்பதால் நான் அவர்களை தடுத்தேன்” என்று கூறினார்.
ஆனால் பிரபுபாதாவோ, கூடாது. ஏன் இப்படிச் செய்கிறாய்? இந்தியர்களுக்கு ஒரு சாதுவை எப்படி மதிக்க வேண்டும் என்பது தெரியும். உங்களுக்கு அது தெரியாது. ஆனால் அது அவர்களுக்கு தெரியும். ஆகவே அவர்கள் என் அருகில் வந்து என்னைப் பார்க்க விரும்புகின்றனர். அவர்களை தடுக்க வேண்டாம். அவர்கள் வரட்டும்” என்றார்.
பிறகு அந்த சீடர் கூடியிருந்தவர்களிடம், எல்லோரும் வாருங்கள்” என்று கூறினார். அனைவரும் மகிழ்ச்சியுடன் பிரபுபாதா முன்பாக வந்தனர். பிரபுபாதா தன் கரங்களை கூப்பி வரவேற்றார். அவர்கள் அனைவரும் பிரபுபாதாவின் வெகு அருகில் வந்து தரிசித்து வணங்கி மகிழ்ச்சியுடன் சென்றனர். பிரபுபாதா அனைவரிடமும் மிகுந்த கருணையுடன் இருந்தார். உடல்நலம் குன்றியிருந்த போது கூட அவர் அனைவரது நலனையும் விரும்பினார். சாதுவின் தரிசனத்தை பெறுவதன் மூலம் அவர்கள் தூய்மையடைந்து நன்மையடைய விரும்பினார்.
– ஸ்ரீலபிரபுபாதாவின் சீடர் திரு.ததிபக்ச பிரபு அவர்கள் கூறியதிலிருந்து . . .
Reference: SPF Interviews/www.srilaprabhupada.org
இந்தக் கட்டுரைகள் அனைத்தும் ‘கிருஷ்ண அமுதம்’ மாத இதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. ‘கிருஷ்ண அமுதம்’ – இஸ்கான் மாத இதழ் ஆகும். கிருஷ்ண அமுதம் மாத இதழ் உங்கள் இல்லம் தேடி வர சந்தாததாரர் ஆவீர்.
விபரங்களுக்கு இஸ்கான் மதுரை அல்லது திருநெல்வேலி கோயிலை தொடர்பு கொள்ளவும். அல்லது 72 00 11 00 52 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.