fbpx

கஸ்தூரி மான் கற்பிக்கும் பாடம்!

கிருஷ்ண அமுதம் * மே 2017 –

மத்திய ஆசியாவில் வாழக்கூடிய மான் இனங்களில் ஒன்று ‘கஸ்தூரி மான்’. அந்த கஸ்தூரி மானின் மடியிலிருக்கும் பையிலிருந்து விலைமதிப்பற்ற வாசனைத் திரவியம் சுரக்கின்றது.  இதற்கு பெயர் தான் ‘கஸ்தூரி’ ஆகும். இந்த திரவம், மிக மிக நறுமண வாசனை பொருந்தியது.  வெகு தொலைவில் இருப்பவர்களால் கூட இதன் நறுமணத்தை உணர முடியும்.  மேலும் கிடைப்பதற்கு மிக அரிதான இந்த கஸ்தூரி திரவம்,  ஏராளமான நறுமணப்பொருட்களுக்கு அடிப்படையாக பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இதன் துரதிர்ஷ்டம் என்னவென்றால், மிகவும் நறுமணம் பொருந்திய இந்த வாசனைத் திரவியம் எங்கிருந்து வருகிறது என்று அந்த கஸ்தூரி மானுக்கு தெரிவதில்லை.  எனவே அந்த நறுமணத்தை தேடித் தேடி தினமும் வெகு தூரம் அலைகிறது. கடைசியில் எங்கு தேடியும் கிடைக்காது, ஒரு இடத்தில் சோர்ந்து போய் இளைப்பாறும். இப்படியாக தன்னிடம் இருந்து தான் அந்த நறுமணம் வருகின்றது என்பதை அறியாமல், தன்னை விட்டு எல்லா இடங்களுக்கும் நறுமணத்தை தேடித் தேடி தன் வாழ்வு முழுவதையும் விரயமாக்குகிறது கஸ்தூரிமான்.

இந்த கஸ்தூரி மானின் வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் மிக முக்கியமானதாகும். கஸ்தூரி மான், நறுமணத்தை தேடி அலைவது போலத் தான் நாமும் இன்று இன்பம் அல்லது மகிழ்ச்சியைத் தேடி அலைகின்றோம்.  இது நிச்சயமாக நமது இயற்கையான தன்மையில் ஒன்று தான். ஏனெனில் இந்த ஜீவாத்மாவின் ஆதார நிலை என்பது எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பது. அதுவும் நித்தியமான ஆனந்தமாக இருப்பது. ஆனால் நாம் தேடும் மகிழ்ச்சியோ மேலோட்டமாக இருக்கின்றது. இந்த ஜடவுலகில் நாம் தேடக்கூடிய மேலோட்டமான மகிழ்ச்சி நம்மை எப்பொழுதும் விரக்தியில் தான் கொண்டு போய் சேர்கிறது. நாம் எங்கு தேடினாலும் நிரந்திரமான மகிழ்ச்சி என்பது நமக்கு எட்டா கனியாகவே இருந்து வருகிறது. மகிழ்ச்சியாக இருப்பதற்கு நாம் பல முயற்சிகளை செய்துகொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் நமக்கு கிடைக்கூடிய மகிழ்ச்சியோ  மிக மிகத் தற்காலிகமானதாகவே அமைகின்றது.

உண்மையில் நிரந்தரமான இன்பம் நமக்குள்ளேயே தான் இருக்கின்றது என்பதை அறியாமல் நாம் தற்காலிகமான இன்பத்தை தேடி அலைகின்றோம். வேதசாஸ்திரங்களின் படி, ஒவ்வொரு உயிர்வாழியும் பகவான் கிருஷ்ணரின் அம்சமாகும். எனவே பகவான் கிருஷ்ணரை திருப்திப்படுத்துவதன் மூலமாக நாம் எல்லையில்லா ஆன்மீக இன்பத்தை அனுபவிக்க முடியும். இந்த ஜடவுடல் என்பது இந்த ஆத்மாவிற்கு மேல் உள்ள ஒரு மூடி அல்லது உறை ஆகும். இந்த ஆத்மாவோ பகவானின் அங்க உறுப்பாகும். எனவே பகவானுக்குச் சேவை செய்வதின் மூலமாக எல்லையில்லா ஆனந்ததை நம்மால் உணர முடியும். ஆனால் அதை நாம் உணராமல் நாம் இன்பத்தை பல இடங்களில் தேடிக்கொண்டிருக்கிறோம்.

பொதுவாக நாம் ஆனந்தத்தை நமது நண்பர்களிடமும், சமூகத்திடமும், நமது செல்வத்திடமிருந்தோ அல்லது நமது குடும்பத்திடமிருந்தோ பெற முயற்சி செய்கிறோம். ஆனால் இவர்களிடமிருந்து கிடைக்ககூடிய இன்பமானது மிகவும் தற்காலிகமானதாகும். நாம் பெறும் பௌதீக இன்பம், எதற்கு ஒப்பானது என்பதை, ஸ்ரீல பிரபுபாதா தனது  ஸ்ரீமத் பாகவத பொருளுரையில் (4.25.12)  ஸ்ரீல வித்யாபதி என்ற மிகப் பெரிய புலவரின் பாடலில் இருந்து மேற்கோள் காட்டுகிறார்.

‘தாதல ஸைகதே வாரி பிந்து ஸம  ஸூத மித ரமணீ ஸமாஜே’

அதாவது சமூகத்தினாலும் நட்பினாலும் குடும்பத்தினாலும் கிடைக்கக்கூடிய இன்பம் என்பது எதனோடு ஒப்பிடப்படுகிறது என்றால் மிகப்பெரிய பாலைவனத்தில் விழுகின்ற நீரோடு ஒப்பிடப்படுகின்றது. ஒரு பாலைவனத்தை நனைக்கவேண்டுமென்றால் கடல் அளவு நீர் வேண்டும். ஆனால் அதை விடுத்து ஒரே ஒரு துளி நீர் இருந்தால் என்ன பிரயோஜனம்?” ஆகவே பகவானை தவிர்த்து, நாம் பெறும் இன்பம் யாவும் பாலைவனத்திலுள்ள ஒரு துளி நீர் போன்றே. பூரணமான இன்பம் என்பது கிருஷ்ணருக்கு சேவை செய்யும் போதே கிடைக்கிறது. ஆகவே உண்மையான இன்பத்தை நாம் நிரந்தரமாக அனுபவிக்கவேண்டுமென்றால், நாம் வெளி விஷயங்களில் தேடினால் கிடைக்காது. நம்மை கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்தினால் மட்டுமே பெற இயலும். இந்த சேவையை நாம்,  கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரிப்பதன் மூலமாக, கிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்த பிரசாதத்தை உண்பதன் மூலமாக, கிருஷ்ணரின் சேவைக்காக அர்ப்பணிப்பதன் மூலமாக கிருஷ்ணருக்கு சேவை செய்ய முடியும்.  அதன் மூலம் நாம், நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். கஸ்தூரி மான் போன்று கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை.  ஹரே கிருஷ்ணா!
* * *

இந்தக் கட்டுரைகள் அனைத்தும் ‘கிருஷ்ண அமுதம்’ மாத இதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. ‘கிருஷ்ண அமுதம்’ – இஸ்கான் மாத இதழ் ஆகும். கிருஷ்ண அமுதம் மாத இதழ் உங்கள் இல்லம் தேடி வர சந்தாததாரர் ஆவீர்.

விபரங்களுக்கு இஸ்கான் மதுரை அல்லது திருநெல்வேலி கோயிலை தொடர்பு கொள்ளவும். அல்லது  72 00 11 00 52 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *