fbpx

ஸ்ரீலபிரபுபாதாவின் சீடர் தவத்திரு.பக்தி சாரு ஸ்வாமி அவர்கள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவடி அடைந்தார்!

ஶ்ரீல பிரபுபாதாவின் நேரடி சீடரும், இஸ்கான் மூத்த சந்நியாசியுமான “தவத்திரு.பக்தி சாரு ஸ்வாமி மஹாராஜ்” அவர்கள் தனது 74வது வயதில், கடந்த ஜூலை 4ம் தேதி அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா-டீலேண்ட் எனும் இடத்தில் கிழக்கத்திய நேரப்படி     காலை 8.30 மணிக்கு  ஶ்ரீகிருஷ்ணரின் தாமரைப் பாதங்களைச் சென்றடைந்தார்.  கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்கானில் அயராது சேவை ஆற்றிய இவர் உலகளாவிய இஸ்கான் நிர்வாக அமைப்பின் கவர்னராகவும் (ஜிபிசி), தீட்சையளிக்கு ஆன்மீக குருவாகவும் திகழ்ந்தவர் ஆவார்.

நம் பாரததேசத்தின் வங்காளத்தில் 1945ல் பிறந்த பக்தி சாரு சுவாமி அவர்கள் பௌதீக கல்வி மற்றும் ஆன்மீகதேடல் இரண்டிலும் பெரிதும் ஆர்வமுடையவராக இருந்தார். கல்கத்தாவில் வளர்ந்த இவர், 1970ல் இரசாயனத்துறையில் மேற்படிப்பிற்காக  ஜெர்மன் சென்றார். அங்கு நிலவிய சூழ்நிலை, மஹாராஜ் அவர்களை இந்திய கலாச்சாரத்தின் மீதும், வேதசாஸ்திரங்களின் மீதும் திருப்பியது. 

பிறகு 1975ல் ஆன்மீக வாழ்வை தேடி இந்தியா திரும்பிய அவர், சற்றும் தாமதிக்காமல் வேத
சாஸ்திரங்கள் தொடர்பாக புத்தகங்களை அதிகம் படிக்கத் துவங்கினார்.  பிறகு தனது ஆன்மீக வாழ்விற்கு வழிகாட்டக் கூடிய ஒரு ஆன்மீக குருவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார்.   எனவே இமயமலைக்கு சென்று பல சாதுக்களை சந்தித்தார். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் தேடியும், இருப்பினும் அவரால் தான் சரணடையக் கூடிய ஒரு ஆன்மீக குருவை கண்டறிய இயலவில்லை. 

ஆன்மீக குருவை காட்டிய புத்தகம்!

பிறகு பெரும் ஏமாற்றத்துடன் தனது இல்லத்திற்கு திரும்பிய அவர், தொடர்ந்த ஆன்மீகப் புத்தகங்களை படித்து வந்தார். அச்சமயத்தில் தான் அது நடந்தது.

ஆம். அதிர்ஷ்டவசமாக, ஶ்ரீலபிரபுபாதா எழுதிய ‘பக்தி ரசாம்ருத சிந்து’ என்ற புத்தகம் அவருக்கு கிடைக்க நேரிட்டது. பக்தியின் ஆழமான நெறிகளை உடைய அப்புத்தகத்தின் முதல் இரண்டு பக்கங்களை படித்த மாத்திரத்திலேயே அவருக்கு நல்ல மாற்றம் ஏற்பட்டது. பிறகு தொடர்ந்து கவனத்துடன் படித்தார். அப்போது அவருக்கு தான் தேடிய ஆன்மீக குரு இப்புத்தகத்தில் உள்ளார் என்று   புலப்பட்டது.  அப்புத்தகத்தை எழுதிய சுவாமி பிரபுபாதாவிடம் தான், நான் சரணடைய வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார். அப்போதே தன் இதயம் கவர்ந்த ஆன்மீக குருவாக ‘ஶ்ரீலபிரபுபாதாவை’ தேர்ந்தெடுத்தார். பிறகு  எப்படியாவது ஶ்ரீலபிரபுபாதாவை சந்திக்க வேண்டும்? என்று முயற்சி செய்தார். ஆனால் அச்சமயம் ஶ்ரீலபிரபுபாதா, அமெரிக்காவில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

ஶ்ரீலபிரபுபாதா இந்தியா வரும் வரை, புனித ஸ்தலங்களை தரிசித்துவிட்டு வருவோம் என்று கிளம்பினார். அப்படி அவர் செல்கையில், முதலாவதாக ஶ்ரீசைதன்ய மஹாபிரபு அவதரித்த ஸ்தலமான ஶ்ரீதாம் மாயாப்பூருக்கு சென்றார். அங்கு தான்  இஸ்கான் ஆன்மீக தலைமையகமும் இருந்தது.

மாயாப்பூர் இஸ்கான் கோயிலுக்குள் சென்ற மஹாராஜ், அங்குள்ள இஸ்கான் பக்தர்களை, ஶ்ரீலபிரபுபாதாவின் சீடர்களை பார்த்து பெரிதும் மகிழ்ச்சிடைந்தார். பிறகு அங்குள்ள பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அங்கேயே தன் வாழ்வை அர்ப்பணிக்கத் தயாரானார்.

அப்போது 1976. மஹாராஜ்க்கு வயது 31. (அப்போது இஸ்கானில் சேர்ந்தவர் தான், கடைசி மூச்சு வரை ஶ்ரீலபிரபுபாதாவிற்காகவும், கிருஷ்ணருக்காகவும் தனது சேவையை அர்ப்பணித்தார்)

ஶ்ரீல பிரபுபாதாவுடன் முதல் சந்திப்பு

பிறகு 1977 ஜனவரியில் ஶ்ரீல பிரபுபாதா இந்தியா திரும்பினார். அப்போது மஹாராஜ் அவர்கள் பிரபுபாதாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  முதல் சந்திப்பிலேயே ஶ்ரீல பிரபுபாதா தனது புத்தகங்களை வங்காள மொழியில் மொழி பெயர்க்கும் சேவையை கொடுத்ததோடு தனது இந்திய அலுவல்களுக்கான தனது உதவியாளராக மகாராஜை நியமித்தார். பிறகு ஓரிரு மாதங்களில் வந்த கௌர்பூர்ணிமா அன்று  மஹாராஜிற்கு  முதல் மற்றும் இரண்டாம் தீட்சையை ஒரே நேரத்தில் வழங்கினார் பிரபுபாதா. தீட்சைக்கு பிறகு மஹாராஜ் மேலும் உற்சாக தனது சேவையை தொடர்ந்தார். இவரது பக்தியையும், திடமான நம்பிக்கையையும் பார்த்த பிரபுபாதா, வெகு சீக்கிரமே சந்நியாச தீட்சையும் வழங்கினார்.  ஆறே மாதங்களில் நிகழ்ந்த இந்த தீட்சை அளிக்கும் சம்பவங்கள் மகாராஜிற்கு ஶ்ரீல பிரபுபாதாவின் ஆசீர்வாதம் பூரணமாக இருப்பதை உணர்த்தியது.

அதிலும் முக்கியமாக 1977ல் நவம்பர் மாதம் ஶ்ரீலபிரபுபாதா திருசமாதி அடையும் வரையிலும், மஹாராஜ் அவர்கள் கூடவே இருந்து பிரபுபாதாவிற்கு அளப்பெரும் தொண்டாற்றினார். 

பிறகு 1988ல் ஜிபிசி சேர்மன் உள்ளிட்ட பல பொறுப்புமிக்க சேவைகளை செய்தவாறு, கிருஷ்ண பக்தி பிரச்சாரம் செய்து வந்தார்.

வங்காளமொழியில் புத்தங்கள்

இதற்கிடையில் ஶ்ரீல பிரபுபாதா தனது முதல் சந்திப்பில் தனக்கு வழங்கிய பொறுப்பான வங்காள மொழியில் ஶ்ரீல பிரபுபாதாவின் புத்தகங்களை மொழிபெயர்க்கும் சேவையையும் செய்தார். இதில் பகவத்கீதை, ஶ்ரீமத் பாகவதம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பிரபுபாதா புத்தகங்களை வங்காள மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டார். 

ஶ்ரீலபிரபுபாதா மீது இவர் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தும் வண்ணம், 1996ல் ஶ்ரீலபிரபுபாதாவின் வாழ்க்கை சரிதத்தை ‘அபய் சரண்’ என்ற பெயரில் ஒரு டிவி சீரியலாக தயாரித்தார். மிகவும் பிரபலமான இத்தொடர் இந்திய தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

இனிமையான கீர்த்தனைகள்

இவரது ஆன்மீகச் சொற்பொழிவுகளும், நாமசங்கீர்த்தனமும் மிகவும் பிரசித்தி பெற்றும். குறிப்பாக இவர் பாடும் கிருஷ்ண பக்தி பாடல்கள் கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும், இதயத்தில் கிருஷ்ணரை நினைக்க செய்யுமாறும் இருக்கும். https://www.bhakticharuswami.com/category/bhajan-kirtan/

2017ல் தென்தமிழக விஜயத்தின் போது, மதுரை இஸ்கான் ஶ்ரீஶ்ரீராதாமதுராபதி திருக்கோயிலில் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மஹாராஜ் அவர்கள் கஜேந்திர மோட்ச பாடல் ஒன்றை பாடினார். அச்சமயம் பக்தர்கள் அனைவரும் தன்னிலை மறந்து பகவானின் சிந்தனையில் ஆழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 இஸ்கான் உஜ்ஜைன்

2004ல் மத்திய பிரதேச முதல் மந்திரி இவரை அழைத்து, கிருஷ்ணர் குருகுலம் பயின்ற இடமான உஜ்ஜைனில் ஒரு கோயிலை கட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் உஜ்ஜைனில் ஓர்
சிறப்புவாய்ந்த இஸ்கான் கோவில் ஒன்றை கட்டினார்.

மேலும் அமெரிக்கா, ஐரோப்பா,  ஆப்பிரிக்கா,  ஆஸ்திரேலியா என்று  உலகம் முழுமுவதும் பிரயாணம் செய்து கிருஷ்ண பக்தி நிகழ்ச்சிகளை நடத்தி  மக்களுக்கு நல்வழிகாட்டினார்.  இவரது சேவையை பாராட்டி, 2016ல் ஐநாவின்  சமூக சபை, உலக அமைதி மற்றும் சமுதாய, தேசங்களுக்கிடையில் ஆன்மீக செய்தியை பரப்பும் பணிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பக்தி சாரு
சுவாமிகளுக்கு மரியாதை வழங்கி கௌரவித்தது.

கடைசி மூச்சு வரை பிரச்சாரம்

இப்படி தன்னலம் கருதாது,  கிருஷ்ண பக்தி
சேவைக்காக உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டிருந்த போது தான், மஹாராஜ் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிய நேர்ந்தார். கடைசியில்  இஸ்கான் உஜ்ஜைனில் தான் வழங்கிய கிருஷ்ண பக்தி உரை ஒன்றில் மஹாராஜ் அவர்கள், “படைத்தளபதி என்றால் போருக்கு முன்னால் நிற்க வேண்டும். அது போல் ஒரு ஆன்மீகத் தலைவர், எல்லா இடங்களுக்கும் சென்று பகவானை பற்றி பிரச்சாரம் செய்வதில் முன்மாதிரியாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். அதே போல் அவர் வாழ்ந்தும் காட்டி விட்டார். தனது கடைசி மூச்சையும், கிருஷ்ணருக்காக அர்ப்பணித்து விட்டார்.

தவத்திரு.பக்தி சாரு சுவாமிகள், தனது சேவையில் கொண்டிருந்த உறுதியையும், ஶ்ரீலபிரபுபாதாவிடம் வைத்திருந்த நம்பிக்கையுைம் நாம் நினைவில் கூர்ந்து அவரது அடிச்சுவடுகளை பின்பற்ற முயற்சிப்போம். மேலும் அவருக்கு நாம் இதயப் பூர்வமான அஞ்சலி செலுத்தி அவரது கருணையை பெற்று பக்தியில் நிலைக்க பிரார்த்திப்போமாக.

 மஹாராஜ் அவர்களால் மிகவும்  நேசிக்கப்பட்ட பிரபுபாதாவின் அறிவுரையானது, “உங்களுக்கு என்மேல் உள்ள அன்பை நான் சென்ற பிறகு நீங்கள் உங்களுக்குள் ஒத்துழைப்போடு செயல்படுவதன் மூலம் காட்டுங்கள்” என்பதே ஆகும். தற்போது மஹராஜின் பிரிவில் நாம் இந்த அறிவுரையை இதயப்பூர்வமாக எடுத்து நமது அர்ப்பணிப்பை இஸ்கானுக்கும், மேலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பிலும் உறுதிப்படுத்துவோமாக.

மஹாராஜ் அவர்களின் தெய்வகீ சரீரம், விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டு இஸ்கான் மாயாப்பூரில் உள்ள ஶ்ரீலபிரபுபாதாவின் புஷ்ப சமாதி அருகே திருசமாதி செய்யப்பட்டது. இவரது இறுதிச்சடங்கு வீடியோ ஆன்லைனில் பதியப்பட்டுள்ளது.
https://www.facebook.com/ISKCON.Madurai/

* * *