செப்டம்பர் 30, 2019 – இளைஞர்கள் யாத்ராவில் பங்கேற்ற மாணவர்களின் கருத்து…
தென் தமிழகத்தில் உள்ள இஸ்கான் மையங்கள் மற்றும் நாமஹட்டாவிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற ‘யோகா விழிப்புணர்வு யாத்ரா’ கடந்த செப்டம்பர் 28, 29, 30 தேதிகளில் நடைபெற்றது. ‘மதுரை, ராமநாதபுரம், திருப்புல்லாணி, ராமேஸ்வரம் உள்ளிட்ட சேத்திரங்களில் நடைபெற்ற இந்த யாத்ராவினை இஸ்கான் தென்தமிழக மண்டலச் செயலாளர் திரு.சங்கதாரிபிரபு அவர்கள் வழிநடத்தினார். செப்டம்பர் 27ம் தேதி மாலை எல்லோரும் மதுரை இஸ்கான் ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி திருக்கோயிலில் ஒன்றிணைந்தோம். மறுநாள் புரட்டாசி சனிக்கிழமை. அதிகாலை மங்கள ஆரத்தி முடிந்து அனைவரும் ஒரு சேர ‘ஹரே கிருஷ்ண ஜபயோகத்தை’ உற்சாகத்துடன் பயிற்சி செய்தோம்.
கூடலழகர் பெருமாள்
ஜபத்திற்கு பிறகு, மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். ஹரிநாம சங்கீர்த்தனத்துடன் தரிசனம் மிகவும் அருமையாக இருந்தது. கூடல் அழகர் பெருமாள் கம்பீரமான தோற்றத்துடன் மலர் அலங்காரத்தில் எல்லோர் மனதையும் கவர்ந்து விட்டார். பிறகு கோயில் பிரகாரத்தைச் சுற்றி வெகுநேரம் மாணவர்கள் ஹரிநாம சங்கீர்த்தனம் செய்தனர். தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்களில் பலர் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பிறகு புத்துணர்வுடன் மீண்டும் இஸ்கான் கோயிலுக்கு திரும்பினோம். ஸ்ரீலபிரபுபாதா குருபூஜையில், பிரபுபாதாவிற்கு மலர் அஞ்சலி செலுத்திய பிறகு, மாணவர்களுக்கான முதல் சிறப்பு வகுப்பு நடைபெற்றது. “நவீன கால சூது’ என்ற தலைப்பில் திரு.கிருபேஷ்வர கௌராங்க பிரபு, மாணவர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து விளக்கம் அளித்தார். குறிப்பாக எப்படி மாணவர்கள் தங்கள் நேரத்தை மொபைல் போன்களிலும், இதர விளையாட்டுகளிலும் விரயம் செய்கின்றனர் என்றும், அதிலிருந்து விடுபடுவது எப்படி என்றும் விளக்கம் அளித்தார்.
தரமான ஜபம் எப்படி?
பிறகு காலை சிற்றுண்டி பிரசாதத்தை மகிழ்ச்சியுடன் உண்டோம். அடுத்த வகுப்பில் ஹரிநாம மஹிமை குறித்தும், ஜபயோகத்தின் முக்கியத்துவம் குறித்தும் திரு.நாராயண சைதன்ய பிரபு அவர்கள் விளக்கம் அளித்தார். இதில் நமது தினசரி ஹரே கிருஷ்ண ஜபத்தை எப்படி தரத்துடன் பயிற்சி செய்வது என்பது பற்றி விளக்கினார். மேலும் இந்த வகுப்பில் ஜபம் செய்யும் போது ஏற்படுகின்ற பல்வேறு சவால்கள் பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும் குறிப்பிட்டார். பிறகு சிறிய இடைவேளை. மதியம் மாணவர்கள் அனைவரும் அழகர் கோயில், நரசிம்மர் கோயில் மற்றும் திருமோகூர் கோயில்களுக்கு தரிசனத்திற்காக சென்றோம். இதில் அழகர் கோவிலில் மிக அருமையான சூழலில் நடைபெற்ற ஹரி நாம சங்கீர்த்தனம் மனதைக் கவர்ந்தது.
அழகர் கோவில்
இங்கு அழகர் கோயில் வரலாறு மற்றும் பெருமைகள் பற்றி திரு.ஜெகத்பதி கிருஷ்ண பிரபு விளக்கம் அளித்தார். இதில் நூபுர கங்கையின் மகத்துவம் பற்றியும் அறிந்தோம்.
பிறகு நரசிம்மர் கோயில், திருமோகூர் என்று மூன்று கோயில்களையும் ஆர்வத்துடன் தரிசனம் செய்து மகிமைகளையும் அறிந்து கொண்டோம். இரவு அனைவரும் இஸ்கான் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம். சென்ற இடங்களின் நினைவுடனும், பெருமாளின் தரிசனத்துடனும் உறங்கச் சென்றோம். மறுநாள் அதிகாலை மங்கள ஆரத்தியில், ஸ்ரீஸ்ரீராதா மதுராபதியை தரிசித்து, திருப்புல்லாணிக்கு புறப்பட்டோம். வழியில் இஸ்கான் ராமநாதபுரத்தில் எங்களை உற்சாகப்படுத்துவதற்காக ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இங்கு திரு.சங்கதாரி பிரபு அவர்கள், ஸ்ரீமத் பாகவத சொற்பொழிவு ஆற்றினார்கள். பிறகு அனைவரும் காலை பிரசாதம் ஏற்றபின், திருப்புல்லாணியை நோக்கி புறப்பட்டோம். திருப்புல்லாணியின் அமைதியான சூழ்நிலை எல்லோர் மனதையும் கவர்ந்தது. அங்கு ஜெகன்னாதப் பெருமாள், தர்ப சயன இராமர் மற்றும் பட்டாபிஷேக ராமர் ஆகிய மூன்று திருவிக்ரஹங்களின் தரிசனம் கிடைத்தது.
திருப்புல்லாணி
பிரகாரத்தின் அமைதியான சூழலில் மூன்று திருவிக்ரஹங்களின் லீலைகளைப் பற்றி திரு.சங்கதாரி பிரபு அவர்கள் அருமையான விளக்கம் அளித்தார்கள். எப்படி தசரதர் பகவான் ஸ்ரீராமச்சந்திரர் அவதாரத்திற்கு முன் இங்கு வந்து ஜெகன்னாத பெருமாளை வழிபட்டார் என்றும், கடலைக் கடப்பதற்கு முன் பகவான் ஸ்ரீராமச்சந்திரர் இவ்விடத்தில் தர்ப சயனத்தில் தவமிருந்தார் என்பதையும் குறிப்பிட்டார். மேலும் ராவணனுடன் போர் செய்து வதம் செய்த பின்னர், இந்த திருப்புல்லாணி சேத்திரத்திற்கு மீண்டும் வருகை புரிந்து பட்டாபிஷேகத்தை ஏற்றுக் கொண்டார். இப்படி மூன்று திருவிக்ரஹங்களின் லீலைகளைப் பற்றி மிக அருமையாக விவரங்கள் அறிந்தோம். அப்போது தான் நாம் எவ்வளவு முக்கியமான இடத்தில் இருக்கிறோம் என்பதை உணர முடிந்தது. தொடர்ந்து ஸ்ரீராமர் பாலம் கட்டிய இடமான சேதுக்கரையில் தரிசனம் செய்தோம்.
ராம (நாதபுர) நாம சங்கீர்த்தனம்
மாலை இராமநாதபுரத்தில் ஹரிநாம நகர சங்கீர்த்தனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நாங்கள் பகவான் நாமத்தை மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடும் வாய்ப்பு கிடைத்தது. எங்களை மறந்து ஆன்மீக பரவசத்தை உணர்ந்தோம். அடுத்து ராமநாதபுரம் மண்டபம் ஒன்றில் இஸ்கான் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடைபெற்ற பகவத்கீதை வகுப்பில் பங்கேற்றோம். எங்களுடன் சேர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் மக்களும் பங்கேற்றனர். அவர்களிடம் எங்களின் கிருஷ்ண பக்தி அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டோம். குறிப்பாக பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களாகிய எங்களிடமிருந்தே, வாழ்வில் பக்தியை பயிற்சி செய்வதைப் பற்றி கேட்ட போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் மகிழ்ச்சியுற்றனர். தங்களது குழந்தைகளையும் இப்படி பக்தர்கள் ஆக்க வேண்டும் என்று பலர் ஆர்வப்பட்டு தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். தொடர்ச்சியாக சுமார் ஒரு மணி நேரம் உற்சாகமான ஹரிநாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. வந்திருந்த மக்களும் எங்களுடன் சேர்ந்து நாமசங்கீர்த்தனத்தில் பங்கேற்றனர். அதிகாலை துவங்கி ஓய்வில்லாமல் தொடர்ந்த இந்த பயணத்தில், எங்கள் மனம் முற்றிலும் உற்சாகமாக இருந்ததால், பயணக்களைப்பே தெரியவில்லை. முற்றிலும் கிருஷ்ண உணர்வுடன் அன்றிரவு உறங்கச் சென்றோம்.
ராமேஸ்வர தரிசனம்
மறுநாள் வழக்கம்போல் அதிகாலையிலே யே எழுந்தோம். அன்று ராமேஸ்வர தரிசனத்திற்கு புறப்பட்டோம். முதலில் வில்லூண்டி தீர்த்தத்தை அடைந்து தீர்த்தத்தைப் பருகினோம். பகவான் ஸ்ரீராமர் சீதையின் தாகத்தை தீர்க்க இந்த இடத்தில் உருவாக்கிய தீர்த்தம் தான் வில்லூண்டி தீர்த்தம் என்பதையும் அறிந்து கொண்டோம்.
தொடர்ந்து நேராக கோதண்ட ராமர் கோயிலுக்குச் சென்று பகவான் ஸ்ரீராமச்சந்திரரை தரிசனம் செய்து அங்கு கோயில் வரலாறு பற்றி கேட்டு அறிந்தோம். பகவான் ஸ்ரீராமர், விபிஷனருக்கு, போருக்கு முன்பே பட்டாபிஷேகம் செய்தார் என்பதையும், அந்த இடம் இது தான் என்பதையும் அறிந்தோம். குறிப்பாக இந்த லீலையை திரு.சங்கதாரி பிரபு அவர்கள் விளக்கிய விதம், ஸ்ரீராமரின் தாராள குணத்தையும், விபிஷணருக்கு கிடைத்த பாக்கியம் பற்றியும் புரிந்து கொள்ள முடிந்தது.
தொடர்ந்து தனுஷ்கோடி, இராமநாத ஸ்வாமி தரிசனம் மற்றும் ராமர் பாதம் உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் நாம சங்கீர்த்தனத்துடன் சென்று தரிசனம் செய்தோம்.
இளைஞர்களின் உற்சாகம்
குறிப்பாக இந்த யாத்திரையில் ஒவ்வொரு இடத்தையும் தரிசனம் செய்தது மட்டுமல்லாமல் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும், அதன் லீலைகள் பற்றியும் முழுமையாக கேட்டது மாணவர்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் கோயிலுக்குச் சென்று வந்தோம் என்று இல்லாமல் நாமசங்கீர்த்தனத்துடன் ஒவ்வொரு கோயிலையும் தரிசித்தது இதயத்தில் நீங்கா இடம் பெறச் செய்தது. மேலும் அதிகாரப்பூர்வமான வரலாறு மற்றும் லீலைகளுடன் வழங்கப்பட்ட சொற்பொழிவுகளில் மிகவும் கவரப்பட்டோம். மனதை நல்வழிப்படுத்தும் இந்த சிறப்பு வகுப்புகளினால் மாணவப்பருவத்தில் பக்தியை கடைபிடிக்க வேண்டும் என்ற உறுதியும் ஏற்பட்டது.
யாத்திரையின் நிறைவாக மாணவர்கள் பலரும் யாத்ரா குறித்த தங்கள் கருத்துக்களை மகிழ்ச்சியுடன் வழங்கினர். இவற்றில் சில. . .
இந்த யாத்ரா நாட்கள் அனைத்தும் நல்ல சந்தோஷத்தை உணர்ந்தேன். பகவான் நாமத்தை பாடும் நகர சங்கீர்த்தனம் மிகவும் உற்சாகத்தை தந்தது. கிருஷ்ண பிரசாதம் மிகவும் அருமையாக இருந்தது.
– யதுநிவாஸ், மதுரை.
மாணவர்கள் யாத்ராவின் மூன்று நாட்களும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. நல்ல ஒழுக்கத்தையும், பண்பையும் கற்றுக் கொண்டேன்.
– நவீன், திருநெல்வேலி.
இஸ்கான் நடத்திய இந்த இளைஞர் நல யாத்ரா மிகவும் நன்றாக இருந்தது. இது போன்ற யாத்ராக்கள் அடிக்கடி நடத்தினால் மிவும் பயனுள்ளதாக இருக்கும். பக்தியில் நல்லதொரு உற்சாகம் அளித்தது போல் இருந்தது.
– லெக்ஷ்மி நிவாஸ், திண்டுக்கல்.
இந்த யாத்ரா அருமையாகவும், புனிதமாகவும், பக்தியாகவும் இருந்தது. திவ்ய ஸ்தலங்களின் விஜயமும், அதன் முக்கியத்துவம், பிரசாதம் இவையனைத்தும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது. ஜபம் நன்றாக செய்வதற்கு இந்த யாத்ரா உதவியாக இருந்தது.
– சேவுகராஜ், கோவை.
இளைஞர் யாத்ரா மூலம் நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டேன். மிகவும் பயனுள்ளதாகவும், நன்றாகவும் இருந்தது.
– பாண்டியராஜன், சின்னமனூர்.
இந்த யாத்ராவில், மனம் எங்கும் அலைபாயாமல் இருந்தது. சக மாணவ பக்தர்களின் சத்சங்கம் நன்றாக இருந்தது. –
– முனீஸ்வரன், திருச்செந்தூர்.
திவ்ய ஸ்தலங்களின் ஸ்தல வரலாறும், தரிசனமும் மிகவும் நன்றாக மன திருப்தியாக இருந்தது. நல்ல பல ஆன்மீக விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
– பாலமுருகன், திருவேட்டநல்லூர்.