fbpx

கலியுக விசேஷம் “ஹரே கிருஷ்ண” மஹா மந்திரமே!

கிருஷ்ண அமுதம் * ஏப்ரல் 2017 –

நம் காலம் கலி காலம்

நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலிகாலமாகும். கலி என்றாலே சண்டை சச்சரவுகள்  நிரம்பியது என்று பொருள். கலி காலம் அனைத்துக் கேடுகளும் நிரம்பியதாக உள்ளது.

ஸ்ரீமத் பாகவதம் தொகுத்தளிக்கும் கலியுகத்தின் கேடுகள்

ஸ்ரீமத் பாகவதத்தில் கலி காலத்தின் கேடுகள் மிகத் தெளிவாக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. கலியுகத்தில், மக்கள் அல்ப ஆயுசை உடையவர்களாகவும், சண்டை, சச்சரவு நிரம்பியவர்களாகவும், மந்தமானவர்களாகவும், தவறாக வழிநடத்தப்படுபவர்களாகவும், துரதிர்ஷ்டசாலிகளாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக எப்போதும் சஞ்சலம் நிரம்பியவர்களாகவும் இருக்கிறார்கள்” (ஸ்ரீமத் பாகவதம் 1.1.10)

கலியுகத்தின் ஆதிக்கத்தின் காரணத்தால், தர்மம், சத்யம், தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள், பலம், ஞாபக சக்தி ஆகியவை அனைத்தும், அனுதினமும் குறைந்து கொண்டே வரும். கலியுகத்தில், செல்வம் மட்டுமே, நற்பிறப்புக்கும், நன்னடத்தைக்கும், நற்குணங்களுக்கும் அடையாளமாகக் கருதப்படும். பலத்தை அடிப்படையாகக் கொண்டே, தர்ம, நியாயங்கள் நிலை நிறுத்துப்படும்.

வெளிக் கவர்ச்சி மட்டுமே தாம்பத்திய உறவுக்கு காரணமாய் அமையும். வஞ்சகமே, தொழிலின் வெற்றிக்கு அடிப்படையாய் அமையும். பெண்மையும், ஆண்மையும், உடலுறவுத் திறமையால் மட்டுமே தீர்மானிக்கப்படும். பூணூல் அணிந்து இருப்பதால் மட்டுமே ஒருவன் பிராமணனாய் அறியப்படுவான்.

வெளி வேசங்களால் மட்டுமே, ஒருவனுடைய ஆன்மிக நிலை உறுதிப்படுத்தப்படும். இதே அடிப்படையில், மக்கள் ஒரு ஆன்மிக அமைப்பிலிருந்து, மற்றொன்றுக்கு மாறுவார்கள். வாழத் தேவையானவற்றை ஒருவன் போதுமான அளவு சம்பாதிக்காவிட்டால், அவனுடைய தகுதி கேள்விக்கு இடமாகி விடும். வார்த்தை ஜாலங்களில் திறமையானவனே பண்டிதன் எனக் கருதப்படுவான்.

வறுமையில் வாடுபவன், சாது அல்ல எனக் கருதப்படுவான். கபட நாடகம் ஆடுபவன் சாதுவாகக் கருதப்படுவான். வார்த்தை ஒப்பந்தத்தினால் மட்டுமே, திருமணம் நிச்சயிக்கப்படும். வெறும் ஸ்நானம் மட்டுமே, உடலுக்கு தூய்மையும், அலங்காரமும் எனக் கருதப்படும்.

தூரத்திலுள்ள நீர்த்தேக்கம் புனிதத் தலமாகக் கருதப்படும். முடி அலங்காரம், அழகாகக் கருதப்படும். வயிற்றை நிரப்புவதே வாழ்வின் இலட்சியமாய் இருக்கும். துஷ்டத்தனமுள்ளவன், சத்தியவானாகக் கருதப்படுவான். குடும்பத்தை நிர்வகிக்க இயன்றவன் திறமைசாலியாகக் கருதப்படுவான். புகழுக்காக மட்டுமே, தர்மக் கொள்கைகள் பின்பற்றப்படும்.

இவ்வாறு, துஷ்டர்கள் நிரம்பிய இந்த பூமியில், பிராமண, சத்ரிய, வைஷ்ய, சூத்திர இவர்களுள் யாராயிருந்தாலும், யார் பலசாலியோ அவன் மன்னன் ஆவான்.

சாதாரண திருடர்கள் போல் நடந்து கொள்ளும் இத்தகைய பேராசை மிக்க, கருணையற்ற மன்னர்களிடம் உடைமைகளையும், மனைவியையும் இழந்து மலைகளுக்கும், காடுகளுக்கும் மக்கள் ஏகுவர்.

பஞ்சத்தாலும், வரியாலும் வாடும் மக்கள், இலை, வேர், மாமிசம், தேன், பழங்கள், மலர்கள், விதைகள் இவற்றை உண்டு உயிர் வாழ்வர். பஞ்சத்தால் இவ்வாறாக முற்றிலும் அழிந்து படுவர். குளிர், காற்று, வெப்பம், மழை மற்றும் பனி இவற்றால் மக்கள் பெரிதும் துன்புறுவர். மேலும் சண்டை, சச்சரவுகள், பசி, தாகம், நோய், கடும் மனக்கவலை இவற்றாலும் கடும் வேதனை அடைவார்கள்.

மக்களின் ஆயுட்காலம் ஐம்பது வருடங்கள் ஆகி விடும். கலிகால முடிவில் அனைத்து ஜீவராசிகளின் உடலும் சிறுத்து விடும். வர்ணாஸ்ரம தர்மம் நஷ்டமடையும். வேதப் பாதை மறைந்து, நாஸ்திகமே மதமாகும்.  மன்னர்கள் பெரும்பாலும் திருடர்களாய் இருப்பார்கள். திருட்டும், பொய்யும், வேண்டாத அராஜகமும் மக்களின் தொழிலாகி விடும். அனைவரும் சூத்திரர்கள் நிலைக்குத் தாழ்வர். பசுக்கள், ஆடுகள் போல் ஆகி விடும். ஆஸ்ரமங்கள், சாதாரண வீடுகள் போலாகிவிடும். குடும்ப உறவுகள், திருமண பந்தத்திற்கு அப்பால்  விரியாது. செடிகளும், மூலிகைகளும் மிகச் சிறியதாகி விடும். மரங்கள், சமீ மரங்களைப் போல் குள்ளமாகிவிடும். மேகங்கள், மின்னல்கள் நிறைந்தவையாய் இருக்கும். வீடுகள், தெய்வ பக்தியற்றவையாய் இருக்கும். மனிதர்கள், கழுதைகள் போல் ஆவர்” (ஸ்ரீமத் பாகவதம் 12.2.1-16).

கேடான கலி காலத்திலும் ஓர் விசேஷம்?

ஸ்ரீமத் பாகவதம் மேலே விவரிக்கும் கலியின் அனைத்துக் கேடுகளும், இந்நாளில் மனித சமுதாயத்தில் தெள்ளத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்து விட்டது. மக்களுடைய வாழ்க்கை முற்றிலும் நரகமாகிக் கொண்டிருக்கிறது. இப்பூமியில் பிறவி எடுத்து விட்டோம், அதுவும் கலி காலத்தில் பிறவி எடுத்துள்ளோம். இக்கலியின் தாக்கத்திலிருந்து விடுபட என்ன தான் வழி?

இவ்வழியையும் ஸ்ரீமத் பாகவதமே காட்டுகிறது. கலி காலம் இத்தனை கேடுகள் நிரம்பியதாக இருந்தாலும், கலி காலத்தில் ஒரு விசேஷம் உள்ளது என இதே பாகவதம் ஆறுதலாக உரைக்கிறது. அது என்ன? ‘கிருஷ்ண கீர்த்தனம்’ தான் அது. பகவான் நாமத்தை உச்சரிப்பதாலேயே, ஒருவர் கலியின் கேடுகளில் இருந்து மட்டுமல்ல, இந்த உலக பந்தத்தில் இருந்தும் விடுபட்டு, பகவானை அடையலாம் என பாகவதம் உறுதி செய்கிறது (ஸ்ரீமத் பாகவதம் 12.3.51).

கலி யுகத்தின் கேடுகள் அனைத்தையும் நாசம் செய்வது ஹரி நாமம்.

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

என்ற பதினாறு வார்த்தைகள் கொண்ட இந்த மந்திரம் கலியின் அத்தனை கேடுகளையும் நாசம் செய்யக் கூடியது. இதை விட உயர்ந்த உபாயங்கள் வேறெதுவும் இல்லை என்று சர்வ வேதங்களிலும்  காணப்படுகிறது” என்று கலி சந்தரன உபநிஷத்” இக்கருத்தை உறுதிப் படுத்துகிறது. ஆகவே கலியின் கேடுகளில் இருந்து விடுபட ஒரே வழி ஹரே கிருஷ்ண” மஹா மந்திர உச்சாடனமே.
* * *
Ref: Srimad Bhagavatam

இந்தக் கட்டுரைகள் அனைத்தும் ‘கிருஷ்ண அமுதம்’ மாத இதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. ‘கிருஷ்ண அமுதம்’ – இஸ்கான் மாத இதழ் ஆகும். கிருஷ்ண அமுதம் மாத இதழ் உங்கள் இல்லம் தேடி வர சந்தாததாரர் ஆவீர்.

விபரங்களுக்கு இஸ்கான் மதுரை அல்லது திருநெல்வேலி கோயிலை தொடர்பு கொள்ளவும். அல்லது  72 00 11 00 52 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

1 thoughts on “கலியுக விசேஷம் “ஹரே கிருஷ்ண” மஹா மந்திரமே!

  1. பக்தர் says:

    கலியுகத்தின் கேடுகளிலிருந்து விடுபடுவதற்கு சரியானதொரு வழிமுறையை காட்டுவதாக உள்ளது இந்த கட்டுரை . நன்றி. மேலும் இதுபோன்ற பல நல்ல கட்டுரைகளை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *