fbpx

மஹாபிரபு அவதரித்த ‘மாயாப்பூர்’ நவத்வீப் யாத்ரா’ கட்டுரை – பகுதி 1

மதுரா, விருந்தாவனம் போல் ‘மாயாப்பூர்’ ஸ்தலமும்  கிருஷ்ணரின் திவ்யமான லீலைகள் நிறைவேறிய புண்ணிய பூமியாகும். ஆனால் இந்த பூமியில் கிருஷ்ணர்,   பக்தர் வடிவில் பவனி வந்தார்” என்று ஆர்வத்துடன் கூற ஆரம்பித்தினர் மாயாப்பூர் சென்று வந்த பக்தர்கள்.

இஸ்கான் மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல்,

தேனி, சின்னமனூர் உள்ளிட்ட பல இடங்களிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள்,  இஸ்கான் மதுரை மற்றும் திருநெல்வேலி கிளையின்  மூத்த பக்தர்கள் வழிநடத்த கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மாயாப்பூர் சென்று வந்தனர்.

இவர்கள் மஹாபிரபு அவதரித்த மாயாப்பூரின் மகிமைகள் குறித்து கிருஷ்ண அமுதத்தின் வாசகர் களுக்காக இங்கு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

நவத்வீப் – மாயாப்பூர்

மேற்குவங்கத்தின் கல்கத்தாவிலிருந்து வடக்கே சுமார் 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மாயாப்பூர். சுற்றிலும்  கங்கை  நதி ஓட ஒன்பது தீவுகளாக அமைந்துள்ளது இப்புனித ஸ்தலம். 

கலியுகத்தில் பக்தர் ஒருவர் எப்படி இருக்க

வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க கிருஷ்ணரே, ‘ஸ்ரீசைதன்ய மஹாபிரபு’ எனும் திருநாமத்தில் பக்தராக வந்தார்.  இந்த அவதார ஸ்தலமே நவத்வீப்-ல் உள்ள மாயாப்பூர். 

அந்தர்த்வீப் (ஆத்ம நிவேதனம்) ‘யோக பீடம்’

மாயாப்பூர், நவதீவுகளில் ஒன்றான ‘அந்தர் த்வீப்’-ல் உள்ளது.  ஒன்பது தீவுகளும் ஒன்பது வகையான பக்தி சேவைகளை பிரதிநிதிக்கிறது. அதில் இந்த ‘அந்தர்த்வீப்’,  ஆத்மநிவேதனம் என்ற பக்தித் தொண்டிற்கு புகழாரமாக விளங்குகிறது. அதாவது தங்கள் உடல், மனம், சொல் என அனைத்தையும் கிருஷ்ணருக்காக அர்ப்பணிக்கும் உயர்ந்த பக்தித் தொண்டை வலியுறுத்துகிறது.

அந்தர்த்வீப்-மாயாப்பூரின் மத்தியில்  ‘யோகா பீடம்’ என்ற ஸ்தலம் உள்ளது. இங்குள்ள வேப்ப மரத்தின் அடியில் தான்  ஸ்ரீசைதன்ய மஹாபிரபு அவதரித்தார். இந்த வேப்ப மரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய இடங்கள் ‘யோகபீடம் திருக்கோயிலாக” விளங்குகிறது.

1486ல் அவதரித்த ஸ்ரீசைதன்ய மஹாபிரபு  தன்னுடைய 24வது வயதில்  சந்நியாசம் எடுக்கும் வரை  இந்த நவதீவுகளிலும் தனது தெய்வீக லீலைகளை நிகழ்த்தினார்.  காலப் போக்கில் கங்கை வெள்ளத்தில் இந்த ஸ்தலம் மூழ்கடிக்கப்பட்டுவிட்டது.

பிறகு பெரும் வைஷ்ணவ ஆச்சாரியரும், உயர் நீதிபதியுமான ஸ்ரீல பக்தி வினோத தாகூர் அவர்களால் 1887ல் மீண்டும் இந்த இடம் அடையாளம் காணப்பட்டது. மேலும் அவருடைய ஆன்மீக குருவான ஸ்ரீல ஜெகந்நாத் தாஸ் பாபாஜி அவர்கள் தனது ஆன்மீக முதிர்ச்சியினால், இந்த இடம் தான் ஸ்ரீசைதன்ய மஹாபிரபு அவதரித்த ஸ்தலம் என்று  உறுதி செய்தார்.

தற்சமயம் சுமார் 100 அடி உயரத்தில் காணப்படும்  இக்கோயில் 1935ல் கௌர்பூர்ணிமா அன்று கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த கோயிலில் மூன்று சன்னதிகள் உள்ளன. அவை விருந்தாவன தாம் சன்னதி, மாயாப்பூர் தாம் சன்னதி மற்றும் ஜெகன்னாத் தாம் சன்னிதி ஆகியவையாகும்.

இடது பக்கம் உள்ள சன்னதியில் ராதா-மாதவர் மற்றும் கௌராங்க மஹாபிரபு விக்கிரகங்கள் உள்ளன.  மத்தியில் உள்ள சன்னிதியில் மஹாபிரபு, கௌர் நாராயணன் ஆக வீற்றிருக்கிறார். உடன்   மஹாபிரபுவின்  துணைவியர் லக்ஷ்மிபிரியா மற்றும் விஷ்ணுபிரியா  அருள்பாலிக்கின்றனர். மேலும் அதே சன்னதியில் நான்கு கரங்கள் கொண்ட அதோக்ஷஜ விஷ்ணு, லக்ஷ்மி தேவி, பூதேவி சகிதம்  காட்சியளிக்கின்றார். 

இதில் அதோக்ஷஜ விஷ்ணு விக்ரஹம், மஹாபிரபுவின் தந்தை ஜெகன்னாத் மிஸ்ராவால்  வழிபடப்பட்டதாகும். இந்த விக்கிரகத்தை, ஸ்ரீலபக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் அவர்கள் இங்கு கோயில் கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது கண்டெடுத்தார்.

மூன்றாவது சன்னதியான வலது பக்கம் உள்ள சன்னதியில் பஞ்சதத்துவ விக்ரஹங்களும்  பகவான் ஜெகந்நாதரும் காட்சி அளிக்கின்றனர். 

1906ல் இக்கோயில் ஸ்ரீலபக்தி வினோத் தாகூர் அவர்களால் சிறிய கோயிலாக கட்டப்பட்டது. இதற்காக இவர் பெரும் முயற்சி எடுத்து,   பலரிடம் நன்கொடை கேட்டு, இக்கோயிலை கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு இவரது மகனும்,  ஸ்ரீலபிரபுபாதாவின் ஆன்மீக குருவுமான ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர் அவர்கள் இக்கோயிலை மேலும் விரிவுபடுத்தி கட்டினார். கோயில் பிரகாரத்தில் சுமார் 500 வருடங்களாக வழிபடப்பட்டு வரும் ‘வேப்ப மரம்’ ஒன்று உள்ளது.   இந்த மரத்தின் அடியில் தான் ஸ்ரீசைதன்ய மஹாபிரபு அவதாரம் செய்துள்ளார்.  வேப்ப மரத்தின் அடியில் பிறந்ததால் ‘நிமாய்’ என்றும் மஹாபிரபுவை அழைப்பர். வேப்ப மரத்திற்கு அருகில்  தந்தை  ஜெகந்நாத் மிஸ்ரா மற்றும் தாயார் சச்சிதேவியின் திருவிக்ரஹங்களுடன் ஒரு சிறிய கோயில் உள்ளது. இதில் தன் தாயாரின் மடியில் சைதன்ய மஹாபிரபு ஒரு குழந்தையாக வீற்றிருக்கிறார். 

இக் கோயிலின் முன்புறம் பெரிய கீர்த்தனை மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்தின் முடிவில்,  ‘கௌர கதாதாரர்’ மற்றும் லக்ஷ்மி நரசிம்மர் விக்கிரகங்கள் அமைந்துள்ள கோயில் உள்ளது.

யோகபீட மொத்த கோயில் அமைப்பிற்கு தெற்கே ‘கௌர குண்டம்’ அமைந்துள்ளது. இது மஹாபிரபு தனது  சகாக்களுடன் நீராடுமிடமாகும். சமையலுக்கும் இங்கு தான் நீர் எடுக்கப்பட்டது. இந்த கௌர குண்டம் 1920ல் பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர் அவர்களால் மீண்டும் கண்டறியப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது.

மஹாபிரபு அவதாரம் செய்த வேப்ப மரத்திற்கு வடக்கே (நேர் பின்புறம்) சுமார் 10 மீட்டர் தூரத்தில், பகவானின் சேவைக்கு அனுமதி அளிக்கும் கோபீஸ்வர சிவபெருமானும், நவதீப் தாமத்தை பாதுகாக்கும்  க்ஷேத்ரபால

சிவபெருமானும் ஒரே சிறிய கோயிலில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

கௌர பிரேமையும், நவதீப் தாம மகிமையும் உள்ளத்தில் ஏற்பட, பக்தர்கள் இந்த விக்கிரகங்களை வழிபட்டு தங்கள் நவதீப் பரிக்ரம யாத்திரையை தொடர்ந்தனர்.

மேலும் மாயாப்பூர் பற்றி படிக்க கிருஷ்ண அமுதம் ஜூன் 2019 இதழை படிக்கவும்.  



Warning: Trying to access array offset on value of type bool in /home4/iskcokzj/iskconmadurai.com/wp-content/themes/iskcontheme/inc/shortcodes/share_follow.php on line 41

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *