ஸ்ரீல பிரபுபாதா ஆற்றிய ஸ்ரீமத் பாகவத உரையிலிருந்து… (1.8.48) ( மே 10, 1973 லாஸ் ஏஞ்சல்ஸ்)
அஹோ மே பஸ்ய தாக்ஞானம்
ஹ்ருதி ரூடம் துராத்மன:
பாரக்யஸ்பைவ தேஹஸ்ய
பஹ்வ்யோ மே அக்ஷவ்ஹிணிர் ஹதா:
யுதிஷ்டிர மஹாராஜா கூறினார், என் விதியே, நான் மிகப் பெரிய பாவியாவேன். அறியாமை நிரம்பியுள்ள என் இதயத்தைப் பார்! முடிவாக பிறருக் காகவே இருக்க வேண்டிய இவ்வுடல், பற்பல படைப் பிரிவுகளைக் கொண்ட வீரர்களைக் கொன்று குவித்துள்ளது”
– ஸ்ரீமத் பாகவதம் 1.8.48
இதில் ‘பாரக்யஸ்ய’ என்ற வார்த்தை மிக முக்கியமானது. ஒருவர் கடுமையாக உழைப்பவராகயிருக்கலாம். ஆனால் ஒருவர் மற்றவருக்காக கடுமையாக உழைக்க ஆர்வம் காட்டுவதில்லை. ஒவ்வொருவரும் தன்னுடைய திருப்திக்காக புலனின்பத்தை நாடி நிற்கின்றனர். தான் இந்த உடல் என்ற கருத்தைக் கொண்டுள்ளவர்கள், இந்த உடலின் புலன்களைத் திருப்தி செய்யவே உழைக்கின்றனர். ஆனால் தத்துவ ரீதியாகப் பார்த்தோமானால், இந்த உடல் நமக்குச் சொந்தமானதல்ல என்று தெரியும். அதனால் ‘பாரக்யஸ்ய’ என்ற வார்த்தை மிக முக்கியமானது.
ஆரம்பத்தில் தாய், தந்தையருக்குச் சொந்தம்
ஆரம்பத்தில் இந்த உடல் தாய் தந்தையரால் கொடுக்கப்படுகிறது. யாராவது எதையாவது உற்பத்தி செய்தால், அது அந்த உற்பத்தியாளருக்கு சொந்தமாகிறது. தாயும் தந்தையும் இந்த உடலை உருவாக்கியுள்ளனர் என்றால், இந்த உடல் ஆரம்பம் முதல் தாய் தந்தையருக்கு சொந்தம். குழந்தைப் பருவத்தில் தாய், குழந்தையிடம் இங்கு உட்கார், இதை சாப்பிடு, அங்கே போகாதே” என்று கூறுகிறார். எனவே தாய் தந்தையர் எல்லாச் செயல்களையும் அவர்களுடைய ஆளுமைக்குள் வைத்திருக்கின்றனர். அப்படியிருக்க நாம் எவ்வாறு இது என்னுடைய உடல் என்று கூறமுடியும்.
பிறகு எஜமானருக்குச் சொந்தம்
பின் ஒருவர் உங்களை பராமரிக்கிறார். உதாரணமாக நீங்கள் ஒரு தொழிற்சாலையில் வேலை செய் வதாக வைத்துக் கொள்வோம். உண்மையில் இந்த உடல் அந்த முதலாளிக்குச் சொந்தமாகிறது. எவ்வாறு ஒரு நாயை அதன் எஜமானர் பராமரிக்கிறரோ அது போல, அந்த நாயின் உடல் எஜமானருக்கு சேவை செய்யவே உள்ளது. அந்த எஜமானர் இதைச் செய் என்றவுடன் அந்த நாய் அதைச் செய்கிறது. ஒரு நாய்க்கு எந்த சுதந்திர முமில்லை. இந்த வழியில் நாயின் உடல் அதன் எஜமானருக்குச் சொந்தமாகிறது.
ஆரம்பத்தில் நம் உடல் தாய் தந்தையருக்கு சொந்தம், பின் அது இந்த நாட்டுக்குச் சொந்தம். இவ்வாறு இறக்கும் தருவாய் வரை மற்றும் இறந்த பிறகும் கூட இந்த உடல் மற்றவர்களுக்குச் சொந்தமாகிறது… இது தான் அஞ்ஞானம் என்று கூறப்படுகிறது. நீங்கள் உங்களுக்கு வேலை பார்த்தால் அதில் அர்த்தம் உள்ளது. ஆனால் நீங்கள் மற்றவர்களுக்காக மட்டுமே வேலை பார்த்தால், அதுவும் இரவும் பகலும் கடுமையாக உழைத்தால், அதில் புத்திசாலித்தனம் இல்லை. இது ஒரு கழுதையின் புத்திசாலித்தனம். கழுதை கடுமையாக உழைக்கிறது, ஆனால் தனக்காக இல்லை. கழுதை, ஒரு துணி துவைப்பவருக்காக உழைக்கிறது; பொதிகளை சுமக்கிறது. எல்லாம் ஒரு கட்டு புல்லிற்காகத்தான். ஆக, உண்மை நடைமுறையிலும் கூட, நீங்கள் ஒரு பணியாளரே.
ஏன் கிருஷ்ணருக்காக உழைக்கக்கூடாது?
வேலையில் மும்முரமாக உள்ள வியாபாரியைப் பார்க்கப் போகும்போது அவரிடம் நாங்கள், கிருஷ்ண உணர்வைப் பற்றி பேசலாமா?” என்று கேட்டால், அவர் கூறுவார், எனக்கு நேரமில்லை. நேரமில்லை. சார்” என்று. ஏன்? நான் மிகவும் பிசியாக இருக்கிறேன். எதற்காக? வியாபாரத்திற்காக இந்த வியாபாரம் எதற்கு? என்னுடைய குடும்பத் தைப் பராமரிக்க. ஆக இந்த முறையிலும் அவர் தனக்கு வேலை பார்ப்பதாக நினைத்துக் கொண் டாலும் அவர் மற்றவர்களுக்காகத் தான் வேலை பார்க்கிறார்.
எனவே ஒரு புத்திசாலி யோசிக்க வேண்டும். நாம் மற்றவர்களுக்காக உழைத்து, மற்றவர்களுக்கு இந்த உடலை தியாகம் செய்வதற்குப் பதிலாக, ஏன் கிருஷ்ணருக்காக உழைக்கக்கூடாது? இது தான் எங்களுடைய தத்துவம். நம்முடைய வாழ்நாள் முழுவதும், எல்லா நேரமும் நாம் மற்றவர்களுக்காக உழைக்கிறோம். மற்றவர்கள் என்றாலும் அது என்னுடைய புலன்கள். ‘காமாதீனாம் கதி ந கதிதா பாலிதா துர்னிதேஷா’. என்னுடைய புலன்கள் ஆணையிடுகின்றன. இந்த பெண்ணுடன் இணைந்து கொள். நரகத்திற்குச் செல். சரி, நான் தயார். காமம். நான் காமத்திற்கு அடிமையாயிருக்கிறேன். நாம் எந்த பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ சேவையாளரல்ல. நான் காமத்திற்கு சேவை புரிகிறேன். இந்த காமம் இந்த புத்திகெட்ட விஷயத்தை செய் என்ற ஆணையிட்டால் உடனே நான் செய்கிறேன். ஆக நாம் புலன்களின் அடிமையாகி புலன்களிடும் கட்டளைகளை நிறைவேற்றுவதிலேயே இருக்கிறோம். இதுதான் நம்முடைய நிலை. ‘துர்னிதேஷ’ என்றால் – தவறான வழிமுறை. ‘நிர்தேசா’ என்றால் வழிமுறை. மக்கள் தங்கள் உடலை பராமரிக்க பலவகையான பாவச் செயல்களைப் புரிகிறார்கள். ஆனால் உண்மையில் ஆராய்ந்து பார்க்கும் போது இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை என்று புலனாகிறது. ஆக நாம் முட்டாள்கள். மற்றவர்களுக்காக நிறைய பாவச் செயல்களை புரிகின்றோம். இதுதான் அறிவு. ஆனால் ஒவ்வொருவரும் அறியாமையில் இருக்கின்றனர்.
யாருக்காக உழைக்கின்றோம்?
ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உழைத்துக் கொண்டு, நான் எனக்காக, என்னுடைய நலனுக்காக உழைக்கிறேன் என்று எண்ணுகிறோம். ‘நதே விது ஸ்வார்த்த கதிம் ஹி விஷ்ணும்’ (ஸ்ரீமத் பாகவதம் 7.5.31). இந்த முட்டாள்கள், தங்களுடைய சுய நலன் என்ன என்று அறியாதவர்கள். மற்றவர் நலனுக்காக உழைக்கின்றனர். ஆனால் எனக்காகவே நான் உழைக்கிறேன்” என்று எண்ணிக் கொண்டிருக் கின்றனர். இதுதான் அஞ்ஞானம்…
தத்துவம் என்றால் அறிவுப் பூர்வமாக பார்ப்பது. எனவே தத்துவ ரீதியாக எல்லாவற்றையும் பார்த்தோ மானால், நாம் அறியாமையில் மற்றவர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் எனக்காக என் நலனுக்காக உழைக்கிறேன் என்று நினைக்கிறோம். உண்மையில் நாம் மற்றவருக்காக உழைக்க வேண்டும். அதுதான் நம்முடைய உண்மை நிலை. அந்த மற்றவர் கிருஷ்ணர். இந்த பௌதீக உலகமல்ல. நான் மற்றவர்களுக்காக உழைக்க வேண்டும்.
கிருஷ்ணரே எஜமானர்!
என்னுடைய உண்மை நிலை ஒரு சேவகன். ‘ஜீவேர ஸ்வரூப ஹய நித்ய கிருஷ்ண தாஸ’ (சைதன்ய சரிதாமிருதம் மத்யலீலை 20.108-109)ஒவ்வொரு ஜீவராசியின் இயல்பான உண்மை நிலை இதுதான். சேவகன். அவன் எஜமானர் அல்ல. நீங்கள் கிருஷ்ணருடைய சேவகன் ஆகவில்லை என்றால் நீங்கள் மாயைக்கு சேவை புரிவீர்கள். நீங்கள் மாயையின் எஜமானர் ஆக முடியாது. அது சாத்தியம் இல்லை. மாயையின் எஜமானர் கிருஷ்ணர். ‘தைவி ஹ்யஸா குண மயி மம மாயா’ (பகவத்கீதை 7.14).
ஒரு எஜமானர் மாயைக் கட்டுப்படுத்துவார். ஆனால் நாம் எஜமானர் அல்ல. நாம் சேவகர்கள். நாம் எப்படி மாயையை அடக்கி ஆள முடியும்? அது முடியாது. ஆனால் நீங்கள் கிருஷ்ணரின் சேவகன் ஆகும் போது மாயை உங்களை பாதிக்காது. ‘மாம் ஏவயே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்திதே’ (பகவத்கீதை 7.14) நீங்கள் மாயையை கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் நீங்கள் சேவகர். நீங்கள் கிருஷ்ணரின் சேவகர் ஆகாவிடில் மாயையின் சேவகர் ஆவீர். நீங்கள் மாயையை அனுபவிக்க முயற்சிக்கிறீர் கள் என்பது பொய்யானது. அனுபவி என்றால் எஜமானர். அது முடியாது. ‘திரிபிர் குணமயைர் பாவை’. இது ஜட இயற்கையின் முக்குணங்களின் பாதிப்பு. நாம் தவறாக எண்ணுகிறோம். விஞ்ஞான முன்னேற்றம் என்பது உண்மையில் நாம் மாயையை ஆள முயற்சிப்பது. அது நடக்காது. ஆனால் விஞ்ஞானிகள் மேலும் மேலும் அவ்வாறே முயற்சிப்பார்கள்.
கண்ணாடியில் ஒரு ‘குருவி’
மாயாவிற்கு ஒரு நல்ல உதாரணம் நான் இந்தியாவில் பார்த்திருக்கிறேன். ஒரு கண்ணாடி இருந்தது. அருகே பறந்து வந்த குருவி அந்த கண்ணாடியில் தென்பட்டது. உடனே அந்த குருவி கண்ணாடியை கொத்தியது. ஆ! இன்னொரு குருவி அங்குள்ளது என்று. தொடர்ந்து அந்த குருவி கொத்திக் கொண்டே இருந்தது. இவ்வாறாக அந்த குருவி பாடுபட்டுக் கொண்டிருந்தது. நாம் வெற்றி பெறுவோம் என்று எண்ணி. ஆனால் அது நடக்காது. இதுதான் முட்டாள்தனம். இந்த குருவி நினைக்கிறது இதோ இன்னொரு குருவி, அதை கொத்துவோம் என்று. அதுவும் கொத்துகிறது. இவ்வாறு தொடர்ந்து கொத்திக் கொண்டேயிருக்கிறது. இதுதான் வாழ்விற்கான போராட்டம். அதற்கு அறிவில்லை.
நாம் அறியாமையில் இருக்கும் வரை நம்முடைய வாழ்க்கைப் போராட்டம் தொடரும். நாம் இவ்வாறு போராடும் போது நினைக்கலாம். நான் ஒரு யானையை அல்லது புலியைப் போல் சக்தி உடையவனாய் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருப்பேன் என்று. பின் அடுத்த பிறவியில் ஒரு யானை அல்லது புலியின் உடலை பெறுவோம். இயற்கை நமக்கு அவ்வாறு கொடுக்கும். ‘யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாமி அஹம்’ (பகவத்கீதை 4.11) கிருஷ்ணர் மிகவும் கருணை உள்ளவர். நாம் எதை விரும்பினாலும் கொடுப்பார் முக்திவரை.
பக்தியை எளிதாக தரமாட்டார்!
மாயாவாதிகள் பிரம்ம ஜோதியில் கலப்பதை முக்தி என்று அடைய விரும்புகின்றனர். கிருஷ்ணர் அதை எளிதாகக் கொடுத்துவிடுவார். ஆனால் அவர் பக்தியை கொடுப்பதில் மிகவும் கண்டிப்பானவர். அவ்வளவு எளிதாக கொடுக்க மாட்டார். அது தான் அவருடைய விசேஷம்! ஏனெனில் பக்தர்களுக்கு கிருஷ்ணர் கட்டுப்பட்டவர் ஆகிவிடுவார். ‘வேதேஷு துர்லபம் அதுர்லபம் ஆத்ம பக்தௌ அதுர்லப’ (பிரம்ம சம்ஹிதை 5.33) அவர் பக்தரால் ஆளப்படுகிறார். மிக உயர்ந்த பக்தர் ஸ்ரீமதி ராதாராணி. கிருஷ்ணர் ஈஸ்வர பரம உச்ச உயர்நிலை ஆளுநர் என்றாலும் அவர் ஸ்ரீமதி ராதாராணியால் கட்டுப்படுத்தப்படுகிறார். ஏனெனில் அவர் ஒரு தூய பக்தை. அவரை பக்தி சேவையில் யாரும் மிஞ்ச முடியாது. அவருடைய பக்தி சேவை அறுபத்து நான்கு வழிகளில் பக்திரசாம்ருத சிந்துவில் விவரிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறு அவர் பக்தி சேவையில் எல்லோரையும் விட உயர்ந்த நிலையில் உள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. பக்தி சேவையில் வெவ்வேறு நிலைகள் உள்ளன. உதாரணமாக பாண்டவர்கள், அவர்களும் பக்தர்கள். ஆனால் கோபியர்கள் அவர்களை மிஞ்சியவர்கள். கோபியர்கள் பக்தர்கள்தான். ஆனால் ஸ்ரீமதி ராதாராணி அவர்கள் எல்லோரையும் மிஞ்சியவர். ஆக இவையெல்லாம் பக்தி சேவையின் வெவ் வேறு நிலைகள். அதனால்தான் கிருஷ்ணர் ஒருவ ருக்கு பக்தி சேவையை அளிக்கும் முன் மிக ஜாக்கிரதையாக இருக்கிறார். அவர் முக்தியை எளிதில் கொடுத்துவிடுவார். முக்தியை அடைவது கஷ்டமானது அல்ல. ஆனால் ஒருவர் பக்தர் ஆகிவிட்டால், முக்தி அவர் முன் கைகட்டி நிற்கும்.
* * *
Ref: Srimad Bhagavatam 1.8.48 Lecture given by His Divine Grace A.C. Bhaktivedanta Swami Prabhupada on May 10, 1973 at Losangeles
கிருஷ்ண அமுதம் * செப்டம்பர் 2017
இந்தக் கட்டுரைகள் அனைத்தும் ‘கிருஷ்ண அமுதம்’ மாத இதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. ‘கிருஷ்ண அமுதம்’ – இஸ்கான் மாத இதழ் ஆகும். கிருஷ்ண அமுதம் மாத இதழ் உங்கள் இல்லம் தேடி வர சந்தாததாரர் ஆவீர்.
விபரங்களுக்கு இஸ்கான் மதுரை அல்லது திருநெல்வேலி கோயிலை தொடர்பு கொள்ளவும். அல்லது 72 00 11 00 52 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.