fbpx

யோகிகளில் சிறந்த யோகி!

கிருஷ்ண அமுதம் , அக்டோபர் 2017

தாய் யசோதை, வேத சாஸ்திரங்களைக் கற்றறிந்த அறிவாளியாகவோ அல்லது கடினமான யோகப் பயிற்சிகளை மேற்கொண்ட அஷ்டாங்க யோகியாகவோ இல்லாமல், சாதாரண ஆயர் குலப் பெண்ணாக இருந்தும், யோகிகளில் எல்லாம் மிகச் சிறந்த யோகியென அவள் கருதப்படுகிறாள். மர உரலோடு சேர்த்து, குழந்தை கிருஷ்ணரை தாய் யசோதை கயிற்றால் கட்டிய நிகழ்ச்சியான தாமோதர லீலா இக்கருத்தை உறுதி செய்கிறது.

இந்த தாமோதர லீலா, தீபாவளித் திருநாள் அன்று நிகழ்ந்தது என்று சனாதன கோஸ்வாமியின் ‘வைஷ்ணவ தோஷானி’யை சான்று காட்டி, ஸ்ரீல விஸ்வநாத சக்கரவர்த்தி தாகுரா தன்னுடைய ‘சாரார்த்த தர்ஷினி’ யில் குறிப்பிட்டுள்ளார்.

சொல், செயல் மற்றும் சிந்தனை அனைத்தையும் ஒரு நிலைப்படுத்திய யோகி, தாய் யசோதா

நந்த மகாராஜாவிடம் இருந்த ஒன்பது லட்சம் பசுக்களில், ‘பத்மகந்தா’என்றழைக்கப்படும் எட்டு பசுக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அவைகள் நறுமணமுள்ள புற்களை மட்டுமே உண்டு, அந்த புற்களின் நறுமணம் கமழும் பாலையேத் தரும். யசோதை இந்த எட்டுப் பசுக்களிடமிருந்து பாலைக் கறந்து, அப்பாலில் இருந்து தயிர் உண்டாக்கி, அந்த தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பது வழக்கம். இவை அனைத்தையும் தாய் யசோதை தானே தனிப்படச் செய்வது வழக்கம். நறுமணம் மிக்க இந்த வெண்ணெயை அவள் கிருஷ்ணருக்கு தினந்தோறும் அளித்து வந்தாள். சுவையான நறுமணம் மிக்க இந்த வெண்ணெயை உண்பதால், குழந்தை கிருஷ்ணர் அக்கம் பக்கத்து வீடுகளில் சென்று வெண்ணெய் திருடுவதைத் தவிர்ப்பார் என்பது யசோதையின் எண்ணம்.

தாமோதர மாதத்தில் தீபாவளித் திருநாளன்று, வழக்கம் போல் அதிகாலையில் எழுந்த தாய் யசோதை, தன் அன்புக் குழந்தை இன்னும் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, வழக்கம் போல் தன்னுடைய வீட்டு வேலைகளைச் செய்யச் சென்றாள். எல்லாப் பணிப் பெண்களும், வேறு வேறு வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்ட தாய் யசோதை, தானும் தயிர் கடையத் துவங்கினாள். அன்று, உபநந்தாவின் அழைப்பின் பேரில், அவர் வீட்டிற்கு ரோகிணியும், பலராமரும் சென்று இருந்தனர்.

காவி நிறமும், மஞ்சள் நிறமும் கலந்த ஆடை ஒன்றை உடுத்தி, முழு இடுப்பையும் கச்சை ஒன்றால் சுற்றிக் கட்டிக் கொண்டு தாய் யசோதை தயிர் கடையத் துவங்கினாள். அவளுடைய கடின உழைப்பால், கை வளையல்களும், காதணிகளும் அங்கும் இங்கும் அசைந்தாடி, அதிர்ந்து ஒலி எழுப்பின. உடல் முழுவதும் குலுங்கவும் செய்தது. தன்னுடைய குழந்தை கிருஷ்ணர் மீதுள்ள பாசத்தால் அவள் மார்பில் இருந்து பால் சுரந்து நனைந்தது. அழகிய கண் புருவங்களைக் கொண்ட அவள் முகம், வியர்வையால் நனைந்திருந்தது. மல்லிகைப் பூக்கள் அவளது கூந்தலில் இருந்து சிதறி விழுந்தன.

இவ்வாறு தயிர் கடைந்து கொண்டிருக்கும் போது, கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்துச்  செயல்களை நினைவு கூர்ந்த அவள், தனக்கே உரிய முறையில் அவற்றை கிராமியப் பாடல்களாகத் தொகுத்து, அப்பாடல்களை தனக்குள் பாடி மகிழ்ந்தாள். எதையேனும் ஒன்றை இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருக்க விரும்பும் ஒருவர், அதனைப் பற்றி தானாகவோ அல்லது ஒரு புலவரைக் கொண்டோ கவிதையாக வடிப்பது வழக்கம்.

எச்சமயத்திலும், கிருஷ்ணரின் செயல்களை தாய் யசோதை மறக்க விரும்பவில்லை. பூதனை, அகாசுரன், சகடாசுரன் மற்றும் திருணாவர்தன் போன்ற அசுரர்களின் வதங்கள் போன்ற கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்துச் செயல்களையெல்லாம் அவள் கவிதை வடிவில் வடித்தாள். வெண்ணெய் கடையும் போது இப்பாடல்களை தன்னுடைய இனிய குரலில் பாடி கிருஷ்ணரின் நினைவில் அகம் மகிழ்ந்தாள்.

இவ்வாறு தன் மகன் கிருஷ்ணரின் நினைவில் மூழ்கி, அவருடைய லீலைகளைப் பாடல்களாகப் பாடியவாறும், அவ்வப் போது இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் தன் அருமை மகன் எழுந்து விட்டானா என்று பார்த்துக் கொண்டும், தாய் யசோதையானவள் தயிர் கடைந்து கொண்டிருந்தாள்.

யசோதையின் கண்கள், உறங்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ணர் எழுந்து விட்டாரா என் பதைப் பார்ப்பதில் இருந்தது. அவளுடைய உடலும், கரங்களும் கிருஷ்ணருக்கு மிகப் பிரியமான வெண்ணெயைக் கடைந்தெடுப்பதில் முற்றிலும் ஈடுபட்டிருந்தது. அவளுடைய சொல்லோ பகவானுடைய லீலைகளைப் பாடுவதில் இருந்தது.  அவளுடைய மனமோ, முற்றிலும் கிருஷ்ணரின் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. இவ்வாறாக, பக்குவப்பட்ட ஒரு யோகி போல, தாய் யசோதை தன்னுடைய சொல், செயல் மற்றும் சிந்தனை அனைத்தையும் உலக விசயங்களில் இருந்து முற்றிலும் நீக்கியவளாய், கிருஷ்ணரிடம் ஒரு நிலைப்படுத்தினாள்.

மனோ வேகத்தில் பயணம் செய்யும் யோகிகளிடம் கூட பிடிபடாத, ஆனால் உன்னத யோகியான தாய் யசோதையிடம் பிடிபட்ட பகவான் கிருஷ்ணர்

உறங்கி எழுந்த கிருஷ்ணருக்கு தாய் யசோதை பாலூட்டினாள். இதற்கிடையில், கறந்த பாலை பாத்திரத்தில் ஊற்றி அதை சூடு செய்ய விரும்பி, அதை அவள் அடுப்பில் வைத்து இருந்தாள். அடுப்பில் வைத்த பால் காய்ந்து பொங்கி வழிய, மடியில் இருந்த குழந்தை கிருஷ்ணரை வேகமாக கீழே இறக்கி விட்டு விட்டு, அடுப்பில் இருந்து பால் பாத்திரத்தை கீழே இறக்கச் சென்றாள் தாய் யசோதை. தாயிடம் பாலருந்துவது தடைப்பட்டதால் பொய்க் கோபம் கொண்ட குழந்தை கிருஷ்ணர், தயிர்ப் பானையை ஒரு கல்லால் உடைத்தார். புதிதாகக் கடைந்தெடுத்த வெண்ணெயை எடுத்து உண்ணத் துவங்கினார்.

திரும்பி வந்த யசோதை, குப்புறக் கவிழ்க்கப்பட்டிருந்த மர உரலில் கிருஷ்ணர் அமர்ந்தவாறு, தயிர், வெண்ணெய் போன்ற பால் பொருட்களை தானும் உண்டு, குரங்குகளுக்கும் தன் விருப்பம் போல் விநியோகிப்பதையும், இடையிடையே தன் தாயால் தான் பிடிபட்டு விடுவோமோ என்ற கவலையுடன்  அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருப்பதையும் கண்டாள்.

கிருஷ்ணரைப் பிடிக்க, கவனத்துடன் தாய் யசோதை கையில் தடியுடன் அவரை நெருங்க, தாயைக் கண்ட கிருஷ்ணர் மர உரலில் இருந்து கீழே குதித்து, பெரும் அச்சத்திற்குள்ளானவர் போல் ஓட்டம் பிடித்தார்.

தியானத்தால் பகவானை பரமாத்மாவாக கைப் பற்றவும், கடுமையான தவத்தாலும், விரதங்களாலும் பகவானின் பிரம்ம ஜோதிப் பிரகாசத்தினுள் நுழையவும் யோகிகள் எத்தகைய முயற்சிகள் செய்தாலும், அவர்கள் அதில் தோல்வியே அடைகின்றனர். அஷ்டாங்க யோகிகள், அஷ் டாங்க யோகத்தின் மூலமாக, தங்களுடைய இதயத்தில் இருக்கும் பரமாத்மாவை உணர முயற்சிக்கின்றனர். ஞான யோகிகள் தங்களுடைய கடுமையான பயிற்சிகளினால் பிரம்ம ஜோதியில் கலக்க விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் முயற்சியில் தோல்வியே அடைகின்றனர்.

ஆனால், தாய் யசோதை, அதே பரமபுருஷ பகவானான கிருஷ்ணரை தன்னுடைய மகனாகக் கருதி, அவரைப் பிடிக்க அவரைப் பின் தொடர்ந்து ஓடினாள். இறுதியில் முழுமுதற் கடவுளாகிய கிருஷ்ணர், அவளிடம் பிடிபட்டார்.

யோகிகளால் கடுந்தவத்தினாலும், விரதங்களினாலும் கிருஷ்ணரைப் பெற முடியாது. ஆனால் எல்லாத் தடங்கல்களுக்கும் இடையிலும், தாய் யசோதையால் எவ்வித சிரமமும் இன்றி கிருஷ்ணரை பெற முடிந்தது. இதுவே தாய் யசோதை, யோகிகள் அனைவரிலும் முதன்மையானவர் என்பதை நிரூபிக்கிறது.

பற்பல ஆண்டுகள் தவத்திற்கு பின்னரும், மனோ வேகத்தில் பயணம் செய்யும் யோகிகளாலும், ஞானிகளாலும், பகவான் கிருஷ்ணரின் பிரம்ம ஜோதி பிரகாசத்திற்குள் கூட பிரவேசிக்க முடியாது. அப்படியே அவர்கள் பிரம்ம ஜோதி பிரகாசத்தினுள் பிரவேசித்தாலும், விரைவில் அவர்கள் அதில் இருந்து வீழ்ந்து விடுகின்றனர்.  ஆனால் தாய் யசோதையோ மற்ற யோகிகளால் அடைய முடியாத, அவர்களால் நினைத்தும் பார்க்க இயலாத, பகவான் கிருஷ்ணரைப் பிடித்ததன் மூலமாக அவருடைய கிருஷ்ண லோகத்திலும் கூட மிகச் சுலபமாக பிரவேசிக்க இயலும் தகுதியைப் பெற்றாள்.

யமனும் கண்டு கலங்கும் கிருஷ்ணர், தாய் யசோதையை கண்டு அஞ்சுகிறார்

தாய் யசோதையிடம் பிடிபட்ட கிருஷ்ணர், இன்னும் அதிக அச்சம் அடைந்து, தான் குற்றவாளி என்பதை ஒப்புக் கொண்டார். அவர் அழுவதை தாய் யசோதை கண்டாள். அவரது கண்களில் பூசப்பட்டிருந்த கருப்பு மை கரைந்து கண்ணீருடன் கலந்தது.  அழுது கொண்டு தன்னுடைய கரங்களால் தன் கண்களை அவர் கசக்கிய பொழுது அந்த மை அவர் முகம் முழுவதும் பரவியது.

அஷ்டாங்க, ஞான மற்றும் கர்ம யோகிகளால் கிருஷ்ணரை நெருங்கவும் முடியாது. வெகு தூரத்தில் இருந்து கொண்டு, கிருஷ்ணரின் உடலிலிருந்து வெளிப்படும் ஒளி வெள்ளமான, பிரம்ம ஜோதியில் கலந்துவிட முயல வேண்டியிருக்கும்.  உண்மையில் இதைக்கூட அவர்களால் செய்ய முடியாது.

சிவபெருமான் மற்றும் பிரம்மா போன்ற தேவர்களும் கூட, தியானத்தாலும் மற்றும் தொண்டாலும் பகவானை எப்போதும் வழிபடுகின்றனர். மிகவும் சக்தி வாய்ந்த யமராஜனும் கூட பகவான் கிருஷ்ணரைக் கண்டு அஞ்சுகிறான். ஆனால், காலனையும் கலங்க வைக்கும் கிருஷ்ணர், தாய் யசோதையின் கையில் கம்பைக் கண்டவுடனே, ஒரு சாதாரண குழந்தையைப் போல் அழத் துவங்கி விடுகிறார். தேவாதி தேவர்களும், யோகிகளும் கண்டு கலங்கும் கிருஷ்ணரை கலங்க வைக்கும் உத்தம யோகி தாய் யசோதை.

கிருஷ்ணரைக் கட்டிப் போட்ட தாய் யசோதை ஒரு மாபெரும் யோகியே

ஆதியும், அந்தமும், உள்ளும், புறமும், முன்னும் பின்னும் இல்லாத, எங்கும் பரவி இருக்கும், காலத்தின் ஆதிக்கத்திற்கு உட்படாத, முக்காலத்திலும் எந்த வேறுபாடுமற்ற,  பரிபூரணமானவரும் ஆன பரமபுருஷரான கிருஷ்ணரை, தன் சொந்தக் குழந்தையாகக் கருதி, அவரை ஒரு கயிற்றால் மர உரலுடன் யசோதை கட்டிப் போட்டாள். மகா யோகிகளும் சாதிக்க முடியாததை சாதித்த தாய் யசோதை நிச்சயம் ஒரு மாபெரும் யோகியே.

“இந்த ஜட உலகில் இருந்து முக்தி அளிப்பவரான முகுந்தனிடம் இருந்து எந்த அனுக்கிரகத்தை தாய் யசோதை பெற்றாளோ, அதை பிரம்ம தேவரோ, சிவபெருமானோ அல்லது பரம புருஷ பகவானின் சரிபாதியாக உள்ள லக்ஷ்மி தேவியோ கூடப் பெற முடியாது” என்று ஸ்ரீமத் பாகவதம் 10.9.20ல் யசோதையின் உயர்வு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சர்வ யோகிகளிலும், சிறந்த யோகி தாய் யசோதையே

இந்த தாமோதர லீலா, உண்மையில் தாய் யசோதா மற்ற யோகிகளிலும் மிகச் சிறந்த ஓர் பரிபூரண யோகியாகவாள் என்பதை நிரூபிக்கிறது. இக்கருத்தையே பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத்கீதை 6.47ல், “சர்வ யோகிகளிலும், என்னையே கதியாகக் கொண்டு, தன்னுள் என்னையே எண்ணிக் கொண்டு, சிரத்தையுடன் எனக்கு யார் பக்தித் தொண்டு செய்கிறானோ, அவனே மிகச் சிறந்த யோகியாக என்னால் கருதப்படுகின்றான்”என்று உறுதிப்படுத்துகிறார்.

மிகச் சிறந்த யோகியாக விரும்பும் ஒருவர், தாய் யசோதையைப் பின்பற்ற வேண்டும். நாள் இருபத்தி நான்கு மணி நேரமும், தாய் யசோதையைப் போல் கிருஷ்ண உணர்வில் திளைக்க வேண்டும். தன் சொல், செயல் மற்றும் சிந்தனை அனைத்தையும், நாள் இருபத்தி நான்கு மணி நேரமும் கிருஷ்ண உணர்வில் ஈடுபடுத்த வேண்டும். இதுவே கிருஷ்ண உணர்வில் நிலைத்து இருக்க விரும்புவோருக்கு தாய் யசோதை காட்டும் ஒரே வழி.

* * *

Ref: Srimath Bhagavatam Canto 10, Chapter 9 & Sarartha Darsini by Srila Visvanatha cakravarti Thakura

இந்தக் கட்டுரைகள் அனைத்தும்கிருஷ்ண அமுதம்மாத இதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. ‘கிருஷ்ண அமுதம்’ – இஸ்கான் மாத இதழ் ஆகும். கிருஷ்ண அமுதம் மாத இதழ் உங்கள் இல்லம் தேடி வர சந்தாததாரர் ஆவீர்.

விபரங்களுக்கு இஸ்கான் மதுரை அல்லது திருநெல்வேலி கோயிலை தொடர்பு கொள்ளவும். அல்லது  72 00 11 00 52 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *