fbpx

அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் நாராயண நாமம்

கிருஷ்ண அமுதம் * செப்டம்பர் 2017

அஜாமிளனின் உயிரை மீட்டுத் தந்த விஷ்ணு தூதர்கள், அவன் உயிரைப் பறித்த யமதூதர்களி டம், பகவான் நாராயணனின் நாமத்தை அஜாமிளன் உச்சரித்ததாலேயே அவனுடைய அனைத்துப் பாவங்களும் அழிக்கப்பட்டு விட்டன என்றும் அவன் யமராஜாவின் தண்டனைக்கு உரியவன் அல்ல என்பதையும் ஸ்ரீமத் பாகவதம் பதம் 6.2.7 முதல் பதம் 6.2.19 வரை  பலவகைகளில் உறுதிப்படுத்துகின்றனர்.

நாம மகிமை அறியாமல் நாராயண நாமம் உச்சரித்த அஜாமிளனின் கோடி பிறவி பாவங்கள் அழிந்தன

அஜாமிளன், அவன் செய்த அனைத்துப் பாவச் செயல்களுக்கும் ஏற்கனவே பாவப்பரிகாரம் செய்து விட்டான். சொல்லப் போனால், நாராயணனின் புனித நாமத்தை அனாதரவான நிலையில் அவன் உச்சரித்ததால், இந்த ஒரு பிறவியில் செய்த பாவங்களுக்கு மட்டுமல்ல, முந்தைய கோடிப் பிறவிகளில் அவன் செய்த பாவங்களுக்கும் சேர்த்து அவன் பாவப்பரிகாரம் செய்து விட்டான். அவன் புனித நாமத்தை தூய்மையாக உச்சரிக்காவிட்டாலும், அபராதம் இன்றி உச்சரித்தான். ஆகையால் அவன் இப்போது தூய்மையானவன் ஆகி விட்டான். மேலும் முக்திக்கும் அவன் தகுதி உடையவனாகி விட்டான்.

இதற்கு முன்பு கூட, உண்ணும் போதும் மற்ற சமயங்களிலும், இந்த அஜாமிளன் தன்னுடைய மகனை, ‘நாராயணா இங்கு வா’ என்று அழைத்து வந்தான். தன் மகனைத் தான் அழைத்தான் என்றாலும், நான்கு அக்ஷரங்கள் கொண்ட நாராயண நாமத்தை உச்சரித்திருக்கிறான். நாராயணா என்ற இந்த நாமத்தை உச்சரித்ததாலேயே, கோடி பிறவிகளில் செய்த பாவங்களுக்குப் அவன் பாவப் பரிகாரம் செய்தவனாகி விட்டான். 

அனைத்துப் பாவங்களும் தீர ஒரே வழி ஹரி நாம உச்சாடனமே

பகவான் விஷ்ணுவின் புனித நாமத்தை உச்சரிப்பது தான், திருடனுக்கும்,  குடிகாரனுக்கும், மித்ரு துரோகிக்கும், பிராமணனைக் கொன்றவனுக்கும், குரு பத்தினியுடன் தகாத உறவு கொண்டவனுக்கும், பெண்கள், ராஜன், பித்ரு, பசுக்கள் ஆகியவற்றைக் கொன்றவனுக்கும், மற்றெல்லா பாவாத்மாக்களுக்கும் மிகச் சிறந்த பாவப் பரிகாரமாகும். பகவான் விஷ்ணுவின் புனித நாமத்தை உச்சரிப்பதால், இவர்கள் பகவானின் கவனத்தை ஈர்த்து விடுகின்றனர்.

ஹரி நாம உச்சாடனமே பாவப் பரிகாரத்திலும் உயர்வானது

பகவான் ஹரியின் புனித நாமத்தை உச்சரிப்பதால் உண்டாவதைப் போன்ற ஒரு தூய்மையை பாவப்பரிகார முறைகளாலோ, வேதச் சடங்குகளைப் பின்பற்றுவதாலோ, ஒரு பாவி அடைவதில்லை. வேதங்களில் கூறப்பட்ட பாவப்பரிகாரங்கள் ஒருவனை அவனது பாவங்களில் இருந்து விடுவித்தாலும், பகவானின் நாம உச்சரிப்பைப் போன்று, உத்தம சுலோகம் என்றழைக்கப்படும் பகவானின் குணங்களை நினைவு படுத்தி பக்தி சேவையைத் தூண்டுவதில்லை.

பாவப்பரிகார முறைகள் இதயத்தைத் தூய்மை செய்வதற்கு போதுமானவையல்ல. ஏனெனில் பாவப்பரிகாரம் செய்த பிறகும், மனம் மீண்டும் ஜடச் செயல்களை நோக்கியே ஓடுகிறது. அதனால் தான், ஜடச் செயல்களின் விளைவுகளில் இருந்து விடுபட விரும்புவனுக்கு, ஹரே கிருஷ்ண மந்திரம் உச்சரிப்பது அல்லது ஹரியின் குண மகிமைகளை இடையறாது பாடுவது தான் ஒரே வழி. உண்மையில் ஒருவனது இதயத்தில் உள்ள அழுக்கை இது தான் முழுவதும் போக்குவதாகும்.

பாவத்தை நீக்கிய நாராயண நாமம்

சாகும் தருவாயில், இந்த அஜாமிளன் உதவியற்ற நிலையில், உரத்த குரலில் பகவான் நாராயணனின் புனித நாமத்தை உச்சரித்தான். இந்த உச்சரிப்பு மட்டுமே, அவனுடைய பாவ வாழ்க்கையின் அனைத்து விளைவுகளில் இருந்தும் அவனை விடுவித்து விட்டது. ஆகையால், யமதூதர்களே, நரக தண்டனைகளுக்கு உட்படுத்துவதற்காக இவனை உங்கள் தலைவனிடம் கொண்டு செல்ல முயற்சிக்காதீர்கள்.

எப்படி உச்சரித்தாலும், எந்நிலையில் உச்சரித்தாலும் ஹரி நாமம் பலன் தரும்

பகவானின் புனித நாமத்தை ஒருவன் பரிகாசமாகவோ, இன்ப கானமாகவோ, அல்லது அலட்சியமாகவோ உச்சரித்தால் கூட எண்ணற்ற பாவ விளைவுகளில் இருந்து உடனே விடுவிக்கப்படுகிறான் என்று வேத வல்லுனர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
விழுந்தோ, இடறியோ, எலும்புகள் முறிவுபட்டோ, விஷக்கடி பட்டோ, கொடிய ஜுரத்தால் பாதிக்கப்பட்டோ, அல்லது காயப்பட்டோ ஒருவன் உயிர் இழக்க நேரிட்டாலும் தன்னை அறியாமலேயே அவன் ஹரியின் நாமத்தை உச்சரிப்பானாயின், பாவியாக இருந்தாலும் கூட, அவன் நரக வாழ்க்கைக்கு தகுதியுடையவன் ஆவதில்லை.

எத்தகைய பாவத்தையும் எரித்தழிக்கும் ஹரி நாமம்

கொடிய பாவங்களுக்கு கடினமான பிராயச்சித்தமும், சாதாரண பாவங்களுக்கு எளிய பிராயச்சித்தமும் ஒருவன் செய்ய வேண்டும் என மகரிஷிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் கொடியதோ, சாதாரணமானதோ எதுவாக இருந்தாலும் பாவங்களின் அனைத்து விளைவுகளையும் ஹரே கிருஷ்ண மகாமந்திரம் ஒரேயடியாக அழித்து விடுகிறது. நெருப்பு எவ்வாறு காய்ந்த சருகுகளை எரித்துச் சாம்பல் ஆக்குகின்றதோ, அவ்வாறே அறிந்தோ, அறியாமலோ உச்சரிக்கப்படும் பகவானின் புனித நாமமும் ஒருவனுடைய எல்லாப் பாவ விளைவுகளையும் எரித்துச் சாம்பல் ஆக்கி விடுகிறது.

அறிந்தோ, அறியாமலோ எப்படி உச்சரித்தாலும் பலன் தரும் ஹரி நாமம்.

சக்தி வாய்ந்த மருந்தின் ஆற்றல் உண்பவனால் அறியப்படா விட்டாலும் கூட, சரியாக உட்கொள்ளப்பட்டால் தன் சுய ஆற்றலை வெளிப்படுத்துகிறது. அது போல புனித நாமத்தின் மகிமையை ஒருவன் அறிந்திருக்கவில்லை என்றாலும், அறிந்தோ, அறியாமலோ அந்த நாமத்தை உச்சரித்தால், பலன் கிடைக்கும் என்பது நிச்சயம்.

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே.

—————————————————————————————
இந்தக் கட்டுரைகள் அனைத்தும் ‘கிருஷ்ண அமுதம்’ மாத இதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. ‘கிருஷ்ண அமுதம்’ – இஸ்கான் மாத இதழ் ஆகும். கிருஷ்ண அமுதம் மாத இதழ் உங்கள் இல்லம் தேடி வர சந்தாததாரர் ஆவீர்.

விபரங்களுக்கு இஸ்கான் மதுரை அல்லது திருநெல்வேலி கோயிலை தொடர்பு கொள்ளவும். அல்லது  72 00 11 00 52 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *