fbpx

கோபியர் கொண்டாடிய ‘மார்கழி’

மார்கழி மாதம் ‘தனுர் மாதம்’ என்றும் அழைக்கப்படுகிறது. சூரியன் தனுர் ராசியில் (Sagitarius) நுழைவதிலிருந்து மகர ராசியில் (Capiricon) நுழைவது வரை உள்ள ஒரு மாத காலம் தனுர் மாதம் அல்லது மார்கழி என்று அழைக்கப்படுகிறது.

பகவத் கீதையில் மார்கழியின் சிறப்பு
பகவத் கீதை 10.35ல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ‘மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன்’ என்று கூறுவது, மாதங்கள் பன்னிரெண்டில் மார்கழியின் தனிச்சிறப்பை எடுத்துரைக்கிறது.

தனுர்மாச பல ஸ்ருதி
‘தனுர்மாசத்தில் ஒவ்வொரு நாள் விஷ்ணு வழிபாடும், ஓர் ஆயிரம் வருடங்கள் பக்தியுடன் விஷ்ணுவிற்கு செய்த வழிபாட்டிற்குச் சமமாகும். மேலும் தனுர் மாதத்தில் அதிகாலையில் அருகில் உள்ள, ஆற்றிலோ, குளத்திலோ, நீர் நிலைகளிலோ நீராட எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், ஒரு அஸ்வமேத யாகம் செய்த பலனைத் தரும்’ என்று தனுர்மாத பல ஸ்ருதி குறிப்பிடுகிறது.

மார்கழி மாதம் தேவர்களின் பிரம்ம முகூர்த்தம்
பிரம்ம முகூர்த்தம் எனப்படுவது ஒவ்வொரு நாளும், அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் உள்ள ஒன்றரை மணிநேரமாகும். இது நாளின் மிகச் சிறந்த நேரமாகும். குறிப்பாக ஆன்மீக சாதனைகளுக்கு அதிக பலன் தரும் காலமாகும். பகவானை வழிபடவும் இதுவே மிக ஏற்ற காலமாகும். ஆன்றோரும் சான்றோரும் இந்த நேரத்தில் இறைவனை வழிபட்டு, ஆன்மீகத்தில் முன்னேற்றமடைந்தனர்.

நமக்கு ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாளாகும். நமக்கு ஒவ்வொரு நாளும் எவ்வாறு அதிகாலையில் பிரம்ம முகூர்த்தம் நேரம் அமைகின்றதோ, அது போல் தேவர்களுக்கும், அவர்களின் ஒவ்வொரு நாளிலும் மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்தமாய் அமைகின்றது. ஆகையால் தேவர்களுக்கு, மார்கழி மாதம் முழுவதும் பகவான் கிருஷ்ணரை வழிபடும் காலமாகும்.
சூரியன், கடக ராசியிலிருந்து தனுர் ராசி முடிய பிரபஞ்சத்தின் தெற்குப் பகுதியில் பயணம் செய்யும் ஆறு மாத காலம் ‘தட்சிணாயணம்’ என்று அழைக்கப்படுகின்றது. இது தேவர்களின் இரவாகும். அது போல் சூரியன், மகர ராசியிலிருந்து மிதுன ராசி முடிய பிரபஞ்சத்தின் வடக்குப் பகுதியில் பயணம் செய்யும் ஆண்டின் மீதி ஆறு மாத காலம் ‘உத்தராயணம்’ என்று அழைக்கப்படுகின்றது. இது தேவர்களின் பகல் நேரமாகும். இவ்வாறாக தனுர் அல்லது மார்கழி மாதம் தேவர்களின் அதிகாலைப் பொழுதாகும். ஆகையால் இது தேவர்களின் பிரம்ம முகூர்த்தமாய் அமைகிறது.

வைகுண்ட ஏகாதசியும்
பகவத் கீதை உபதேசமும்

மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி மோக்ஷ ஏகாதசி அல்லது மோட்சத்தைத் தரக்கூடிய ஏகாதசி என்று அழைக்கப்படுகின்றது. இந்த ஏகாதசியில் தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத் கீதையை உபதேசம் செய்தார்.

பாகவதம் கூறும்,
கோபியர் இருந்த மார்கழி மாத நோன்பு (காத்யாயினி விரதம்)

சுமார் 5000 வருடங்களுக்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூமியில் அவதாரம் செய்த பொழுது, விருந்தாவனத்து கோபியர்களில் 16,100 பேர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அடையும் நோக்குடன் குளிர் காலத்தின் முதன் மாதத்தில் கடும் குளிரில் ஒரு மாத காலம் காத்யாயினி விரதம் அனுஷ்டித்தனர். அம்மாதத்தில் அவர்கள், உப்பு, உறைப்பு, புளிப்பு போன்ற சுவைப் பொருட்கள் சேர்க்காத எளிமையான உடலினைத் தூய்மை செய்ய உதவும் ஹவிஷ்ய அன்னத்தை மட்டுமே உண்டு வந்தனர்.

சூரியோதயத்திற்கு முன், அந்திக்கருக்கலில் காளிந்தி நதியில் நீராடி, காத்யாயினி தேவியின் உருவத்தை களிமண்ணில் வடித்து, காத்யாயினிக்கு சந்தனம், பழங்கள், வெற்றிலை பாக்கு, நறுமண மலர்; மாலைகள் போன்றவற்றை அர்ப்பணித்து, விளக்குகள் ஏற்றி, தூப தீபங்கள் காட்டி வழிபட்டனர்.

அவர்கள் அனைவரும், ‘ஓ! காத்யாயினி தேவியே, ஓ! மகா மாயையே, ஓ! மகாயோகினியே, ஓ! ஈஸ்வரியே, நந்த மகாராஜனின் மைந்தனை எனக்கு அருள்வாயாக உனக்கு எனது வந்தனங்கள்’ என்ற மந்திரத்தை ஓதி காத்யாயினியை வழிபட்டனர்.

அவர்கள் அனைவரும் அந்திக்கருக்கலில் துயில் எழுந்து ஒவ்வொரு கோபியரையும் பெயர் சொல்லி அழைத்து ஒருவர் கையை மற்றொருவர் கைப்பற்றி கிருஷ்ண கீர்த்தனைகளை உரத்தக் குரலில் பாடிக் கொண்டு காளிந்தி நதிக்கு நீராடச் செல்வார்கள்.
இவ்வாறு மணமாகாத கோபியர் அனைவரும் ஒரு மாத காலம் நோன்பிருந்து காத்யாயினியை முறையாக வழிபட்டனர். அவர்கள் ‘நந்த புத்திரரே, எனக்கு கணவராக வேண்டும் என்று தியானித்தபடி கிருஷ்ணரிடம் தங்கள் மனங்களை மூழ்கடித்தனர்’. இவ்வாறாக அவர்கள் வேண்டுகோளின்படி அவர்கள் பகவான் கிருஷ்ணரைப் பெற்றனர்.

ஆண்டாள் அனுஷ்டித்த மார்கழி மாத நோன்பு அல்லது பாவை நோன்பு
அதுபோல் தன் தந்தை பெரியாழ்வாரின் அறிவுரைப்படி, ஆண்டாளும் ரெங்கநாதரை அடைய வேண்டி இவ்வாறு மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்தாள். அதன் பலனாக ஆண்டாள் இறுதியில் பகவான் ரெங்கநாதரைப் பெற்றாள்.
இவ்வழக்கம் தொன்றுதொட்டு இன்று வரை இளம் பெண்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. மார்கழி மாதம் அதிகாலையில் தினசரி நீராடி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு நல்லதொரு வாழ்க்கையை பெண்கள் பெற்று வருகின்றனர். மற்றவர்களுக்கும் நல்லதொரு ஆன்மீக முன்னேற்றத்திற்கு இவ்விரதம் ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்.

மார்கழி மாத நோன்பிருக்கும் விதம்
பாகவதத்தில் கோபியரும், திருப்பாவையில் ஆண்டாளும் இந்த மார்கழி நோன்பிருக்கும் விதத்தை தெளிவு படுத்தியுள்ளனர்.
ஆண்டாள் தன்னுடைய திருப்பாவையில் நோன்பிருக்கும் விதத்தை அழகாகக் கூறியுள்ளார்.

முதல் பாடலில் அதிகாலையில் நீராடத் தோழியரை ஆண்டாள் அழைக்கிறாள். மற்றும் நாராயணனிடம் அவரைப் பாட பறையும் வேண்டினாள்.

இரண்டாம் பாடலில் ‘பரமனின் அடி பாடுவோம்’ என்றும்,
‘நெய்யுண்ணோம், பாலுண்ணோம், அதிகாலையில் நீராடுவோம், கண்ணுக்கு மையிடோம், மலரிட்டு நாம் முடியோம், செய்யத் தகாதவற்றை செய்யோம், மற்றவர்களை குறை சொல்லோம், நாங்கள் தானமும், அன்னமும் இயன்றளவு அளிப்போம், மற்றவர்கள் துயர் துடைப்போம்’ என்று வேண்டுகிறாள்.

மூன்றாவது பாடலில், ‘உலகளந்த உத்தமன் பெயர் பாடி பாவையை வழிபட்டால் மாதம் மும்மாறி மழை பொழிந்து நாடெல்லாம் செழிக்கும்; பசுக்கள் பானை நிரம்பும் அளவிற்கு பால் கறக்கும்; செல்வமும் பசுக்களும் நாட்டில் செழிக்கும்’ என்று பாடுகிறாள்.
ஐந்தாவது பாடலில், ‘யமுனைத்துறைவனை, ஆயர்குலத்தில் தோன்றும் மணி விளக்கை, தாமோதரனை மலர் தூவித் தொழுது வாயினால் பாடி, மனதினால் சிந்திக்கப்போய பிழையும் நீங்கி நெருப்பில்லிட்ட தூசு போல் ஆகும்’ என்று பாடுகிறாள்.

அடுத்த பத்து பாடல்களில், ஆண்டாள் அவளுடைய தோழியர்களை மலர் சேகரிக்க அழைக்கிறாள். ஒவ்வொரு வீடும் சென்று அவளுடைய தோழியரை அழைத்து அருகில் உள்ள குளத்தில் நீராட அழைக்கிறாள். பகவானுடைய பல அவதாரங்களையும் துதி பாடுகிறாள்.

அடுத்த ஐந்து பாடல்களில், தோழியர் புடை சூழ கோவிலுக்குச் சென்றதை விவரிக்கிறாள். பகவானை பள்ளியறைப் பாடல் பாடி எழுப்பு கிறாள். கோவில் காவலர்களை சந்தோஷப்படுத்தி, கோவிலுள் சென்று பகவான் கிருஷ்ணரின் பெற்றோர்களை புகழ்ந்து பாடி, பலராமரையும், கிருஷ்ணரையும் பள்ளியெழுப்ப வேண்டி நின்றாள். பின் பகவானுடைய துணைவியான நீலாதேவியை தரிசனம் நாடி சென்றாள்.

அடுத்த ஒன்பது பாடல்களில், பகவானுடைய புகழ் பாடி நின்றாள். பின் நோன்புக்கு பாலும், வெண்சங்கும், திருவிளக்கும், விலை மதிப்பற்ற ஆடை அணிகலன்களும் அளவற்ற வெண்ணெய் யும், நெய்யும் வேண்டி நின்றாள்.

கடைசி பாடலில் இத்திருப்பாவை பாடும் அனைவரும் பகவானின் அருளைப் பெறுவர் என்று பாடி முடிக்கிறாள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *