மார்கழி மாதம் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு உகந்த மாதமாகும். எனவே தான் பகவத்கீதை 10.35ல் கிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழி” என்று கூறுகிறார். (மாஸானாம் மார்கசீர் ஷோ அஹம்)
மார்கழி மாதத்தில் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் சூரிய உதயத்திற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே எழுந்து நீராடி பகவானின் திருநாமங்களை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், கடந்த கால, எதிர் கால பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும். அது மட்டுமல்லாது நீங்காத செல்வத்தையும் பெறலாம் என்று திருப்பாவை கூறுகிறது.
பிரம்மா, இந்திரன் உட்பட எல்லா தேவர்களுக்கும் இம்மாதமே பிரம்ம முகூர்த்தமாக அமைகிறது. எனவே இவர்கள் அனைவரும், இம்மாதத்தில் தேவர்களுக்கு எல்லாம் அதிபதியான பகவான் ஸ்ரீகிருஷ்ணரை விசேஷமாக வழிபடுகின்றனர். (அஹம் ஆதிர் ஹி தேவானாம் – ப.கீ. 10.2) எனவே இம்மாதம் முழுவதும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை வழிபடுவது சிறந்தது.
‘நாட்காலே நீராடி’ என்ற ஆண்டாள் தேவியின் திருவார்த்தைக்கு இணங்க மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து நீராடுவது மிகவும் சிறந்தது.
தினமும், சூரிய உதயத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்பாக எழுந்து நீராடி கோயிலுக்கு சென்று ‘ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தினை உச்சரிப்பதும், கிருஷ்ணரின் சிந்தனையுடன் தினசரி வழிபாடு செய்வதும் மிகவும் சிறந்தது.
இவ்வாறு செய்வதால் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளை நாமும், நம் குடும்பத்தினரும் பெறலாம்.
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம், பால் உண்ணோம் நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி;
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!
பொருள்: இவ்வுலகில் வசிப்பவர்களே! நாம் மேற்கொள்ளவேண்டிய விரதங்களை கேளுங்கள்!! பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளின் திருவடியைப் புகழ்ந்து பாடி பிரார்த்திப்போம். நெய் உண்பதில்லை. பாலும் உண்பதில்லை. பொழுது புலரும் முன்னே எழுந்து நீராடுவோம். கண்மை இடுவதில்லை. மலரும் சூடுவதில்லை. வேண்டாத விஷயங்களை தவிர்ப்போம். தீயவற்றை பேச மாட்டோம். தான தர்மங்களை தாராளமாகச் செய்வோம். பக்தியில் முன்னேற பிரார்த்திப்போம்.
– திருப்பாவை (2)
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினாற் பாடி மனதினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பலோ ரெம்பாவாய்!
பொருள்: வட மதுராவின் இளவரசரும், யமுனைத் துறையில் வீற்றிருப்பவரும், ஆயர் குலத்தின் அணி விளக்காக தோன்றியவரும், தாய் யசோதையினால் கட்டப்பட்டவருமரான பகவான் தாமோதரரை, (பகவான் ஸ்ரீகிருஷ்ணரை) தூய்மையுடன் நறுமண மலர்களை தூவி வழிபட்டு, அவரது திருநாமங்களை வாயினால் பாடி, மனதினால் சிந்தித்தால் கடந்த கால
பிழைகளும், எதிர்வரும் பிழைகளும்,
நெருப்பில் இட்ட பஞ்சு போல அழிந்து விடும்.
– திருப்பாவை (5)
மார்கழியில் என்ன செய்யலாம்?
அதிகாலை 5 மணிக்குள் நீராடி, ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை குறைந்த பட்சம் 108 முறை சொல்ல வேண்டும். * தினசரி கிருஷ்ணர் கோயிலுக்கு செல்ல வேண்டும். * பக்தர்களின் சத்சங்கம் எடுக்க வேண்டும். * தினசரி பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம் கேட்க வேண்டும் அல்லது படிக்க வேண்டும்.