fbpx

கிருஷ்ண பக்தி பெரும் சக்தி வாய்ந்தது!

பகவத்கீதை உண்மையுருவில் பதம் 9.2க்கு ஸ்ரீலபிரபுபாதா வழங்கிய விளக்கவுரையில் இருந்து. . .

பரம புருஷரின் பக்தித் தொண்டில் உண்மையாக ஈடுபட்டுள்ளவர்கள், ஏற்கனவே எல்லா விளைவுகளிலிருந்தும் விடுதலை பெற்றவர்கள். இக்கருத்து பத்ம புராணத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அப்ராரப்த-பலம் பாபம் கூடம் பீஜம் பலோன்முகம்
க்ரமேணைவ ப்ரலீயேத விஷ்ணு-பக்தி-ரதாத்மனாம்
பரம புருஷ பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பக்தித் தொண்டில் ஈடுபட்டவர்களுக்கு பழுத்தவை, காத்திருப்பவை, விதையாக உள்ளவை என எல்லாப் பாவ விளைவுகளும் படிப்படியாக அழிந்து விடுகின்றன. எனவே பக்தித் தொண்டின் தூய்மைப்படுத்தும் சக்தி மிகவும் வலிமைவாய்ந்தது. இது பவித்ரம் உத்தமம் மிகவும் தூய்மையானது என்று அழைக்கப்படுகின்றது.

பக்தித் தொண்டு உயர்ந்தது

உத்தம என்றால் மிக உயர்ந்தது என்று பொருள். தமஸ் என்றால் இருள் அல்லது ஜட உலகத்தை குறிக்கும். உத்தம என்றால் ஜட செயல்களை விட உயர்ந்தது என்று பொருள். பக்தர்கள் சாதராண நபர்களைப் போன்று செயல்படுவதாக தோன்றினாலும், பக்தியின் செயல்களை உலகாயத செயல்களுக்கு சமமாக ஒருபோதும் கருதக்கூடாது. பக்தி தொண்டில் அனுபவம் உள்ளவன் அச்செயல்கள் பௌதிகமானவை அல்ல என்பதை அறிவான். அவையாவும் ஜட இயற்கையின் குணங்களினால் களங்கமடையாத, ஆன்மிகமயமான செயல்களாகும்.

பலன்களை நேரடியாக உணரும் அளவிற்கு, பக்தித் தொண்டின்  செயல்கள் மிகவும் பக்குவமானவை என்று கூறப்பட்டுள்ளது. இதன் நேரடி பலனை உண்மையாகவே உணர முடியும். இதில் நமக்கு அனுபவும் உள்ளது.
கிருஷ்ணரின் திருநாமங்களை, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே” என்று உச்சரிப்பவர், அபராதமின்றி உச்சரிக்கும்போது திவ்ய ஆனந்தத்தை உணருகிறார். மேலும் வெகுவிரைவில் எல்லாவித ஜட மாசுகளிலிருந்தும் தூய்மையடைகிறார். இது நடைமுறையில் நாம் கண்ட உண்மை.

மேலும் கேட்பதோடு மட்டுமின்றி பக்தி தொண்டின் செய்தியை பரப்ப ஒருவன் முயற்சி செய்தால் அல்லது கிருஷ்ண உணர்வின் பொது நல செயல்களுக்கு உதவுவதில் தன்னை ஈடுபடுத்தினால் அவன் படிப்படியாக ஆன்மீக முன்னேற்றத்தை உணர முடியும். ஆன்மீக வாழ்வின் இந்த முன்னேற்றம் எந்தவிதமான முந்தைய தகுதியையோ, கல்வியையோ பொறுத்ததல்ல. இந்த வழிமுறையில் எளிமையாக ஈடுபடுவதன் மூலம் ஒருவன் தூய்மை அடைகிறான். அந்த அளவிற்கு இந்த வழிமுறை மிகவும் தூய்மையானதாகும்.

பக்தித் தொண்டில் ஈடுபடுபவர் ‘சான்றோன்’ ஆகிறார்
இதே கருத்து வேதாந்த சூத்திரத்தில் (3.2.26) பின்வரும் சொற்களால் விளக்கப்பட்டுள்ளது. ப்ரகாஷஷ் ச கர்மண் யப் யாஸாத். பக்தித் தொண்டின் செயல்களில் ஈடுபடுபவன் சந்தேகமின்றி சான்றோன் ஆகிறான். பக்தி தொண்டு அத்தகு சக்தி வாய்ந்தது.

‘நாரதரே’ நடைமுறை உதாரணம்

நாரதரின் முந்தைய பிறவியிலிருந்து இதற்கான நடைமுறை உதாரணத்தை நாம் காண முடியும். அப்பிறவியில் அவர் ஒரு பணிப்பெண்ணின் மகனாக இருந்தார். கல்வி கற்றவரும் இல்லை. பெரும் குடும்பத்தில் பிறந்தவரும் இல்லை. ஆனால் சிறந்த பக்தர்களின் சேவையில் அவரது அன்னை ஈடுபட்டிருக்கையில் நாரதரும் அதில் ஈடுபடுவார். சிலசமயங்களில் அன்னை இல்லாத நேரங்களில் அவரே அந்த சிறந்த பக்தர்களுக்கு சேவை செய்வார். இதை நாரதரே கூறுகின்றார்.

உச்சிஷ்ட லேபான் அனுமோதி தோத் விஜை:
    ஸக்ருத் ஸ்ம புஞ்ஜே தத் அபாஸ்த கில்பிஷ:
ஏவம் ப்ரவ்ருத்தஸ்ய விஷூத்த சேதஸஸ்
   தத் தர்ம ஏவாத்ம ருசி ப்ரஜாயதே

ஸ்ரீமத் பாகவதத்திலுள்ள (1.5.25) இப்பதத்தில் நாரதர் தனது முந்தைய பிறவியை பற்றி தன்னுடைய சீடரான வியாச தேவரிடம் விளக்குகிறார். அந்த தூய பக்தர்கள் நான்கு மாதம் தங்கியிருந்த போது சிறுவனான நாரதர் அவர்களுக்கு சேவை செய்து அவர்களுடன் நெருங்கிய உறவை வளர்த்தார். சில நேரங்களில் அந்த சாதுக்கள் உணவின் மீதியை தட்டிலியே விட்டுச்செல்வர். அந்த தட்டுக்களை கழுவும் சிறுவன் உணவின் மீதியை சுவைக்க விரும்பினான். அதற்காக அவன் அச்சிறந்த பக்தர்களின் அனுமதியைக் கேட்க, அவர்களும் உணவின் மீதியை நாரதரிடம் கொடுத்தனர். இதன் விளைவாக (பக்தர்கள் ஏற்ற மஹா பிரசாதத்தின் மீதியை உண்டதால்) எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் விடுபட்டான். அவ்வாறு தொடர்ந்து உண்டு வந்தபோது சிறுவனும் அந்த சாதுக்களைப் போன்ற தூய்மையான இதயத்தை படிப்படியாக பெற்றான். ஸ்ரவணம் மற்றும் கீர்த்தனத்தின் மூலம் இடையறாத பக்தித் தொண்டின் சுவையை அந்த பெரும் பக்தர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தனர். நாரதரும் அதே சுவையை படிப்படியாக வளர்த்துக் கொண்டார். நாரதர் மேலும் கூறுகிறார்.

தத்ரான்வஹம் க்ருஷ்ண-கதா: ப்ரகாயதாம்
    அனுக்ரஹேணா ஷ்ருணவம் மனோஹரா
தா ஷ்ரத்த யா மே அனுபதம் விஷ்ருண்வத:
    ப்ரியஷ் ரவஸ் யங்க மமாபவத் ருசி:

சாதுக்களின் தொடர்பு தந்த பலன்

சாதுக்களுடன் உறவு கொண்டதால், பகவானின் புகழைக் கேட்பதற்கும் பாடுவதற்கும் நாரதர் ருசியை பெற்றார். மேலும் பக்தித் தொண்டிற்கான பேராவலையும் வளர்த்துக் கொண்டார். எனவே வேதாந்த சூத்திரத்தில் விளக்கப்பட்டபடி, ப்ரகாஷஷ் ச கர்மண் யப் யாஸாத் – ஒருவன் பக்தித்  தொண்டின் செயல்களில் ஈடுபட்டிருந்தால், அவனுக்கு அனைத்தும் தாமாகவே தெளிவாகி, அவற்றை புரிந்து கொள்கிறான். இதுவே ப்ரத்யக்ஷ நேரடியான அனுபவம் என்று அழைக்கப்படுகிறது.

தர்ம்யம் என்றால் தர்மத்தின் பாதை என்று பொருள். நாரதர் உண்மையில் ஒரு பணிப்பெண்ணின் மகனாக இருந்தார். பள்ளி செல்லும் வாய்ப்பு அவருக்கு இல்லை. அவர் வெறுமனே தனது தாய்க்கு உதவி செய்து வந்தார், அதிர்ஷ்டவசமாக அவரது தாய் சில பக்தர்களுக்கு சேவை செய்ய நேர்ந்தது. அந்த வாய்ப்பை பெற்ற மகன் நாரதரும் பக்தர்களின் உறவால் தர்மத்தின் மிகவுயர்ந்த குறிக்கோளை அடைந்தார். ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பக்தித் தொண்டே தர்மத்தின் மிகவுயர்ந்த குறிக்கோளாகும். (ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே) பக்தித் தொண்டினை அடைவதே தர்மதத்தின் மிகவுயர்ந்த பக்குவ நிலை என்பதை, சாதராண தர்மத்தை பின்பற்றுவோர் பொதுவாக அறிவதில்லை.

எட்டாம் அத்தியாத்தின் கடைசி பதத்தில் நாம் விவாதித்தபடி (வேதேஷூ யக்ஞேஷூ தபஷூ சைவ) தன்னுணர்விற்கு வேத ஞானம் அவசியமாகும். ஆனால் இங்கே குருகுலத்திற்கு ஒருபோதும் செல்லாதபோதிலும், வேதக் கொள்கைகளில் தேர்ச்சி பெறாத போதிலும், நாரதர் வேதக் கல்வியின் மிகவுயர்ந்த பலன்களை அடைந்தார். தர்மத்தின் கொள்கைகளை முறையாகச் செயாலாற்றாத போதிலும், மிகவுயர்ந்த பக்குவ நிலைக்கு ஒருவனை உயர்த்தும் அளவிற்கு இந்த வழிமுறை மிகவும்
சக்திவாய்ந்தாகும். இது எவ்வாறு சாத்தியமாகும்?

இதுவும் வேத இலக்கியங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசார்யவான் புருஷோ வேத கல்வியறிவு இல்லாதவனாக இருந்தாலும், வேதங்களை ஒருபோதும படிக்காதவனாக இருந்தாலும், பெரும் ஆச்சாரியர்களுடன் தொடர்பு கொள்பவன் தன்னை உணர்வதற்குத் தேவையான எல்லா ஞானத்தையும் அடைந்துவிடுகிறான்.

பக்தித் தொண்டின் வழிமுறை மிகவும் மகிழ்ச்சிகரமானதாகும். (ஸூஸூகம்) ஏன்? பக்தி தொண்டு. ஷ்ரவணம் கீர்தனம் விஷ்ணோ என்பதை உள்ளடக்கியதால், பகவானின் பெருமைகளைப் பற்றிய கீர்த்தனங்களையும், திவ்ய ஞானத்தைப் பற்றி அங்கீகரிக்கப்பட்ட ஆச்சாரியர்களால் வழங்கப்படும் தத்துவ சொற்பொழிவுகளையும் ஒருவன் எளிமையாகக் கேட்கலாம். அமர்ந்த நிலையிலேயே அவன் கற்றுக் கொள்ளலாம். பின்னர் பகவானுக்கு படைக்கப்பட்ட அருமையான அறுசுவை உணவுகளை உண்ணலாம்.

பக்தித் தொண்டு இன்பமயமானது

பக்தித் தொண்டு ஒவ்வொரு நிலையிலும் இன்பமயமானது. மிகவும் வறுமையான நிலையிலும் பக்தித் தொண்டினை செயலாற்ற முடியும். பகவான் கூறுகிறார், பத்ரம் புஷ்பம் பலம் தோயம் – பக்தன் எதைப் படைத்தாலும், அதனை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக உள்ளார். எந்த பொருள் என்பது பொருட்டல்ல. உலகின் எல்லா பகுதிகளிலும் கிடைக்கக்கூடிய இலை, பூ, சிறு பழம், அல்லது நீர் போன்றவற்றை சமுதாயத்தின் எந்த நிலையிலுள்ள நபரும் அர்ப்பணிக்க முடியும். அதனை அன்புடன் சமர்ப்பிக்கும்போது பகவான் அதனை ஏற்றுக்கொள்கிறார். சரித்திரத்தில் இதற்குப் பல சான்றுகள் உள்ளன.

பகவானின் தாமரைத் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட துளசி இலைகளைச் சுவைத்ததால் ஸனத் குமாரரைப் போன்ற மாமுனிவர்கள் மிகச் சிறந்த பக்தர்களானர். எனவே பக்தியின் வழிமுறை மிகவும் சிறந்ததாகும். இதனை மகிழ்ச்சியுடன் செயலாற்ற முடியும். பொருள்கள் படைக்கப்படும் போது. கடவுள் அதிலுள்ள அன்பை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்.

இவ்வாறாக கிருஷ்ண உணர்வு எனப்படும் பக்தித் தொண்டு எல்லாவித கல்விக்கும் எல்லாவித இரகசியமான அறிவற்கும் அரசனாக விளங்குகின்றது. இதுவே தர்மத்தின் மிகத் தூய்மையான ரூபம், கஷ்டமின்றி மகிழ்ச்சியுடன் நிறைவேற்றப்படக் கூடியது. எனவே அனைவரும் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
* * *
Ref:  Bhagavad Gita As it is  9.2  Purport by  His Divine Grace A.C. Bhaktivedanta Swami Prabhupada

கிருஷ்ண அமுதம் * செப்டம்பர் 2017

இந்தக் கட்டுரைகள் அனைத்தும் ‘கிருஷ்ண அமுதம்’ மாத இதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. ‘கிருஷ்ண அமுதம்’ – இஸ்கான் மாத இதழ் ஆகும். கிருஷ்ண அமுதம் மாத இதழ் உங்கள் இல்லம் தேடி வர சந்தாததாரர் ஆவீர்.

விபரங்களுக்கு இஸ்கான் மதுரை அல்லது திருநெல்வேலி கோயிலை தொடர்பு கொள்ளவும். அல்லது  72 00 11 00 52 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *