fbpx

வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?

விரதங்களில் அதிமுக்கியமானது ‘ஏகாதசி’ விரதம் ஆகும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. அதில் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு வைகுண்ட ஏகாதசி என்று பெயர். (ஜனவரி 6, 2020 திங்கள்)

வேதசாஸ்திரங்கள், ‘ஏகாதசி’, ‘கிருஷ்ணரின் திருநாள்’ என்று குறிப்பிடுகிறது. மேலும் ஏகாதசி விரதத்தினை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.

ஏகாதசி என்றால் என்ன?
சமஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று என்று பொருள். ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசி வரும். அதாவது, அமாவாசையிலிருந்து 11வது நாளையும், பௌர்ணமியிலிருந்து 11வது நாளையும் குறிக்கும். இந்த இரண்டு நாள்களிலும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

ஏகாதசி விரதம் ஏன் கண்டிப்பாக
கடைபிடிக்க வேண்டும்?

பொதுவாக விரதங்கள், கடைபிடித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். கடைபிடிக்காவிட்டால் எந்த அபாயமும் கிடையாது. ஆனால் ஏகாதசி விரதம் எப்படியென்றால், இந்த விரதத்தை கடைபிடிக்க வில்லை என்றால் பாவங்கள் வந்து சேரும்.
அதே சமயம் ஏகாதசி விரதம் இருந்தால் மற்றெல்லா விரதங்களின் பலனையும் அடையலாம். ஆனால் மற்றெல்லா விரதங்களை கடைபிடித்தாலும் ஏகாதசி விரதத்தின் பலனை அடைய இயலாது.

ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?
ஏகாதசி விரதத்தின் மிக முக்கியமான அங்கம் தானியங்களால் ஆன உணவை எவ்வகையிலும் உண்ணாமல் இருப்பதேயாகும். குறிப்பாக அரிசி, சாதம் மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா போன்ற தானிய வகைகளால் செய்யப்பட்ட அனைத்து பலகாரங்களையும் உண்ணக் கூடாது.

நவ தானியங்களால் செய்யப்பட்ட உணவு களும், பருப்பு வகைகளும், பயறு வகைகளும் (கடுகு உளுந்தம் பருப்பு தாளித்துக் கொட்டுதல் உட்பட) ஏகாதசி அன்று முற்றிலும் விலக்கப்பட வேண்டும்.

காய்கறிகளில் மொச்சை, பீன்ஸ், அவரை போன்ற பயறு வகைகளைச் சேர்ந்த காய்களும் விலக்கப்பட வேண்டும்.
சமையல் எண்ணெய் வகையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட சுத்தமான பசு நெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவை மட்டும் சேர்க்கலாம். மற்றெல்லா எண்ணெய் வகைகளும் விலக்கப்பட வேண்டும். இத்தனை கவனம் தேவைப்படுவதால் முதல் தர பக்தர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் ஏகாதசி விரதம் கடைபிடிப்பார்கள். அது முடியாதவர்கள் துளசி தீர்த்தம் மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பர். அதுவும் முடியாதவர்கள் பசும்பால், தயிர், பழங்கள் மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பர். அதுவும் முடியாதவர்கள் பயறு வகைகள் அல்லாத காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வர்.

ஏகாதசி விரதம் ஆரம்பிப்பதும், முடிப்பதும் எவ்வாறு?
ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று கடைசி உணவை சூரிய அஸ்தமனத்திற்குள் உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம்.
அதே போல் ஏகாதசிக்கு மறுநாளான துவாதசி அன்று வைஷ்ணவ நாட்காட்டிகளில் காட்டியபடி குறிப்பிட்ட நேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும். விரதத்தை முடிப்பது என்பது நீர் கூட அருந்தாதவர்கள் துளசி தீர்த்தம் உட்கொண்டு முடிக்க வேண்டும். மற்றவர்கள் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு நைவேத்தியமாக செய்யப்பட்ட தானிய உணவை (சாதம், பொங்கல் ஏதேனும் ஒன்றை) உட்கொண்டு முடிக்க வேண்டும்.

ஏகாதசி விரதத்தைக் கடைபிடிப்பது எந்த அளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அடுத்த நாள் துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்தில் விரதத்தை முடிப்பதாகும்.

ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி நாள் மற்றும் விரதம் முடிக்க வேண்டிய நேரம் குறித்த காலண்டர் கிருஷ்ண அமுதம் இதழில் மாதந்தோறும் பிரசுரிக்கப்படுகிறது. (வருடக்காலண்டர் இஸ்கான் கோயிலில் டிசம்பர் மாதம் கிடைக்கும்)

ஏகாதசி அன்று செய்ய வேண்டியதும்,
செய்யக் கூடாததும் என்ன?

ஏகாதசி முழுவதும் பகவானின் நாமம் சொல்வது, அதிலும் குறிப்பாக கலியுக தாரக மந்திரமான ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண; கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம; ராம ராம ஹரே ஹரே” எனும் மஹாமந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிப்பது மிகவும் சிறந்தது. ஏகாதசி அன்று அவசியம் கோயிலுக்குச் சென்று ஸ்ரீகிருஷ்ணரை
தரிசிக்க வேண்டும். ஸ்ரீமத்பாகவதம், பகவத் கீதை நூல்களை படிப்பதும், கேட்பதும் மிகவும் நல்லது.

ஏகாதசி அன்று சினிமா செல்வதோ, பரமபதம் ஆடுவதோ, வீண் பேச்சுக்களில் காலத்தை விரயம் செய்வதோ அல்லது வீணாக உறங்குவதோ விரதத்திற்கு சற்றும் உதவாது. தவிர, திருமணம் போன்ற உலக காரியங்களை ஏகாதசி அன்று தவிர்ப்பது நல்லது.

வைகுண்ட ஏகாதசி விரதம் – ஜனவரி 6, 2020 திங்கள்

விரதம் முடிக்கவேண்டிய நேரம் – ஜனவரி 7, 2020 செவ்வாய் காலை 10.12 முதல் 10.22 மணிக்குள்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *