ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விரதம் விரதம் இருக்க வேண்டிய நாள்: ஆகஸ்ட் 30, 2021 திங்கள் கிழமை
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா இவ்வருடம் தமிழக முறைப்படியும், கிருஷ்ணர் பிறந்த மதுரா முறைப்படியும் சேர்ந்து ஒரே நாளில் ஆகஸ்ட் 30ம் தேதி திங்கள் கிழமை அனுசரிக்கப்படுகிறது.
விரதம் அனுஷ்டிக்கும் முறை
ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று சூரிய உதயத்திற்கு முன்பாக அதிகாலையில் எழுந்து ஶ்ரீகிருஷ்ணரின் நாமங்களை உச்சரித்து, “கிருஷ்ணா! இன்று நான் ஜென்மாஷ்டமி விரதம் இருக்கப் போகிறேன். தயவு செய்து உங்கள் கருணையை தரவும்’’ என்று வேண்டி அன்று விரதத்தை துவக்க வேண்டும்.
ஒன்றுமே உண்ணாமல் பருகாமல் முழுவிரதம் இருப்பது சிறந்தது. ஆனால் உடல் நலம் குறைந்தவர்கள் நீர் மட்டுமோ அல்லது பால், பழங்கள் மட்டுமோ உட்கொண்டு விரதம் அனுஷ்டிக்கலாம். தானிய வகை உணவுகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
கிருஷ்ண ஜெயந்தி முழுவதும் விரதம் இருந்து, அடுத்த நாள் காலை, பொங்கல், பருப்பு சாதம் போன்ற தானிய வகையிலான கிருஷ்ண பிரசாதம் உட்கொண்டு விரதம் முடிக்க வேண்டும்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று, கிருஷ்ணருக்கு நைவேத்யங்கள் செய்யலாம். ஆனால் விரதம் இருப்பவர்கள் தானிய உணவுகளை உண்ணக் கூடாது.
சுருக்கமாக ஏகாதசி விரதம் போல் இந்த கிருஷ்ண ஜெயந்தி விரதமும் கடைபிடிக்க வேண்டும்.
விரதத்தின் போது மிக முக்கியமாக ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று 108 மணி ஜபமாலையில் ஹரே கிருஷ்ணா மஹாமந்திரத்தை அதிகபட்ச சுற்றுக்கள் ஜபிக்க வேண்டும்.
கிருஷ்ணரின் தோற்றம், தெய்வீக லீலைகள், மற்றும் கிருஷ்ணரின் உபதேசங்கள் அடங்கிய ஶ்ரீமத் பாகவதம், கிருஷ்ணா போன்ற புத்தகங்களை படிக்க வேண்டும். கிருஷ்ணர் உபதேசம் செய்த பகவத்கீதையையும் படிக்க வேண்டும்.
புராணங்கள் போற்றும் கிருஷ்ண ஜெயந்தி விரதம்
ஒருவர் எவ்வாறு ஏகாதசி அன்று விரதம் கடைபிடிக்கின்றாரோ, அது போலவே கிருஷ்ண அவதார தினமான ஜென்மாஷ்டமி அன்றும் விரதம் கடைபிடிக்க வேண்டும். மேலும் அதாவது ஏகாதசி அன்று அனைத்து வகை தானியங்கள், பயிறுகள், பீன்ஸ் போன்ற காய்கள் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்த்து விரதம் இருப்பது போல் ஜென்மாஷ்டமி அன்றும் விரதம் இருக்க வேண்டும்”
– திக் தர்ஷினி தீக நூல்
(ஶ்ரீல சனாதன கோஸ்வாமி வழங்கிய விளக்கவுரை)
கிருஷ்ண ஜெயந்தி விரதம் முடிப்பது எப்படி?
ஜென்மாஷ்டமி திதியும், அதன் ரோஹிணி நட்சத்திரமும் முடிந்த பிறகு (அடுத்த நாள்) தான், ஒருவர் தனது விரதத்தை முடிக்க தானியங்களை உண்ண வேண்டும்.
– பிரம்ம புராணம்
எவ்வாறு ஏகாதசி விரதம் முடிக்க, துவாதசி அன்று துவாதசி பாராயண நேரத்தில் தானிய உணவை உண்டு விரதம் முடிப்பது போல், “கிருஷ்ண ஜெயந்தி விரதம் முடிக்க, கிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்யப்பட்ட தானிய பிரசாத உணவுகளை, விரதம் முடிக்கும் நேரத்தில் உண்டு ஜென்மாஷ்டமி விரதம் முடிக்க வேண்டும்”
– வாயு புராணம்
கிருஷ்ண ஜெயந்தி விரதத்தின் முக்கியத்துவம்
ஒருவர் யாராக இருந்தாலும், எட்டு வயதிற்கு மேற்பட்டவராக இருக்கும் அனைவரும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அவதார தினத்தன்று விரதம் இருக்க வேண்டும்.
– பவிஷ்ய உத்தர புராணம்
எல்லா முனிவர்களும் மற்றும் பிரகலாதரைப் போன்ற புனித மன்னர்களும் ஒவ்வொரு வருடமும் பகவான் ஶ்ரீகிருஷ்ணரின் அவதார தினத்தன்று உபவாசம் இருந்தனர்.
– ஸ்கந்த புராணம்
சத்ய யுகம், த்ரேத யுகம் மற்றும் துவாபர யுகம் முதலிய காலத்திலிருந்தே ஜென்மாஷ்டமி அன்று ரோஹிணி நட்சத்திரம் இருக்கும் போது எல்லா கற்றிந்த முனிவர்களும், ஶ்ரீகிருஷ்ணரை திருப்திபடுத்துவதற்காக ஜென்மாஷ்டமி அன்று விரதம் இருந்துள்ளனர்.
– அக்னி புராணம்
சரியான ஜென்மாஷ்டமி அன்று யாரொருவர் முறைப்படி விரதம் இருக்கின்றாரோ அவர்களின் மீது கலியுகம் ஆதிக்கம் செலுத்த முடியாது”
– பிரம்ம புராணம்
யார் ஒருவர் பக்தியுடன் ஜென்மாஷ்டமி விரதம் இருக்கின்றாரோ, அவர் நிச்சயமாக பகவான் விஷ்ணுவின் தளத்தை அடைகிறார். “
– ஸ்கந்த புராணம்
* *