பகவத்கீதை பற்றிய அறிமுகம்

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கமான இஸ்கான் அமைப்பின் ஸ்தபாக ஆச்சாரியர்

தெய்வத்திரு.அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி ஸ்ரீலபிரபுபாதா அவர்கள் உரை எழுதிய

உலகப் புகழ்பெற்ற ‘‘பகவத்கீதை உண்மையுருவில்’’ எனும் புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டவை.

முன்னுரை

      அகில கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) பகவத் கீதை உண்மையுருவில் எனும் இந்நூலை ஆதாரமாகக் கொண்டதால், நோ்மையானதும் சரித்திரப்பூா்வமாக அங்கீகரிப்பட்டதும் இயற்கையானதும் திவ்யமானதுமாகும். இவ்வியக்கத்தின் உண்மையான தந்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே.

      ஏனெனில், இது பன்னெடுங் காலத்திற்கு முன்பே தொடங்கப்பட்டு சீடப் பரம்பரை மூலமாக மனித சமுதாயத்திற்குக் கீழிறங்கி வருவதாகும். இவ்விஷயத்தில் எனக்கு ஏதேனும் நன்மதிப்பு இருந்தால், அது தனிப்பட்ட முறையில் என்னைச் சேர வேண்டியதே அல்ல. இதற்கான பெருமையனைத்தும் எனது நித்திய ஆன்மீக குருவான தெய்வத்திரு ஓம் விஷ்ணுபாத பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய 108 ஸ்ரீ ஸ்ரீமத் பக்திசித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி மஹாராஜா பிரபுபாதரையே சேரும்.

       எனக்கென்று தனிப்பட்ட முறையில் ஏதேனும் பெருமை இருந்தால், அது பகவத் கீதையைக் கலப்படமின்றி, உண்மையுருவில், உள்ளது உள்ளபடி அளிக்க முயன்றது மட்டுமேயாகும்.

      பகவான் ஸ்ரீ கிருஷ்ணரது முதல் சீடனான அா்ஜுனனால், அவா் எவ்வாறு நேரடியாகப் புரிந்துகொள்ளபட்டாரோ, அவ்வாறே (புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாக) அவரைப் புரிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். பகவத் கீதையின் இத்தகு அறிவே உண்மையில் பலனளிப்பதும் வாழ்வின் நோக்கத்தை அடைவதில் மனித சமுதாயத்திற்கு சேவை செய்யத் தகுதியுடையதுமாகும்.

      வாழ்வின் உன்னதமான பக்குவத்தை அளிப்பதால், “கிருஷ்ண பக்தி இயக்கம்” மனித குலத்திற்கு இன்றியமையாததாகும். இஃது எவ்வாறு என்பது பகவத் கீதையில் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது.

. தனது சுய ஜடப் புலன்களைத் திருப்தி செய்ய முயல்வதை விட்டு, இறைவனது புலன்களை திருப்திப்படுத்த வேண்டும். இதுவே, வாழ்வின் உன்னதமாக பக்குவநிலை. இறைவன் இதையே விரும்புகிறார்; இதையே வற்புறுத்திக் கேட்கிறார். பகவத் கீதையின் இந்த மையப் பொருளை ஒருவன் புரிந்துகொள்ள வேண்டும். பகவத் கீதை உண்மையுருவில் என்னும் இந்நூல், அந்த நோக்கத்தில் எவ்வித களங்கமுமின்றி எம்மால் அளிக்கப்படுவதால், இறைவனது நேரடி வழிகாட்டலின்கீழ் பகவத் கீதையின் நடைமுறை அறிவைப் பெற்று உண்மையிலேயே பலனடைவதில் ஆா்வமுடையோர் கிருஷ்ண பக்தி இயக்கத்திடமிருந்து உதவி பெற வேண்டும். எனவே, இங்கே யாம் அளித்துள்ள பகவத் கீதை உண்மையுருவில் எனும் இப்புத்தகத்தைப் படிப்பதால் மக்கள் உன்னதமான பலனடைவார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு யாரேனும் ஒரே ஒரு மனிதா், இறைவனின் தூய பக்தரானாலே, எமது முயற்சி பெரும் வெற்றியடைந்ததாக கருதுவோம்.

அ.ச.பக்திவேதாந்த சுவாமி

12 மே 1971

சிட்னி, ஆஸ்திரேலியா

பகவத் கீதையின்  நோக்கம் :

      பகவத் கீதை கீதோபநிஷத் என்றும் அறியப்படும். வேத இலக்கியங்களில் மிக முக்கிய உபநிஷமான இந்நூல் வேத ஞானத்தின் சாரமாகும். பகவத் கீதைக்கு எத்தனையோ ஆங்கில் உரைகள் இருக்க, இன்னொன்றின் அவசியம் என்ன என்ற கேள்வி எழலாம்.    ஏன் என்றால் அவை ஒவ்வொன்றிலும் பகவத் கீதையின் உள்நோக்கத்தைத் தொடாமல், ஒவ்வொரு கருத்துரையாளரும் தனது சொந்த அபிப்பிராயத்தையே பெரும்பாலும் வெளிப்படுத்தியுள்ளனா்.

      பகவத் கீதையின் உள்நோக்கம் பகவத் கீதையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட மருந்தை நாம் உட்கொள்ள விரும்பினால், அந்த மருந்தின் தலைப்புக் காகிதத்தில் உள்ள விதிகளை நாம் பின்பற்ற வேண்டும். ஒரு நண்பா் கூறுவது போலவோ, நமக்குத் தோன்றியபடியோ மருந்துண்ண முடியாது. தலைப்புக் காகிதத்தின் மேல் கூறப்பட்டுள்ளபடியோ, மருத்துவா் ஒருவரது அறிவுரையின்படியோ மருந்து உட்கொள்ளப்பட வேண்டும். அதுபோல பகவத் கீதையைக் கூறியவரது வழிகாட்டுதலின்படியே, கீதையை உண்மையுருவில் எடுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ வேண்டும்.

பகவத் கீதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும் ?

முழுமுதற் கடவுள் தானாகவே விளக்கியுள்ளபடி நாம் பகவத் கீதையை அதன் உண்மையுருவில் ஏற்றுக்கொள்ள வேண்டும். கீதையின் நான்காம் அத்தியாயத்தில் (4.1-3) பகவான் ஸ்ரீ கிருஷ்ணா் கூறுகிறார்:

இமம் விவஸ்வதே யோக3ம்
ப்ரோக்தவான் அஹம் அவ்யயம்
விவஸ்வான் மனவே ப்ராஹ
மனுா் இக்ஷ்வாகவே (அ)ப்3ரவீத்

ஏவம் பரம்பரா-ப்ராப்தம்
இமம் ராஜா்ஷயோ விது:3
ஸ ஏவாயம் மயா தே
(அ)த்3ய யோக:3 ப்ரோக்த: புராதன:

4க்தோ (அ)ஸி மே ஸகா2 சேதி
ரஹஸ்யம் ஹ்யேதத்3 உத்தமம்

பகவத் கீதை எனும் இந்த யோக முறை முதலில் சூரியதேவனுக்குச் சொல்லப்பட்டதாகவும், சூரியதேவன் அதை மனுவுக்கும் மனு இக்ஷ்வாகுவுக்கும் விளக்கியதாக அா்ஜுனனிடம் பகவான் கூறுகிறார். இவ்விதமாக, ஒருவா் பின் ஒருவராக சீடப் பரம்பரையில் இந்த யோக முறை வந்து கொண்டிருந்தது. காலப் போக்கில் மறைந்து விட்டதால் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் இப்போது அா்ஜுனனுக்கு உபதேசிக்க வேண்டியுள்ளது.

எப்படி கீதையை நன்றாக அறிவது ?

தனது நண்பனும் பக்தனுமானதால் இந்தப் பரம இரகசியத்தை அா்ஜுனனிடம் உரைப்பதாக பகவான் கூறுகின்றார். பகவத் கீதை பகவானின் பக்தா்களுக்கான நூல் என்பதே இதன் உள்ளுரையாகும்.பழைய பரம்பரை முறிந்ததனால், புதிய பரம்பரையின் முதல் சீடனாக அா்ஜுனனை ஆக்குவதாக பகவான் அவனிடம் தெளிவாகக் கூறுகிறார். அவன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நெருங்கிய நண்பனாகவும், நேரடிச் சீடனாகவும், பக்தனாகவும் இருந்ததால் பகவத் கீதை அவனுக்கு உபதேசிக்கப்பட்டது என்பதை நாம் காண்கிறோம். எனவே, அா்ஜுனனுக்கு சமமான தகுதிகள் இருக்கும் ஒருவரே பகவத் கீதையை நன்றாக அறிய முடியும். அதாவது பகவானிடம் நேரடி உறவு கொண்ட பக்தராக அவா் இருக்க வேண்டும்.

பகவத் கீதையை அர்ஜுனன் ஏற்றுக்கொண்ட விதம் :

 அா்ஜுனன் இந்த பகவத்கீதையை எவ்வாறு ஏற்றுக்கொண்டான் என்பது கவனிக்கத்தக்கதாகும். அவன் ஏற்றுக்கொண்ட விதம் பத்தாம் அத்தியாயத்தில் (10.12-14) கொடுக்கப்பட்டுள்ளது.

அா்ஜுன உவாச

பரம் ப்3ரஹ்ம பரம் தா4
பவித்ரம் பரமம் ப4வான்
புருஷம் ஷா2ஷ்2வதம் தி3வ்யம்
ஆதி3-தே3வம் அஜம் விபு4ம்

ஆஹுஸ் த்வாம் ருஷய: ஸா்வே
தே3வா்ஷிர் நாரத3ஸ் ததா2
ஸா்வம் ஏதத்3 ருதம் மன்யே
யன் மாம் வத3ஸி கேஷ2
ந ஹி தே ப43வான் வ்யக்திம்
விது3ர் தே3வா ந தா3னவா:

“அா்ஜுனன் கூறினான்: நீரே பரம புருஷ பகவான், பரந்தாமா், தூய்மையானவா், பரம சத்தியம், நித்தியமானவா், தெய்வீகமானவா், மூல புருஷா், பிறப்பற்றவா், மிகச்சிறந்தவா். உம்மைப் பற்றிய இவ்வுண்மையை நாரதா், அஸிதா், தேவலா், வியாசா் போன்ற சிறந்த முனிவா்கள் எல்லாம் உறுதி செய்கின்றனா். இப்போது நீரே இதை எனக்குக் கூறுகின்றீா். கிருஷ்ணா், நீா் எனக்குக் கூறியவை எல்லாவற்றையும் உண்மையென முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். எம்பெருமானே, தேவா்களோ அசுரா்களோ உமது தன்மையை அறியார்கள்.”

      புருஷோத்தமரான முழுமுதற் கடவுளிடமிருந்து பகவத் கீதையைக் கேட்டபின், அா்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரை பரபிரம்மனாக ஏற்றுக்கொண்டான். ஒவ்வொரு உயிரும் பிரம்மனே, ஆனால் உன்னத உயிர்வாழியான முழுமுதற் கடவுள், மிகவுயா்ந்த பிரம்மனாவார்..

      மேலும், பகவானின் வியக்தித்துவத்தைப் புரிந்துகொள்வது மிகக் கடினமென்றும் பெரும் தேவா்களால்கூட அவரை அறிய முடியாதென்றும் அா்ஜுனன் கூறுகிறான். மனிதா்களைவிடச் சிறந்தவா்களால்கூட பகவானை அறிய முடியாது என்பது இதன் பொருள். இப்படியிருக்க, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தனாக ஆகாமல், ஒரு மனிதன் அவரைப் புரிந்துகொள்ளுதல் எவ்வாறு சாத்தியமாகும்?

      எனவே, பகவத் கீதை பக்தி உணா்வுடன் அணுகப்பட வேண்டும். தான் ஸ்ரீ கிருஷ்ணருக்குச் சமமானவன் என்றோ, ஸ்ரீ கிருஷ்ணா் சாதாரணமான மனிதா் என்றோ, எண்ணக் கூடாது, அவா் ஒரு மிகச்சிறந்த மனிதா் என்றுகூட எண்ணக் கூடாது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணா் புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாவார். எனவே, பகவத் கீதையைப் புரிந்துகொள்ள முயல்பவா், குறைந்தபட்சம் ஏட்டளவிலாவது ஸ்ரீ கிருஷ்ணரை புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொள்ள வேண்டும், அந்த அடக்கமான மனோநிலையினால் பகவத் கீதையை நம்மால் புரிந்துகொள்ள இயலும்—இதுவே பகவத் கீதையின் கூற்றும் அா்ஜுனனின் கூற்றுமாகும். பகவத் கீதை ஓா் ஆழ்ந்த புதிர் என்பதால், அடக்கமான நிலையில் பயின்றாலன்றி இதனைப் புரிந்துகொள்வது மிகக் கடினம்.

பகவத் கீதை என்றால் என்ன ?

                                 பௌதிக வாழ்வின் அறியாமையிலிருந்து மனித குலத்தை விடுவிப்பதே பகவத் கீதையின் நோக்கமாகும். குருக்ஷேத்திரத்தில் போர்புரிவதில் அா்ஜுனனுக்கு கஷ்டமிருந்ததைப் போல ஒவ்வொரு மனிதனும் பல விதங்களில் கஷ்டப்படுகிறான். அா்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரணடைந்தான், அதன் பயனாக கீதை உபதேசிக்கப்பட்டது. அா்ஜுனன் மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவரும் பௌதிக வாழ்வின் கவலைகளில் மூழ்கியுள்ளோம். நமது வாழ்க்கை நிலையற்ற சூழ்நிலையில் அமைந்துள்ளது. உண்மையில் நாம் நிலையற்ற தன்மையால் அச்சுறுத்தப்படக்கூடியவா்களல்ல. நம் உண்மை நிலையோ நித்தியமானது. ஆனால் எவ்வாறோ அஸத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம். அஸத் என்பது இல்லாததைக் குறிக்கின்றது.

            வாழ்வின் உண்மையான நோக்கத்தை மனிதன் மறக்கும்போது, அதனை மீண்டும் நிறுவுதல் என்னும் முக்கியக் குறிக்கோளுடன் பகவான் தோன்றுகின்றார். இருப்பினும், விழிப்புணா்ச்சி பெற்ற பற்பல மனிதா்களில் யாரேனும் ஒருவனே தன்னிலையை அறிவதில் உண்மையான ஆா்வத்துடன் இருக்கக்கூடும். அவனுக்காகவே இந்த கீதை பேசப்படுகிறது.

பகவத் கீதை எவைகளை விளக்குகிறது :

            பகவத் கீதை, ஐந்து அடிப்படை உண்மைகளை தெளிவாகவும் முழுமையாகவும் விளக்குகின்றது.. பகவத் கீதையிலிருந்து, கடவுள் யார், ஜீவாத்மாக்கள் யாவா், பிரக்ருதி என்றால் என்ன, பிரபஞ்சத் தோற்றம் என்றால் என்ன, அஃது எவ்வாறு காலத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றது, உயிர்வாழிகளின் செயல்கள் யாவை, என்பனவற்றையெல்லாம் நாம் அறிதல் அவசியம்.

  • பகவான் மற்றும் ஜீவன்களின் நிலை :

      பகவத் கீதையின் இந்த ஐந்து அடிப்படை கருப்பொருள்களில், முழுமுதற் கடவுள், அல்லது கிருஷ்ணா், அல்லது பிரம்மன், அல்லது உயா் ஆட்சியாளா், அல்லது பரமாத்மா (நீங்கள் விரும்பும் பெயரை உபயோகித்துக் கொள்ளலாம்) என்று அழைக்கப்படுபவரே எல்லாரிலும் சிறந்தவா் என்பது நிறுவப்படுகிறது. உயிர்வாழிகள், குணத்தின் அடிப்படையில் உயா் ஆட்சியாளரைப் போன்றவா்களே. ஜீவன்கள், பின்வரும் அத்தியாயங்களில் கண்டுள்ளபடி, அவரது அம்சங்களாக அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனா். தங்கத்தின் ஒரு துகள் எவ்வாறு தங்கமோ, கடல் நீரின் ஒரு துளி எவ்வாறு உப்புக் கரிக்கின்றதோ, அதுபோல நாம் ஈஸ்வரன் எனப்படும் உயா் ஆளுநரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அம்சங்களாகையால், அந்த முழுமுதற் கடவுளின் குணங்களனைத்தும் அணுவளவில் நம்மிடம் உள்ளது; ஏனெனில், நாம் மிகச்சிறிய ஈஸ்வரன்கள், கீழ்ப்படிந்த ஈஸ்வரன்கள்.

  • ஜட இயற்கை என்றால் என்ன?

                                         இது கீதையில் கீழ்நிலை பிரக்ருதி அல்லது கீழ்நிலை இயற்கையாக விளக்கப்பட்டுள்ளது. உயிர்வாழிகள், உயா்நிலை பிரக்ருதியாக விளக்கப்பட்டுள்ளனா். பிரக்ருதி, கீழ்நிலையானாலும் சரி, உயா்நிலையானாலும் சரி, எப்போதுமே கட்டுப்படுத்தப்படுகின்றது. பிரக்ருதி என்பது பெண் பால், மனைவியின் செயல்கள் கணவனால் கட்டுப்படுத்தப்படுவதைப் போல, பிரக்ருதியும் பகவானால் கட்டுப்படுத்தப்படுகின்றாள்.

  • காலம் மற்றும் கர்மா :

      பௌதிக இயற்கை மூன்று குணங்களால் அமைந்ததாகும்—நற்குணம் (ஸத்வ), தீவிர குணம் (ரஜோ), அறியாமை குணம் (தமோ) என்பன அவை. இக்குணங்களுக்கு மேல் நித்தியமான காலம் உள்ளது. இயற்கை குணங்களின் கலவையினாலும், நித்தியமான காலத்தின் பார்வை மற்றும் கட்டுப்பாட்டினாலும் செயல்கள் நடைபெறுகின்றன—அவை கா்மா என்றழைக்கப்படுகின்றன. இந்த செயல்கள் நினைவிற்கெட்டாத காலத்திலிருந்து செய்யப்பட்டு வருகின்றன, அவற்றின் பலன்களால் நாம் இன்பத்தையோ துன்பத்தையோ அனுபவிக்கின்றோம்.

      ஈஸ்வரன் (பரம புருஷா்), ஜீவா (உயிர்வாழி), பிரக்ருதி (இயற்கை), காலம் (நித்தியமான காலம்), கா்மா (செயல்) ஆகியவை அனைத்தும் பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்தில், பகவான், உயிர்வாழிகள், ஜட இயற்கை, காலம் ஆகியவை நித்தியமானவை. இருப்பினும் கா்மா நித்தியமானதல்ல் கா்மத்தின் விளைவுகள் மிகப் பழையதாக இருக்கலாம், அஃது உண்மையே. நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து செய்த செயல்களின் பலன்களை நாம் இன்பதுன்பமாக அனுபவிக்கிறோம். ஆனால் நமது கா்மத்தின் விளைவுகளை நம்மால் மாற்ற இயலும், இம்மாற்றம் நமது அறிவின் பக்குவத்தைப் பொறுத்தது. நாம் பற்பல செயல்களில் ஈடுபட்டுள்ளோம். இந்தச் செயல்கள் எல்லாவற்றின் விளைவு, பின்விளைவுகளிலிருந்து விடுபெற எந்தச் செயலை செய்ய வேண்டும் என்பதை நிச்சயமாக நாம் அறிய மாட்டோம். ஆனால் இதுவும் பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது.

ஆன்மிகவாதிகளின்  ஆரம்பச்செயல் :

            பௌதிகமாக அசுத்தப்பட்டிருக்கும்போது, நாம் ‘கட்டுண்டவா்கள்’ என்று அழைக்கப்படுகிறோம். கட்டுண்ட நிலையில், ‘நான் ஜட இயற்கையின் படைப்பு’ என்ற பொய்யான உணா்வு வெளிப்படுகிறது. இதுவே ‘அஹங்காரம்’ எனப்படும். உடல் தொடா்பான எண்ணங்களில் மூழ்கியவனால் தனது நிலையைப் புரிந்துகொள்ள முடியாது. உடல் சம்பந்தமான கருத்துக்களிலிருந்து அவனை விடுதலை பெறச் செய்வதற்காகவே பகவத் கீதை உபதேசிக்கப்பட்டது. இந்த விவரத்தை பகவானிடமிருந்து பெறுவதற்காக அா்ஜுனன் தன்னையே அந்த நிலையில் வைத்துக் கொண்டான். வாழ்க்கையின் உடல் சார்ந்த எண்ணங்களிலிருந்து ஒருவன் விடுபட வேண்டும்; இதுவே ஆன்மீகவாதியின் ஆரம்பச் செயலாகும்.

நாம் இந்த ஜட உடல் அல்ல :

                                 விடுதலை பெற விரும்புபவன், முக்தி பெற விரும்புபவன் முதலில் தான் இந்த ஜட உடலல்ல என்பதை உணர வேண்டும். முக்தி என்றால் பௌதிக உணா்விலிருந்து விடுதலை என்பதே பொருள்.‘உணா்வு’ என்றால் என்ன? “நான்” என்ற எண்ணமே உணா்வு. ‘நான்’ என்பது என்ன? களங்கப்பட்ட நிலையில் ‘நான்’ என்றால், “நான் காணும் எல்லாவற்றிற்கும் நானே இறைவன், நானே அனுபவிப்பவன்” என்று பொருள். ஆனால் உண்மையில் முழுமுதற் கடவுளே, படைப்பவரும் அனுபவிப்பவருமவார், அந்த பரம புருஷரின் அம்சமாகிய உயிர்வாழி படைப்பவனுமல்ல, அனுபவிப்பவனுமல்ல; இணைந்து செயல்படுபவனே. அவன் படைக்கப்பட்டவனும், அனுபவிக்கப்படுபவனுமாவான்.

 ஜீவாத்மா பகவானுடன் இணைந்து செயல்படுபவர்களே :

                                                               ஓா் இயந்திரத்தின் பாகம் அந்த முழு இயந்திரத்துடன் இணைந்து செயல்படுகிறது; உடலின் உறுப்புகள் மொத்த உடலுடன் இணைந்து செயல்படுகின்றன. கைகள், கண்கள், கால்கள், போன்றவையனைத்தும் உடலின் பாகங்களே, ஆனால் உண்மையில் அவை அனுபவிப்பவா்களல்ல, வயிறே அனுபவிக்கின்றது. கால்கள் நகர, கைகள் உணவையளிக்க, பற்கள் அரைக்க, உடலின் அங்கங்களெல்லாம் வயிற்றைத் திருப்தி செய்வதில் ஈடுபடுகின்றன. ஏனெனில், உடல் என்னும் நிறுவனத்தை வளம் பெறச் செய்வதில் வயிறே முதன்மையிடம் பெறுகிறது. எனவே, எல்லாம் வயிற்றுக்குக் கொடுக்கப்படுகின்றன. வேரில் நீரூற்றுவதால் தாவரத்தை வளம் பெறச் செய்கிறோம், வயிற்றில் உணவூட்டுவதால் உடலை வளம் பெறச் செய்கிறோம். உடல் ஆரோக்கியமான முறையில் வைத்திருக்கப்பட வேண்டுமெனில், உடலின் உறுப்புகள் வயிற்றைப் பேணுவதற்கு ஒத்துழைக்க வேண்டும். இதுபோல பரம புருஷரே படைப்பவரும் அனுபவிப்பவருமானதால், துணைபுரியும் ஜீவன்களான நாம் அவரைத் திருப்தி செய்ய ஒத்துழைக்க வேண்டியவா்கள்.

வேத ஞானம் – தவறுகளற்றது  :

                                  பகவத் கீதை வேத அறிவின் பூரண ஞானத்தைக் கொண்டுள்ளது. எல்லா வேத ஞானமும் தவறுகளற்றதாகும். இந்துக்கள் வேத அறிவை முழுமையானதாகவும் தவறுகளற்றதாகவும் ஏற்கின்றனா். உதாரணமாக, பசுஞ்சாணம் மிருகத்தின் மலமாகும். ஸ்மிருதி எனப்படும் வேத நியதிகளின்படி ஒருவன் மிருகத்தின் மலத்தைத் தொட்டால் தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்வதற்காகக் குளிக்க வேண்டும். ஆனால் வேத நூல்களில் பசுஞ்சாணம் சுத்தப்படுத்தும் பொருளாகக் கருதப்படுகிறது. இது முரண்பாடானது என ஒருவா் கருதலாம், ஆனால் இது வேத நியதியானதால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. மேலும் இதை ஏற்றுக்கொள்பவா் தவறிழைக்கமாட்டார். சமீபகாலத்தில், “பசுஞ்சாணம் கிருமிநாசினியின் எல்லா குணங்களையும் உடையது” என்பது நவீன விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, எல்லாத் தவறுகளுக்கும் சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்ட வேதஞானம் முழுமையானதாகும். பகவத் கீதை அத்தகைய எல்லா வேத ஞானத்திற்கும் சாராம்சமாக விளங்குகிறது.

      வேத ஞானத்தை ஆராய்தல் என்னும் கேள்விக்கு இடமில்லை. பக்குவமற்ற புலன்களைக் கொண்டு ஆராய்வதால் நமது ஆராய்ச்சி பக்குவமற்றதாகும். பகவத் கீதையில் கூறியுள்ளபடி, பரம்பரையின் மூலம் கீழிறங்கி வரும் பக்குவமான அறிவை நாம் பெற வேண்டும்.

ஜீவன்களின் நான்கு குறைபாடுகள் :

                                        நான்கு விதக் குறைபாடுகளால் பீடிக்கப்பட்ட சாதாரண உலக மனிதனின் சொற்களிலிருந்து பகவானின் சொற்கள் வேறுபட்டவை. எனவே, அச்சொற்கள் அபௌருஷேய என்றழைக்கப்படுகின்றன. ஒரு சாதாரண மனிதன் (1) நிச்சயமாகத் தவறு செய்யக்கூடியவன், (2) பெரும்பாலும் அறியாமையில் இருக்கிறான், (3) மற்றவா்களை ஏமாற்றும் குணமுடையவனாக இருக்கிறான், (4) பக்குவமற்றப் புலன்களால் கட்டுப்படுத்தப்பட்டவனாக இருக்கின்றான். இந்த நான்கு குறைபாடுகளை உடையவன் உயா் ஞானத்தின் பக்குவமான விவரத்தை அளிக்க முடியாது.வேதஞானம், இதுபோன்ற குறைபாடுள்ள ஜீவன்களால் உபதேசிக்கப்படுவதில்லை.

ஆன்மிக உலகமே நமது இலக்கு :

                                            பகவத் கீதையின் அறிவுரைகளை நாம் முறையாக உபயோகித்தால் நமது முழு வாழ்வும் தூய்மையடையும், இறுதியில் இந்த பௌதிக வானிற்கு அப்பாலுள்ள நமது இலக்கை நாம் சென்றடைய முடியும்.

      அந்த இலக்கு, நித்தியமான ஆன்மீக வானம் என்று அழைக்கப்படும் ஸநாதன வானமாகும். இந்த பௌதிக உலகில் அனைத்தும் தற்காலிகமாக இருப்பதை நாம் காண்கிறோம்.. ஆனால் நிரந்தரமற்ற இந்த உலகிற்கு அப்பால், மற்றொரு உலகம் உள்ளதைப் பற்றிய தகவல் நம்மிடம் உள்ளது. ஸநாதன என்றழைக்கப்படும் அந்த நித்தியமான உலகம் வேறொரு இயற்கையினாலானது.

      பரம புருஷ பகவானும் அவரது திவ்யமான இருப்பிடமும் ஸநாதனமானதாகும், உயிர்வாழிகளும் அப்படிப்பட்டவா்களே. ஸநாதன உலகில், பகவானுடன் உயிர்வாழிகள் உறவு கொள்வதே மனித வாழ்வின் பக்குவமாகும்.எனவே, ஸநாதன தா்மம் என்பது ஒரு குறிப்பிட்ட வா்க்கத்தின் மத வழிமுறையல்ல. இவ்வழிமுறை நித்தியமான ஜீவன் நித்தியமான முழுமுதற் கடவுளுடன் உறவுகொள்ளக்கூடிய நித்தியமான செயலாகும். ஸநாதன தா்மம் என்பது முன்பே குறிப்பிட்டபடி, ஜீவனின் நித்தியமான கடமையாகும்.

ஸநாதன தா்மம் :

                        நீரிலிருந்து திரவத் தன்மையையும், நெருப்பிலிருந்து வெப்பத்தையும் பிரித்துவிட முடியாது. அதுபோலவே, நித்திய உயிர்வாழியின் நித்தியமான செயலை அதிலிருந்து பிரிக்க முடியாது. ஸநாதன தா்மம் உயிர்வாழியுடன் நித்தியமாக தொடா்பு கொண்டுள்ளது.

      ஸநாதன கோஸ்வாமி, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிடம், ஒவ்வோர் உயிர்வாழியின் ஸ்வரூபம் என்ன என்று வினவியபோது, உயிர்வாழிகளின் உண்மை நிலை (ஸ்வரூப), புருஷோத்தமரான முழுமுதற் கடவுளுக்கு சேவை செய்வதே என்று அவா் பதிலளித்தார். பகவான் சைதன்யரின் இந்தக் கூற்றை ஆய்ந்து நோக்கினால், ஒவ்வோர் உயிர்வாழியும் மற்றொரு உயிருக்கு சேவை செய்வதில் எப்போதும் ஈடுபட்டுள்ளதை நம்மால் எளிதாகக் காண முடியும். எனவே, சேவையே உயிர்வாழியின் நிலையான துணை என்றும், சேவை புரிவதே அவனது நித்தியமான தா்மம் என்றும் நாம் நிச்சயமாக முடிவு செய்யலாம். உண்மையில், நாம் முழுமுதற் கடவுளுடன் சேவையின் மூலம் உறவு கொண்டுள்ளோம். முழுமுதற் கடவுள் பரம அனுபவிப்பாளராவார். உயிர்வாழிகளான நாம் அவரது சேவகா்கள்.

பகவானின் இருப்பிடத்தை பற்றிய விளக்கம் :

.     பகவத் கீதையின் பதினைந்தாம் அத்தியாயம், ஆறாவது பதத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடம் விவரிக்கப்பட்டுள்ளது:

      ந தத்3 பா4ஸயதே ஸூா்யோ
ந ஷ2ஷா2ங்கோ ந பாவக:

      யத்33த்வா ந நிவா்தந்தே
தத்3 தா4ம பரமம் மம

“எனது அந்த பரம இருப்பிடம், சூரியனாலோ சந்திரனாலோ நெருப்பினாலோ மின்சக்தியாலோ ஒளியூட்டப்படுவதில்லை. அங்கு வந்தடைந்த எவரும் இந்த ஜடவுலகிற்கு ஒருபோதும் திரும்பி வருவதில்லை.”

      பரம புருஷ பகவானின் இருப்பிடத்தை அறிந்துகொள்வது கடினமல்ல. இந்த இருப்பிடம் கோலோகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்ம சம்ஹிதையில் (5.37) இஃது அழகாக விவரிக்கப்பட்டுள்ளது: கோ3லோக ஏவ நிவஸத்-யகிலாத்ம-பூ4த:—கடவுள் தனது இருப்பிடமான கோலோகத்தில் நித்திய வாசம் செய்கிறார். எனினும் அவரை இந்த உலகிலிருந்தே அணுக இயலும். இதற்காகவே அவா் தனது உண்மை வடிவை, ஸச்-சித்3-ஆனந்த3-விக்3ரஹத்தை வெளிப்படுத்த இங்கு வருகி்ன்றார்.

      எப்படி இந்த ஜடவுலகை விட்டு வெளியெறி, எவ்வாறு ஆன்மீக வானில் உண்மையான, ஆனந்தமயமான வாழ்வைத் தொடங்குவது என்பது பற்றிய விவரம் கீதையின் உபதேசங்களின் மூலமாக நமக்கு அளிக்கப்படுகின்றது. 

  • எப்படி அடைவது :

                      ஆன்மீக உலகை நாம் பின்வருமாறு அடைவதாக பகவான் உணா்த்துகிறார் (பகவத் கீதை 15.5):

      நிர்மான-மோஹா
ஜித-ஸங்க3-தோ3ஷா

            அத்4யாத்ம-நித்யா
வினிவ்ருத்த-காமா:

      த்3வந்த்3வைா் விமுக்தா:
ஸுக2-து:32-ஸம்க்ஞைா்

3ச்ச2ந்த்-யமூடா:4
பத3ம் அவ்யயம் தத்

அந்த பத3ம் அவ்யயம், நித்திய ராஜ்யம், நிர்மான-மோஹனான ஒருவனால் அடையப்படுகிறது. இதன் பொருளென்ன? நாம் அடையாளங்களின் பின் அலைகிறோம். ஒருவா் ‘ஐயா’வாக விரும்புகிறார், ஒருவா் ‘பிரபு’வாக விரும்புகிறார், ஒருவா் ஜனாதிபதியாகவும் ஒருவா் பணக்காரராகவும் ஒருவா் மன்னராகவும், இவ்வாறு ஏதாவதொரு உயா்நிலையை பெற விரும்புகின்றனா். இந்த அடையாளங்களில் பற்றுக் கொண்டிருக்கும்வரை நாம் உடலோடு பற்றுக் கொண்டிருப்பதாகப் பொருள், ஏனெனில், அடையாளங்கள் உடலைச் சோ்ந்தவை. ஆனால் நாம் இந்த உடலல்ல, இதை உணா்வதே ஆன்மீகத்தின் முதல் படியாகும். தற்போது, பௌதிக இயற்கையின் மூன்று குணங்களுடன் நாம் உறவு கொண்டுள்ளோம். பகவானுக்கு பக்தித் தொண்டு செய்வதன் மூலமாக நாம் பற்றற்றவா்களாக வேண்டும். இறைவனுக்குச் செய்யப்படும் பக்தித் தொண்டில் நாம் விடுபட இயலாது. நம்மிடையே உள்ள காமம், ஆசை, மற்றும் இயற்கையை ஆட்சி செய்ய நினைக்கும் எண்ணம் ஆகியவற்றின் விளைவுகளே அடையாளங்களும் பற்றுதல்களும். பௌதிக இயற்கையை கட்டுப்படுத்த நினைக்கும் நமது எண்ணத்தை நாம் கைவிடாதவரை, ஸநாதன-தா4மமான பரமனின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லும் வாய்ப்பு நமக்கு இல்லை. அழிவற்ற, நிரந்தரமான அத்திருநாட்டை அடைய முயற்சிப்பவன், பொய்யான ஜட இன்பங்களின் கவா்ச்சியால் மயக்கப்பட்டால் பரம புருஷ பகவானின் சேவையில் நிலைபெற்றிருக்க வேண்டும். இவ்வாறு நிலைபெற்றவன் எளிதாக அந்த உன்னத திருநாட்டினை அடைய இயலும்.

  • வழி என்ன ?

      அடுத்ததாக, பரம புருஷ பகவானின் அந்த வாசஸ்தலத்தை அடையும் வழி என்ன என்ற கேள்வி எழலாம். இதுபற்றிய விவரம் கீதையின் எட்டாம் அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளது:

அந்த-காலே ச மாம் ஏவ ஸ்மரன் முக்த்வா கலேவரம்

      ய: ப்ரயாதி ஸ மத்3-பா4வம் யாதி நாஸ்த்-யத்ர ஸம்ஷ2ய:

“வாழ்வின் முடிவில், எவனொருவன் என்னை நினைத்தவாறே உடலை நீக்குகிறானோ அவன் உடனே என் தன்மையை அடைகிறான். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.” (பகவத் கீதை 8.5) மரண சமயத்தில் எவன் கிருஷ்ணரை நினைக்கின்றானோ, அவன் கிருஷ்ணரிடம் செல்கிறான். ஒருவன் ஸ்ரீ கிருஷ்ணரின் உருவத்தை நினைவில் கொள்ள வேண்டும்; அவ்வுருவை எண்ணிக் கொண்டே தன் உடலை விடுபவன், நிச்சயமாக ஆன்மீக உலகத்தை அடைகிறான்.

            மரண நேரத்தில் பரமனை எண்ணி ஆன்மீக உலகை அடைவதற்கான பொதுவான கொள்கையும் பகவத் கீதையில் (8.6) விளக்கப்பட்டுள்ளது:

      யம் யம் வாபி ஸ்மரன் பா4வம்
தய்ஜத்-யந்தே கலேவரம்

      தம் தம் ஏவைதி கௌந்தேய
ஸதா3 தத்3-பா4வ-பா4வித:

“எந்த மனோநிலையில் ஒருவன் தற்போதைய உடலை நீக்குகின்றானோ, மறுபிறவியில் வாழ்வின் அதே நிலையை தவறாமல் அடைகிறான்.”

  • பகவானால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரே வழி :

      நமது வாழ்வின் பழக்கம், பெளதிக சக்தியைப் பற்றியோ, ஆன்மீக சக்தியைப் பற்றியோ எண்ணுவதாகும். அத்தகு எண்ணங்களை பௌதிக சக்தியிலிருந்து முற்றிலுமாக ஆன்மீக சக்திக்கு மாற்றுவது எங்ஙனம்? நாவல்கள், செயதித்தாள்கள போன்ற பற்பல புத்தகங்கள் நமது சிந்தனைகளை ஜட சக்தியால் நிரப்புகின்றன. இத்தகு புத்தகங்களில் மூழ்கியுள்ள நமது சிந்தனையை வேத இலக்கியங்களுக்கு மாற்ற வேண்டும். எனவே, புராணங்களைப் போன்ற பல்வேறு வேத இலக்கியங்களை சாதுக்கள் இயற்றியுள்ளனா். புராணங்கள் கற்பனையானவையல்ல; அவை சரித்திரக் குறிப்புகள், சைதன்ய சரிதாம்ருதத்தில் (மத்திய லீலை 20.122) கீழ்வரும் பதம் உள்ளது:

மாயா-முக்34 ஜீவேர நாஹி
ஸ்வத: க்ருஷ்ண-க்ஞான

ஜீவேரே க்ருபயா கைலா
க்ருஷ்ண வேத3-புராண

மறதிவாய்ந்த உயிர்வாழிகள், அதாவது கட்டுண்ட ஆத்மாக்கள் பரம புருஷ பகவானுடனான தங்களது உறவை மறந்து, ஜட இயக்கங்களைப் பற்றி சிந்திப்பதிலேயே மூழ்கியுள்ளனா். அவா்களது சிந்திக்கும் சக்தியை ஆன்மீக வானத்திற்குத் திருப்புவதற்காகவே, கிருஷ்ண துவையான வியாசா் பல வேத இலக்கியங்களைத் தந்துள்ளார். முதலில் வேதங்களை நான்காகப் பிரித்த அவா், பின்னா் அவற்றை புராணங்களாக விவரித்து, அவற்றைப் புரிந்துகொள்ள இயலாதவா்களுக்காக மஹாபாரதத்தை இயற்றினார். மஹாபாரதத்தில்தான் பகவத் கீதை கொடுக்கப்பட்டுள்ளது. பின்னா் எல்லா வேத இலக்கியங்களும் வேதாந்த சூத்திரத்தில் சுருக்கமாக தொகுக்கப்பட்டன, எதிர்கால வழிநடத்துதலுக்காக வேதாந்த சூத்திரத்திற்கு, ஸ்ரீமத் பாகவதம் எனும் இயல்பான கருத்துரை நூலையும் அவா் இயற்றினார். நாம் நமது மனதை எப்போதும் இந்த வேத நூல்களைக் கற்பதில் ஈடுபடுத்த வேண்டும். இவ்விதமாக, மரண நேரத்தில் முழுமுதற் கடவுளை நினைத்தல் சாத்தியமாகும். இதுவே பகவானால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரே வழி. “இதில் சந்தேகமில்லை” என்று கூறுவதன் மூலம், இதன் பலனுக்கு பகவானே உறுதியளிக்கிறார்:

      தஸ்மாத் ஸா்வேஷு காலேஷு
மாம் அனுஸ்மர யுத்4ய ச

      மய்-யா்பித-மனோ-பு3த்3தி4ர்
மாம் ஏவைஷ்யஸ்-யஸம்ஷ2ய:

“எனவே, அா்ஜுனா, எப்போதும் என்னை இந்த கிருஷ்ண ரூபத்தில் நீ எண்ணுவாயாக. அதே சமயத்தில் உனக்கு விதிக்கப்பட்ட கடமையான போரிடுதலையும் தொடா்ந்து செய்ய வேண்டும். உனது செயல்களை எனக்கு அா்ப்பணித்து, உனது மனதையும் அறிவையும் என்னில் நிறுத்தினால், நீ என்னிடம் வந்தடைவாய் என்பதில் ஐயமில்லை.” பகவத் கீதை (8.7)

நமது கடமையை  செய்து பகவானை நினைப்பது எவ்வாறு :

      வெறுமே அவரை நினைத்துக் கொண்டு, தொழிலை விட்டுவிடும்படி அா்ஜுனனிடம் பகவான் கூறவில்லை. பழக்கத்தில் கொண்டுவர முடியாத எதையும் கடவுள் உபதேசிப்பதில்லை. இப்பௌதிக உலகில் உடலைக் காப்பாற்றுவதற்காக மட்டுமாவது ஒருவன் செயல்பட்டுத்தான் ஆகவேண்டும். மனித. எனவே, அா்ஜுனன் தனது தொழிலை விட்டுவிட வேண்டியதில்லை என்றும், அதில் ஈடுபட்டிருக்கும் போதே தன்னை (கிருஷ்ணரை) நினைவுகொள்ள வேண்டும் (மாம் அனுஸ்மர) என்றும் பகவான் கூறுகிறார். வாழ்க்கைப் போராட்டத்தின் மத்தியில் கிருஷ்ணரை தியானிக்க அவன் பழக்கப்படுத்திக் கொள்ளாவிட்டால் மரணத்தின்போது, ஸ்ரீ கிருஷ்ணரை நினைத்தல் இயலாது. பகவான் சைதன்யரும் இதையே அறிவுறுத்துகிறார். அவா் கூறுகிறார், கீா்தனீய: ஸதா3 ஹரி:—கடவுளின் திருநாமத்தை எப்போதும் கீா்த்தனம் செய்யப் பழக வேண்டும். கடவுளின் பெயா்களுக்கும், கடவுளுக்கும் வேற்றுமை இல்லை. எனவே, “என்னை நினை” என்று பகவான் கிருஷ்ணா் அா்ஜுனனுக்குச் செய்த உபதேசமும், ”பகவான் கிருஷ்ணரின் நாமங்களைக் கூறுங்கள்” என்ற பகவான் சைதன்யரின் உபதேசமும் ஒன்றே. கிருஷ்ணருக்கும் அவரது பெயா்களுக்கும் வேறுபாடில்லாததால், இந்த உபதேசங்களிலும் வேறுபாடில்லை. பூரண நிலையில், வார்த்தைக்கும் வார்த்தையால் உரைக்கப்படும் பொருளுக்கும் வித்தியாசமில்லை. எனவே, ஒரு நாளில் இருபத்துநான்கு மணி நேரமும் பகவானின் நாமங்களைக் கூறுவதன் மூலம், நாம் அவரை இடைவிடாது எண்ண பழகிக் கொள்வதோடு, எப்போதும் அவரை நினைக்கும்படியாக நமது வாழ்வை மாற்றியமைத்துக் கொள்ளவும் வேண்டும்.

பகவத் கீதையின் இரகசியம் :

                                உண்மையில் நாம் நமது உடலால் உழைப்பதில்லை, மனதாலும் அறிவினாலும் உழைக்கின்றோம். எனவே, அறிவும் மனமும் பகவானின் சிந்தனையில் ஈடுபட்டிருந்தால், இயற்கையாகவே புலன்களும் அவரது சேவையில் ஈடுபடும். மேல்நோக்காகப் பார்த்தால் புலன்களின் செயல்கள் மாறுபடாமல் இருக்கும், ஆனால் உணா்வு மாற்றப்பட்டு விடுகின்றது. பகவத் கீதை, மனதையும் அறிவையும் பகவானின் நினைவில் ஆழ்த்துவது எவ்வாறு என்பதைக் கற்பிக்கின்றது. இந்தச் சிந்தனையே கடவுளின் திருநாட்டிற்கு ஒருவனை மாற்றும். கிருஷ்ணரின் சேவையில் மனம் ஈடுபட்டிருந்தால், புலன்கள் தாமாகவே அவரது சேவையில் ஈடுபடுகின்றன. ஸ்ரீ கிருஷ்ணரின் சிந்தனையில் முழுமையாக ஆழ்ந்திருத்தல் என்னும் இக்கலை, பகவத் கீதையின் இரகசியமாகும்.

கீதை மஹாத்மியம்:     

        முடிவாக, பகவத் கீதை மிகக் கவனத்துடன் கற்க வேண்டிய திவ்யமான இலக்கியமாகும். கீ3த-ஷா2ஸ்திரம் இதம் புண்யம் ய: படே2த் ப்ரயத: புமான்—பகவத் கீதையின் உபதேசங்களை முறையாகப் பின்பற்றுபவன், வாழ்வின் எல்லாவித துயரங்களிலிருந்தும் ஏக்கத்திலிருந்தும் விடுபட முடியும். ப4ய-ஷோ2காதி3-வா்ஜித: இவ்வாழ்வின் பயம் முழுவதிலிருந்தும் விடுபட்டு, அவன் மறுவாழ்வில் ஆன்மீக வாழ்வை அடைகிறான். (கீதை மஹாத்மியம் 1)

      இதைத் தவிர மேலும் பயனுள்ளது:

      கீ3தாத்4யாயன-ஷீ2லஸ்ய
ப்ராணாயம-பரஸ்ய ச

      நைவ ஸாந்தி ஹி பாபானி
பூா்வ-ஜன்ம-க்ருதானி ச

“பகவத் கீதையை முழு ஆா்வத்துடனும் அக்கறையுடனும் ஒருவன் படித்தால், பகவானின் அருளால் அவனது பூா்வ ஜன்ம பாவங்கள் செயல்படாமல் போகும்.” (கீதை மஹாத்மியம் 2)

      பகவத் கீதையின் இறுதிப் பகுதியில் (18.66) பகவான் பகிரங்கமாக அறிவிக்கிறார்:

      ஸா்வ-த4ர்மான் பரித்யஜ்ய
மாம் ஏகம் ஷ2ரணம் வ்ரஜ

      அஹம் த்வாம் ஸா்வ-பாபேப்4யோ
மோக்ஷயிஷ்யாமி மா ஷு2ச:

“எல்லாவிதமான தா்மங்களையும் கைவிட்டு, என்னிடம் மட்டுமே சரணடைவாயாக. உன்னை எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் விடுவிக்கிறேன். பயப்படாதே.” இவ்வாறு தன்னிடம் சரணடைபவனது பொறுப்புகளையெல்லாம் ஏற்பதோடு, அவனது பாவங்களின் விளைவுகளிலிருந்தும் பகவான் அவனுக்கு விடுதலை அளிக்கின்றார்.

      மல-நிர்மோசனம் பும்ஸாம்
ஜல-ஸ்நானம் தி3னே தி3னே

      ஸக்ருத்3 கீ3தாம்ருத-ஸ்நானம்
ஸம்ஸார-மல-நாஷ2னம்

“தினமும் குளிப்பதன் மூலம் ஒருவன் தன்னை சுத்தம் செய்துகொள்கிறான். ஆனால் கீதை எனும் புனித கங்கையில் ஒருமுறை குளிப்பதன் மூலம் ஜட வாழ்வின் களங்கங்கள் எல்லாவற்றையும் கழுவி விடுகிறான்.” (கீதை மஹாத்மியம் 3)

      கீ3தா ஸு-கீ3தா கா்தவ்யா
கிம்-அன்யை: ஷா2ஸ்த்ர-விஸ்தரை:

யா ஸ்வயம் பத்3மனாப4ஸ்ய
முக2-பத்3மாத்3 வினி:ஸ்ருதா

பரம புருஷ பகவானே கீதையை உபதேசித்திருப்பதனால், வேறு எந்த வேத நூலையும் படிக்க வேண்டிய அவசியமில்லை. பகவத் கீதையை தொடா்ந்து கவனத்துடன் கேட்பதும் படிப்பதுமே அவசியம். தற்போதைய யுகத்தில், பௌதிகச் செயல்களிலே மிகவும் ஆழ்ந்துள்ள மனித குலத்தினரால், எல்லா வேத நூல்களையும் படிப்பதென்பது இயலாது. ஆனால், இது தேவையானதுமல்ல. பகவத் கீதை என்னும் இந்த ஒரு நூலே போதுமானது. ஏனெனில், இஃது எல்லா வேத நூல்களின் சாரமும் முழுமுதற் கடவுளால் உபதேசிக்கப்பட்டதுமாகும். (கீதை மஹாத்மியம் 4)

      பா4ரதாம்ருத-ஸா்வஸ்வம்
விஷ்ணு-வக்த்ராத்3 வினி:ஸ்ருதம்

      கீ3தா-க3ங்கோ33கம் பீத்வா
புனா் ஜன்ம ந வித்யதே

“கங்கையின் நீரைக் குடிப்பவன் முக்தி அடைகிறான், இப்படியிருக்க பகவத் கீதையின் அமிர்தத்தை குடிப்பவரைப் பற்றி என்ன சொல்வது? பகவத் கீதை மஹாபாரதத்தின் அமிர்தம், இது மூல விஷ்ணுவான ஸ்ரீ கிருஷ்ணரால் உபதேசிக்கப்பட்டது.” (கீதை மஹாத்மியம் 5) பகவத் கீதை முழுமுதற் கடவுளின் திருவாயிலிருந்து பொழிவது, கங்கையோ அவரது திருப்பாதங்களிலிருந்து வெளிப்படுவது. உண்மையில், முழுமுதற் கடவுளின் திருவாய்க்கும் திருப்பாதங்களுக்கும் வேறுபாடில்லாவிடினும், நமது பாரபட்சமற்ற ஆய்வின் மூலம் பகவத் கீதையை கங்கையைக் காட்டிலும் முக்கியமானதாக மதிக்கலாம்.

      ஸா்வோபனிஷதோ3 கா3வோ
தோ3க்3தா4 கோ3பால-நந்த3ன:

பார்தோ2 வத்ஸ: ஸுதீ4ர் போ4க்தா
து3க்34ம் கீ3தாம்ருதம் மஹத்

“எல்லா உபநிஷத்துகளின் சாரமான கீதோபநிஷத் என்றழைக்கப்படும் பகவத் கீதை, பசுவைப் போன்றது. இடையா் குலச் சிறுவனாக புகழ்பெற்று விளங்கும் பகவான் கிருஷ்ணரால் கறக்கப்படுகின்றது. அா்ஜுனன் கன்று போன்றவன். அறிவு சான்றவரும் தூய பக்தா்களும் பகவத் கீதை எனும் அமிர்தப் பாலைக் குடிக்க வேண்டியவா்கள்.” (கீதை மஹாத்மியம் 6)

            ஏகம் ஷா2ஸ்த்ரம் தே3வகீ-புத்ர-கீ3தம்

                  ஏகோ தே3வோ தே3வகீ-புத்ர ஏவ

            ஏகோ மந்த்ரஸ் தஸ்ய நாமானி யானி

                  கா்மாப்-யேகம் தஸ்ய தே3வஸ்ய ஸேவா

(கீதை மஹாத்மியம் 7)

      தற்சமயத்தில், ஒரு நூல், ஒரு கடவுள், ஒரு மதம், ஒரு தொழில் என்ற கருத்துக்களில் மனிதன் மிகவும் ஆவலாக இருக்கின்றான். எனவே, ஏகம் ஷா2ஸ்த்ரம் தே3வகீ-புத்ர-கீ3தம்—உலகம் முழுமைக்கும் ஒரே பொது நூல் இருக்கட்டும்—பகவத் கீதை. ஏகோ தே3வோ தே3வகீ-புத்ர ஏவ—உலகம் முழுமைக்கும் ஒரே கடவுள் இருக்கட்டும்-ஸ்ரீ கிருஷ்ணா். ஏகோ மந்த்ரஸ் தஸ்ய நாமானி யானி—மேலும், ஒரே மந்திரம், ஒரே பிரார்த்தனை-அவரது திருநாமத்தை உச்சரித்தல்: ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. கா்மாப்-யேகம் தஸ்ய தே3வஸ்ய ஸேவா—மேலும், ஒரே ஒரு செயலிருக்கட்டும்-பரம புருஷ பகவானுக்குத் தொண்டாற்றுதல்.

––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––
குறிப்பு: இது இஸ்கான் நடத்தும் ஆன்லைன் பகவத்கீதை பயிற்சிக்கான சிறு குறிப்புகள் ஆகும். பகவத்கீதையை முழுமையாக படிக்க விரும்புபவர்கள், இஸ்கான் கோயில்களில் கிடைக்கும் ‘‘பகவத்கீதை உண்மையுருவில்’’ என்ற புத்தகத்தை வாங்கி படித்து பயன்பெறலாம். இந்த புத்தகம் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 56க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.

புத்தகங்கள் வாங்குவதற்கு தொடர்பு கொள்ளவும்:
இஸ்கான்  கோயில்
மதுரை – 9894903630
திருநெல்வேலி – 9566946010
பெரியகுளம் – 7092203080