fbpx

மிகப் பெரிய சொத்து?

கிருஷ்ண அமுதம் * மார்ச் 2017

ஒரு சமயம் ஒரு ஏழை ஒருவர், செல்வத்தை வேண்டி சிவபெருமானை வழிபட்டார். ஏழையின் பிரார்த்தனையில் மனம் மகிழ்ந்த சிவபெருமான், அந்த ஏழைக்கு நீங்காத செல்வத்தை அளிக்க விரும்பினார்.

எனவே அந்த ஏழை முன்பாக தோன்றிய சிவபெருமான் அவரிடம், “விருந்தாவனத்தில் யமுனை நதிக்கரையில் துவாதச ஆதித்ய குன்றில் சனாதனர் என்ற பெயருடைய சாது ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் ஒரு  சிந்தாமணி கல்லை வைத்திருக்கிறார். அக்கல் இரும்பை தூய தங்கமாக மாற்றும் வல்லமையுடையது.  அக்கல்லை அவரிடமிருந்து கேட்டு பெற்றுக் கொள்” என்று  கூறினார்.

இதைக் கேட்ட ஏழை, உடனே சனாதன கோஸ்வாமியை தேடி விருந்தாவனத்திற்குச் சென்றார். அங்கு  துவாதச ஆதித்ய குன்றில் சனாதனரை சந்தித்த அந்த ஏழை, தனக்கு அந்த  சிந்தாமணி கல்லைத் தருமாறு  வேண்டினார்.

அதற்கு சனாதனர், சற்று தூரத்தில் தெரிந்த ஒரு குப்பை கிடங்கை காண்பித்து,  அந்த குப்பைகளுக்கு இடையேதான் அந்த கல் உள்ளது.  நீயே அதனைத்  தேடி எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

ஏழைக்கோ சற்று சந்தேகமாகத் தான் இருந்தது. இருப்பினும் சனாதனர் கூறியதில் நம்பிக்கை வைத்து, குப்பைகளுக்கு இடையே தேடினார்.

என்ன ஆச்சர்யம்! சொன்னபடி அந்த சிந்தாமணிக் கல், அங்கு தான் இருந்தது.    உடனே அக்கல்லை சோதித்துப் பார்த்தார்.  தொட்டதெல்லாம் தங்கமானது. மகிழ்ச்சி பொங்க  நடனமாடினார். பிறகு சற்றும் தாமதிக்காது,  வீட்டை நோக்கி பயணித்தார். சிறிது தூரம் சென்ற பிறகு, திடீரென்று அவர் மனதில் ஓர் நற்சிந்தனை பிறந்தது. அவர் சிவபெருமானால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்ததால் நற்புத்தி உடையவராக இருந்தார்.

எனவே அவர் தனக்குள் எண்ணினார், முழு உலகமும் சிந்தாமணிக் கல்லுக்காக ஏங்கியிருக்க, சனாதனர் அதனை குப்பை தொட்டியில் போட்டிருக்கிறாரே? அப்படியென்றால் அவர் இக்கல்லை விட மதிப்புமிக்க ஒன்றை வைத்திருக்க வேண்டும்? என்று யோசித்துப் பார்த்தார். எனவே அவர் சனாதனரிடம் திரும்பிச் சென்று, நீங்கள் இக்கல்லை விட மதிப்புமிக்க ஒன்றை வைத்துள்ளீர்களா? என கேட்டார்.

 அதற்கு சனாதனர், இருக்கிறது. ஆனால் அதனை பெறுவதற்கு இந்த சிந்தாமணிக் கல்லை யமுனை ஆற்றில் எறிந்து விட்டு வரும்படி கூறினார். ஏனெனில் ஜட பந்தங்களிலிருந்து விடுபடும் வரை நான் வைத்திருக்கும் செல்வத்தை   பெற முடியாது எனக் கூறினார்.

அந்த ஏழையும் அவ்வாறே செய்தார்.  பிறகு “நான் உங்களுக்கு வேறொரு சிந்தாமணி கல்லை தருகிறேன். அது இந்த படைப்பில் உள்ள எல்லா தங்கத்தையும் விட உயர்ந்த மதிப்புமிக்கதை உமக்குத் தரும். அந்த செல்வம் ‘கிருஷ்ண பிரேமை’.  அது உமது இதயத்தின் அடியில் மறைந்துள்ளது. அந்த செல்வத்தை அடைய,

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

என்ற மஹாமந்திரத்தை தினமும்  வெகு சிரத்தையுடன்  ஜபம் செய்ய வேண்டும் என்று கூறினார். பிறகு அந்த ஏழையும் தொடர்ந்து, ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை உச்சரித்து  மிக உயர்ந்த  பொக்கிஷமான கிருஷ்ண பிரேமையை அடைந்தார்.

சிவபெருமானின் அன்பு

சனாதன கோஸ்வமி தனது வயதான பருவத்தில் கோவர்த்தன மலையில் மானசி கங்கா கரையில் சக்லேஷ்வர் மகாதேவ் என்று அழைக்கப்படும் இடத்தில் வசித்தார். சக்லேஷ்வரர் மகாதேவ் என்பது கிருஷ்ணரின் கொள்ளுபேரன் வஜ்ரநாபா  ஸ்தாபித்த பழமையான சிவலிங்கம். இது விரஜபுமியின் நான்கு முக்கிய சிவலிங்கங்களில் ஒன்று. இந்த இடம் சக்ரதீர்த்தா என்று அழைக்கபடுகிறது.

சனாதன கோஸ்வாமி அவ்விடத்தில் கிருஷ்ணரைப் பற்றிய புத்தகங்களை எழுதவும் ஹரிநாம பஜனைகளை செ#தவாறும் வசித்தார். ஒருநாள் இரவு சனாதன கோஸ்வமியை ஏராளமான கொசுக்கள் துன்புறுத்தின. மறுநாள் காலை சனாதனர் இவ்விடம் தனது பஜனைக்கு பொருத்தமில்லாத இடமாக கருதி அவ்விடத்தை விட்டு வெளியேற தயாரானார். ஆனால் சிவபெருமானால் சனாதனரின் பிரிவை தாங்க முடியவில்லை. அதனால் அவர் ஒரு அந்தணரின் வடிவில் தோன்றி  சனாதனரிடம், “ஓ! சனாதனரே நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?” என வினவினார்.

அதற்கு சனாதனர், “இங்கு ஏராளமான கொசுக்கள் உள்ளன. நான் சைதன்ய மஹாபிரபுவிற்கான எனது சேவையை செய்ய முடியவில்லை. இவ்விடத்தை விட்டு செல்ல போகிறேன்” எனக் கூறினார். இதனை செவியுற்ற அந்தணரும், “சனாதனரே! தயவுசெய்து இன்று ஒரு நாள் இரவு மட்டும் இங்கு தங்குங்கள். இந்த கொசுக்கள்  மீண்டும் உங்களுக்கு தொந்தரவு அளித்தால், நாளை  இவ்விடத்தை விட்டு செல்லலாம்” என வேண்டினார்.

சனாதன கோஸ்வாமி மிகவும் மென்மையானவர். பக்தர்களின் அன்பான வேண்டுகோளுக்கு ஒருபோதும் மறுப்பு சொல்லாதவர். எனவே சிவபெருமானின் வேண்டுகோளை அப்படியே ஏற்றுக் கொண்டார். சிவபெருமானும் பூச்சிகளின் வாழ்கைக்கு பொறுப்பு வகிக்கும் தேவரை அழைத்து சக்ரதீர்தத்தை கொசுக்களின் தொந்தரவு இல்லாமல் பார்த்து கொள்ளும்படி ஆணையிட்டார்.

அதன்பிறகு சனாதன கோஸ்வாமி, கொசு தொந்தரவு இல்லாமல் மகிழ்ச்சியுடன்  அவ்விடத்தில் வாழ்ந்தார். இன்றளவும் சக்ர தீர்தத்தில் கொசுக்களின் தொந்தரவு இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இங்கு வரும் பக்தர்களும் இவ்விடத்தைக் கண்டு ஆச்சரியப்படுகின்றனர்.

கிருஷ்ணர் தந்த ‘கோவர்த்தன சிலா’

சனாதனரின் முதிய பருவத்தில், கிருஷ்ணர் ஒரு தெய்வீக லீலையை நிகழ்த்தினார். சனாதன கோஸ்வாமி தினமும் கோவர்த்தன கிரி மலையை  வலம் வருவது வழக்கம்.  சுமார் 22 கி.மீ சுற்றளவு உள்ள இந்த கோவர்த்தன கிரியை வலம் வருவதற்கு 4 முதல் 5 மணி நேரங்கள் ஆகும்.   இதனை தன் வாழ்நாளின் கடைசி வரை செய்து வந்தார்.

மிக நீண்ட பாதையான சந்ர சரோவர் மற்றும் மற்ற தீர்தங்களுக்கு நடைபயணம் செ#து  திரும்பிய பின் தனது எழுத்து பணியையும், மற்ற கோஸ்வாமிகளை சந்திப்பதையும் வழக்கத்தில் கொண்டிருந்தார். வருடங்கள் கழிய சனாதனரும் மிக வயதான பருவத்தை அடைந்தார். இருந்த போதும் பெரும் முயற்சி மேற்கொண்டு கஷ்டத்துடன் கோவர்த்தன கிரி பரிக்ரமத்தை கடைபிடித்து வந்தார். சனாதனரின் விரதத்தின் கடுமையை கண்ட பகவான் கிருஷ்ணரே ஒரு மாடு மேய்க்கும் சிறுவனின் வடிவில் தோன்றி தனது சொந்த கரங்களால் சனாதனரின் உடலிலிருந்த வேர்வை துளிகளை துடைத்தார். கிருஷ்ணரின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.

பகவான் கூறினார், “ஓ கோஸ்வாமி! தாங்கள் இந்த பரிக்ரமத்தை தினமும் செய்ய இவ்வாறு பெறும் கஷ்டமும் முயற்சியும் செய்வதை என்னால் தாங்கமுடியவில்லை. . .  நீங்கள் வயதானவராகி விட்டீர்கள் உண்மையில் முடியாதவராகிவிட்டீர். எனவே இதனை நிறுத்திகொள்ளுங்கள், இதற்கு அவசியம் இல்லை” எனக் கூறினார்.

சனாதனரோ நான், கிருஷ்ணரிடம் உறுதி  செய்துள்ளேன். கிருஷ்ணரே ஆணையிட்டால் தான் நான் இதை விட முடியும். என்றுரைத்தார்.  உடனே சிறுவன் வடிவிலிருந்த ஸ்ரீகிருஷ்ணர் . . .

கோவர்தன மலையின் மேலேறி தனது பக்தர்களுக்கான தனது பேரானந்த அன்பினால் கோவர்த்தன மலை மேலிருந்த ஓர் கல்லை உருக செய்து தனது திருபாத அச்சினை அக்கல்லில் பதித்தார். பிறகு அக்கல்லினை எடுத்து கொண்டு மலைக்கு கீழிருந்த சனாதனரை அணுகினார். ‘இனி இந்த கோவர்தன சிலாவை சுற்றிவந்தால் அது முழு கோவர்தன மலையையும் சுற்றியதற்கு சமானம், உங்களது முதிய பருவத்தில் இதனையே உங்கள் சேவையாக செய்யுங்கள்” என கூறி சக்கர தீர்தம் வரை அப்பாறையினை சுமந்து சனாதனரின் பஜன் கூடலில் அக்கல்லினை வைத்தபின் மறைந்து போனார் சிறுவன் வடிவில் வந்த கிருஷ்ணர்.

எல்லா இடத்திலும் தேடிய சனாதனர் சிறுவனை காணமுடியவில்லை.  பிறகு சிறுவனாக வந்து தனக்கு ஆணையிட்டது ஸ்ரீகிருஷ்ணர் தான் என்பதை உணர்ந்தார் சனாதனர்.  அதன் பின் கிருஷ்ணர் தந்த அந்த கோவர்த்தன சிலாவினை தினமும் 4 முறை சுற்றி தனது பரிக்ரமத்தை நிறைவேற்ற ஆரம்பித்தார்.

விரஜவாசிகளுடன் சனாதனரின் உறவு

சனாதன கோஸ்வாமி வ்ரஜ பூமியில் தினமும் ஒவ்வொரு இடமாக பிரயாணம் செய்வார். விரஜவாசிகளை தனது உயிரை விட அதிகமாக நேசித்தார் சனாதனர். சனாதனர் ஒரு கிராமத்திற்கு வரும்போது அக்கிராம மக்கள் பெருமகிழ்ச்சி அடைவர். முழுகிராமமும் கிராமத்திற்கு வெளியே வந்து ஆனந்த கண்ணீர் உடன் சனாதனரை வரவேற்பர். வயதான விரஜவாசிகள் சனாதனரை தங்களது மகனை போல் கருதுவர். மற்றவர்கள் அவரை சகோதரரை போல நடத்துவர். ஆனால் அனைவரும் சனாதனரை தங்களது குருவாக மதித்தனர். சனாதன கோஸ்வாமி விரஜவாசிகள் அனைவருக்கும் குருவாக கருதபட்டார், சனாதனர் வரும்போது விரஜவாசிகள் அன்பினால் அழுவது வழக்கம். ஓ சகோதரரே, இறுதியாக நீங்கள் வந்துவட்டீர்கள். இவ்வளவு நாள் எங்கிருந்தீர்? ஏன் இவ்வளவு நாளாக கொடூரமானவராக எங்களை மறந்துவிட்டீர்கள்? தயவுசெய்து எங்களது சேவையை ஏற்றுகொள்ளுங்கள் என்று கூறுவர். இளையவர்கள் சனாதனரின் பாதங்களை தொட்டு வணங்குவர். சனாதனர் இயற்கையில் தனது பாதத்தை யாரொருவர் தொடுவதையும் விரும்பாத போதிலும் விரஜவாசிகளின் அன்பு மற்றும் பாசத்தினாலும் எந்த ஒரு விசயத்திற்கும் சனாதனர் விரஜவாசிகளிடம் மறுப்பு தெரிவிக்க முடியாதவரானார். வயதில் முதிர்தவர்கள் தாங்கள் குருவாக கருதும் சனாதனரின் பாதங்களை தொட்டு வணங்கும் வழக்கத்தை சனாதனரிடம் கொண்ட அன்பினால் முழுவதும் மறந்து, சனாதனரை ஓர் மரத்தடியில் அமரச்செ#து பால், தயிர், வெண்ணை மற்றும் எல்லாவகையான இனிப்புகளையும் சனாதனருக்கு உண்பதற்காக கொண்டு சேர்பர்.

சனாதனரும் எல்லா விரஜவாசிகளையும் தனது குடும்பம்போல் பாவிப்பார். ஒருவரிடம் உனக்கு எத்தனை குழந்தைகள்? என்பார். மற்றொருவரிடம் யாரை நீ மணமுடிக்க போகிறாய்? என்பார். மற்றவரிடம் எத்தனை பசுக்கள் உன்னிடம் உள்ளன? அவை முறையாக பால் தருகிறதா? அந்த பாலை என்ன செய்கிறாய்? என்பார். மற்றவரிடம் உனது விவசாயம் எப்படி உள்ளது? என்ன விவசாயம் செய்கிறாய்? தானியங்கள் நன்கு விளைகின்றனவா? அவற்றை என்ன செய்கிறாய்? என்பார். மற்றவரிடம் உனது உடல்நிலை எப்படி உள்ளது? என்பார். எந்த ஒரு விரஜவாசியும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சனாதனரிடம் வந்து முறையிட சனாதனரும் அவர்களுக்கு தீர்வு கொடுப்பார். அன்று இரவு அக்கிராம மக்களுடன் கழிப்பார். மறுநாள் அக்கிராம மக்கள் அன்பினாலும், பிரிவினாலும் கண்களில் கண்ணீர்விட சனாதனரும் அன்பினால் கண்ணீர் சிந்துவார். சிறிது தொலைவில் அடுத்த கிராமத்தவர் சனாதனரை வரவேற்க கண்ணீரோடு காத்திருப்பர்.

ஒருமுறை பைதன் எனும் கிராமத்தில் சனாதனர் இரண்டாம் நாள் பிரிந்து செல்லும் போது அக்கிராம பக்தர்கள் தயவுசெய்து செல்லாதீர். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தங்கி செல்லுங்கள் என இதயமுருகி வேண்டினர். அந்த பக்தர்களின் அன்பினார் சனாதனர் தனது வழக்கமான நிலையை மாற்றி அக்கிராமத்தில் சில நாள் தங்கி சென்றார். அன்றிலிருந்து அக்கிராமம் கௌடிய வைஷ்ணவர்களிடம் மிக புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது.

——————————————————————————————————————————————

இந்தக்கட்டுரைகள்அனைத்தும் ‘கிருஷ்ணஅமுதம்’ மாதஇதழில்பிரசுரம்செய்யப்பட்டுள்ளது. ‘கிருஷ்ணஅமுதம்’ – இஸ்கான்மாதஇதழ்ஆகும்கிருஷ்ணஅமுதம்மாதஇதழ்உங்கள்இல்லம்தேடிவரசந்தாததாரர்ஆவீர்.

விபரங்களுக்குஇஸ்கான்மதுரைஅல்லதுதிருநெல்வேலிகோயிலைதொடர்புகொள்ளவும்அல்லது  72 00 11 00 52 என்றஎண்ணிற்குதொடர்புகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *