செப்டம்பர் 6, 2019 – மதுரை மணிநகரம் இஸ்கான் ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி திருக்கோயிலில் ஸ்ரீராதாஷ்டமி விழா சிறப்புடன் நடைபெற்றது.
விழாவின் சிறப்பாக, ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி விசேஷ அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தொடர்ந்து பஞ்சகவ்ய, பஞ்சாமிர்த அபிசேகங்கள் நடைபெற்றன.
இஸ்கான் மதுரை மற்று திருநெல்வேலி கிளையின் தலைவர் அருட்திரு.சங்கதாரி தாஸ் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.
இதில் அவர், “ஸ்ரீமதி ராதாராணி தூயபக்தையும், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நித்யமான அன்பிற்குரியவரும் ஆவார். ஸ்ரீமதி ராதாராணி அதிர்ஷ்ட தேவதைகளுக்கெல்லாம் தலைமையானவர். எங்கு ஸ்ரீமதி ராதாராணி இருக்கின்றாரோ அவ்விடம் எல்லா மங்களகரமும் உடையதாக அமைகின்றது. ஸ்ரீமதி ராதாராணி இருக்குமிடத்தில் எதற்கு பஞ்சம் என்பதே கிடையாது. ஸ்ரீமதி ராதாராணியுடன் சேர்த்து ஸ்ரீகிருஷ்ணரை வழிபடுபவர்கள் அனைத்து வளங்களையும் பெறுவர். ஸ்ரீமதி ராதாராணி தினமும் புது புது உணவு பதார்த்தங்களை செய்து பக்திமிக்க அன்புடன் கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்வார். ஒரு முறை செய்த உணவு வகையினை மீண்டும் செய்ததே கிடையாது. பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு பக்தித் தொண்டு செய்வதில் ஸ்ரீமதி ராதாராணியைத் தவிர எவரும் முதன்மை வகிக்க முடியாது. ஸ்ரீமதி ராதாராணி எங்ஙனம் பக்தி சேவை செய்தார் என்ற சேவை மனப்பான்மையை அறிய பகவானே ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவாக அவதாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது” என்று அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து மஹா ஆரத்தி நடைபெற்றது. 81 தீப ஆரத்தியும், கும்ப ஆரத்தியும் சிறப்பம்சங்களாக அமைந்தன. முன்னதாக ஒன்பது கலசங்களிலிருந்து புனித நீரால் அபிஷேக நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இஸ்கான் மதுரை பக்தர்கள் குழு செய்திருந்தது.