ஆகஸ்ட் 24, 2019 – பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதார திருநாளான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா, மதுரை மற்றும் திருநெல்வேலி இஸ்கான் கோயில்களில் ஆகஸ்ட் 24, 25 இரண்டு நாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் 24ம் தேதி தமிழக முறைப்படியும், ஆக.25ம் தேதி மதுரா நகர முறைப்படியும் நடைபெற்றது.
விழாவின் சிறப்பம்சமாக ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி மற்றும் ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பலராமர், புதிய வஸ்திரம் உடுத்தி விசேஷ அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து 108 கலசாபி@ஷகமும், நைவேத்யங்களும் நடந்தது.
சிறப்பு ஹரிநாமசங்கீர்த்தனம் மற்றும் ஜெயந்தி உற்சவ நிகழ்ச்சிகளும் அலங்காரங்களும் நடந்தன. கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
முக்கியமாக, “ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே” என்ற மஹாமந்திரத்தை 108 முறை உச்சரித்து பக்தர்கள் பகவானை பக்தியுடன் வணங்கி தரிசனம் செய்தனர்.
விழாவினையொட்டி அமைக்கப்பட்டிருந்த புத்தக ஸ்டால்களில் சுவாமி ஸ்ரீலபரபுபாதா எழுதிய ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிய புத்தகங்கள் குறைந்த நன்கொடையில் வழங்கப்பட்டன. தவிர ஜபயோகா செய்வதற்கான ஜபமாலைகளும் இதில் இடம்பெற்றிருந்தன.
தரிசனம் செய்த அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ணரின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் நள்ளிரவு வரை, கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருந்து பகவானை தரிசித்தனர். அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி விரத பிரசாதங்கள் வழங்கப்பட்டன.